கொரோனா நோயாளிகளுக்கு ‘ரிமோட்’ வென்டிலேட்டர் : போலந்து விஞ்ஞானிகள் அசத்தல்
11 Jun,2020
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப்பணியாளர்கள் அத்தனை பேரும் மகோன்னதமான சேவையை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
தங்கள் உயிரை அவர்கள் ஒவ்வொருவரும் பணயம் வைத்துத்தான் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். என்னதான் பி.பி.இ. என்று சொல்லப்படுகிற சுய பாதுகாப்பு கவசங்கள் அத்தனையையும் அவர்கள் அணிந்து கொண்டு பணியாற்றினாலும்கூட கொரோனா வைரஸ் அவர்களை 100 சதவீதம் தொற்றாது என்பதற்கு எந்த ஆதாரமும் இருப்பதாக தெரியவில்லை.
கொரோனா நோயாளிகளுக்கு முன்நின்று சிகிச்சை அளித்து வந்த பல டாக்டர்களை, நர்சுகளை இதே கொரோனா தொற்றுக்கு இழந்து இருக்கிறோம்.
கொரோனா வைரஸ் தொற்று தாக்குதல் தீவிரமாக இருக்கிறபோது, அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது சாமானியமானது அல்ல. சிங்கத்தின் வாயில் இருந்து சர்க்கஸ் காட்டுவது போல அது ஆபத்தானதாக இருக்கிறது.
இந்த நிலையில் தீவிரமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிற டாக்டர்களுக்கு ஒரு அற்புதமான சாதனத்தை போலந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தி இருக்கிறார்கள்.
அதுதான் ‘ரிமோட் வென்டிலேட்டர்’.
எங்கோ தொலைவில் இருந்து கொண்டு இதை டாக்டர்கள் இயக்க முடியும்.
மிக மோசமான நிலையில் இருந்துகொண்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிற கொரோனா நோயாளிகள் சுவாசிப்பதற்கு இது பேருதவியாக இருக்கும்.
இப்படி ஆபத்தான கட்டத்தில் இருந்து சிகிச்சை பெறுகிற கொரோனா நோயாளியின் அருகாமையில் செல்லாமல் அவர்களை இயல்பாக சுவாசிக்க வைக்க டாக்டர்களுக்கு இது அற்புதமான வரம் என்றே சொல்ல முடியும்.
இந்த ரிமோட் வென்டிலேட்டருக்கு பெயர், ‘ரெஸ்பிசேவ்’ என்பதாகும்.
இது எப்படி நோயாளிகளின் சுவாசத்தை காப்பாற்றுகிறதோ, அதே போல மருத்துவ பணியாளர்களையும் தொற்றில் இருந்து காக்கும். இதை லெஸ்செக் கோவலிக் நிறுவனம் தயாரித்து அளிக்கும்.
இந்த ரிமோட் வென்டிலேட்டர் சோதனை, மனிதர்களில் பாதுகாப்பாக செயல்படுவதை காட்ட முடிந்தால், டாக்டர்கள் நோயாளிகளின் சுவாசத்தை, செயல்பாடுகளை ஒரு செயலியின் மூலம் கண்காணிக்க முடியும்.
வென்டிலேட்டரின் செயல்பாடுகளை ஆஸ்பத்திரியின் எந்த மூலையில் இருந்து கொண்டும் டாக்டர்கள் மாற்ற முடியும்.
வென்டிலேட்டர்கள் துண்டிக்கப்பட்டுவிட்டாலோ, நோயாளியின் நிலையில் அதிரடியாக ஒரு மாற்றம் ஏற்பட்டாலோ அது டாக்டர்களுக்கு அறிவிக்கப்பட்டு விடும்.
பொதுவாக கொரோனா நோயாளிகளுக்கு சுவாச கோளாறு என்பது இயல்பாக நேரிடக்கூடியதுதான். மோசமான நிலையில் இருக்கிறபோது, அவர்களுக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்க வேண்டியதாகிறது.
இந்த வென்டிலேட்டரின் சிறப்பம்சம் பற்றி இந்த திட்டத்தின் ஆலோசகராக செயல்பட்ட லூகாஸ் சார்பாக் கூறும்போது, கொரோனா நோயாளிகளிடம் மருத்துவ பணியாளர்கள் குறைவாக தொடர்பு கொண்டால் போதுமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
மேலும், ரெஸ்பிசேவ், ஒரு வழக்கமான வென்டிலேட்டரை விட குறைவான விலையில் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகளவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில் வென்டிலேட்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்த தட்டுப்பாட்டை இது போக்கும் நிலை வரும்.
இதன் தொழில்நுட்பம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் இது போலந்தில் நோயாளிகள் பயன்பாட்டுக்கு கிடைத்து விடும். அதன்பின்னர் அது உலகளாவிய சந்தைக்கு வரும் என்கிறார்கள், அதன் வடிவமைப்பாளர்கள்.