கிருமியை கீழே தள்ளும் காற்றுத் திரை!
17 Jul,2020
குளிரூட்டப்பட்ட அங்காடிகளின் வாசலில், துாசி துரும்பு உள்ளே வராமலிருக்க, காற்றுத் திரை அமைத்திருப்பர். அதை கடந்து செல்வோருக்கு தலை முடியைக் கலைக்கும் அளவுக்கு காற்று சீறிப் பாயும். இதே உத்தியை, இப்போது விமானத்தில் ஒவ்வொரு பயணிக்கும் பயன்படுத்தலாம் என்கிறது அமெரிக்காவை சேர்ந்த, 'டீக்' என்ற புதுமைகளை உருவாக்கும் நிறுவனம்.
தொழில்முறை பயணியர், சுற்றுலாவாசிகளை சுமந்து சென்று, பொருளாதாரத்தை இயக்கக் கூடியவை விமானம் மற்றும் ரயில் சேவைகள்.இச்சேவைகளை நடத்துவோர், தங்கள் பயணியருக்கு கொரோனா தொற்றினை தவிர்க்க பலவித உத்திகளை கடைப்பிடிக்க திட்டமிட்டு வருகின்றனர்.
அவற்றில், நடைமுறைக்கு ஒத்துவரக்கூடியதாக காற்றுத் திரை உத்தியை சொல்லலாம். இந்த 'ஏர் கர்ட்டன்' கருவியை, முப்பரிமாண அச்சியந்திரத்தில் ஒரே கருவியாக வார்த்தெடுத்து, பயணியரின் தலைக்கு மேல் பொருத்திவிடவேண்டும்.
அதிலிருந்து தொடர்ந்து பாயும், வேகமான காற்று, ஒவ்வொரு பயணி தும்மினாலோ, இருமினாலோ வெளிவரும் கிருமிகளை, அவர்களை சுற்றியுள்ள இடத்திற்குள்ளேயே, கீழ்நோக்கி தள்ளிவிடும் என்பதால், அருகே இருப்போருக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு குறையும்.தற்போது, டீக் நிறுவனம் உருவாக்கிய இந்த மாதிரி கருவி, விரைவில் ரயில், விமான சேவைகளில் பார்க்கலாம்.