புதிய பேட்டரி தொழில்நுட்பத்துடன் 2024-ல் வருகிறது ஆப்பிள் கார்
22 Dec,2020
ஆப்பிள் நிறுவனம் டைட்டன் திட்டம் என்ற பெயரில் தனித்துவமான பேட்டரி தொழில்நுட்பத்துடன் 2024-ல் தானியங்கி மின்சார காரை விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.
பெட்ரோலிய எரிபொருட்களின் தட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக மின்சார வாகனங்களின் சந்தை வளர்ந்து வருகிறது. அமெரிக்காவில் எலான் மஸ்க்கின் டெஸ்லா மின்சார கார் நிறுவனம் லாபகரமாக இயங்கி வருகிறது. தற்போது ஆப்பிள் தனது சொந்த காரை 2024-ம் ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. புதிய பேட்டரி தொழில்நுட்பத்துடன் வரப்போகும் இக்கார் இத்துறையின் அடுத்த கட்டமாக இருக்கும் என கூறுகின்றனர். மின்சார வாகனங்களை பொறுத்த வரை பேட்டரிகள் தான் அதிகம் செலவு வைக்கக்கூடியவையாக உள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் மோனோ செல் தொழில்நுட்பம் அதனை குறைக்கும். அதன் மூலம் செலவு குறையும், நீண்ட தூரம் பயணிக்க முடியும் என்கின்றனர்.
ஆப்பிள் காரின் திட்டம் அந்நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் பிரிவு துணை தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர் முன்னதாக கூகுள் தேடுபொறியின் செயற்கை நுண்ணறிவு பிரிவுக்கு தலைவராக இருந்தவர். ஆப்பிளின் சி.இ.ஓ., டிம் குக் இந்த கார் திட்டத்தை செயற்கை நுண்ணறிவின் தாய் திட்டம் என அழைக்கிறார். ஆப்பிளின் கார் வெளிவரும் போது அது முதன்முதலில் ஆப்பிள் போனை பார்த்தது போன்ற அனுபவத்தை தரும் என ஊழியர்கள் கூறியுள்ளனர்.