அமெரிக்க ஜிபிஎஸ் வேண்டாம்; நேவிகேஷனுக்கு செயற்கைக்கோளை ஏவியது சீனா
24 Jun,2020
உலக அளவில் அதிகப்படியானோரால் பயன்படுத்தப்படும் அமெரிக்க அரசுக்கு சொந்தமான ஜி.பி.எஸ்.,க்கு (GPS) மாற்றாக, தங்களது சொந்த நேவிகேஷன் அமைப்பை உருவாக்கும் செயற்கைக்கோள்களைச் சீனா வெற்றிகரமாக ஏவியுள்ளது.
உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விரிசலை அதிகரித்துள்ளது. வர்த்தகம், ஹாங்காங் குறித்த பிரச்சனைகளும் எழுந்துள்ள நிலையில், சீனா தனது 'பெய்டோ-3 நேவிகேஷன்' அமைப்புக்காக தயாரிக்கப்பட்ட, 35வது செயற்கைக்கோளையும் வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
உலகளவில் நேவிகேஷன் தகவல்களை வழங்கும் 'பெய்டோ-3 நேவிகேஷன்' அமைப்புக்காக, இதுவரை, 10 மில்லியன் டாலர்களைச் சீனா செலவழித்துள்ளது. இந்த திட்டத்தின் வெற்றி மூலம், இனி அமெரிக்க அரசுக்குச் சொந்தமான ஜி.பி.எஸ்., அமைப்பைச் சீனா சார்ந்திருக்க வேண்டிய தேவை இருக்காது.
2000ம் ஆண்டு முதல்...
பெய்டோ நேவிகேஷன் அமைப்பிற்காக முதல் செயற்கைக்கோள் 2000ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. பெய்டோ நேவிகேஷன் பதிப்பு 2000ம் ஆண்டு சீனாவிற்குள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. 2012ல், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 'பிக் டிப்பர்' எனும் பெயரில், இந்த நேவிகேஷன் அமைப்பு அறிமுகமானது. தற்போது 2020ல் உலகம் முழுக்க இதன் சேவையை விரிவுப்படுத்தும் பணியைச் சீனா செய்து முடித்துள்ளது. முதன் முதலில் ராணுவப் பணிகளுக்காக மட்டுமே இந்த பெய்டோ நேவிகேஷன் திட்டத்தைச் சீனா துவங்கியது. அதன்பின், இதை வணிக ரீதியாகவும் பயன்படுத்தத் துவங்கியுள்ளது.
அமெரிக்காவின் ஜி.பி.ஸ்,, ரஷ்யாவின் குளோனாஸ், ஐரோப்பிய கலிலியோ சிஸ்டம்ஸ் என, மூன்று நேவிகேஷன் அமைப்பு உலகில் இருந்து வரும் நிலையில், தற்போது சீனாவின் பெய்டோ நேவிகேஷன் சேடிலைட் சிஸ்டம்சும்(பி.டி.எஸ்.,) இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சிகளுக்குப் போட்டியாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.