வாட்ச் மாடல்களில் இரத்த அழுத்தத்தை டிராக்
24 Apr,2020
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் மாடல்களில் பயனர்கள் தங்களின் இரத்த அழுத்தத்தை டிராக் செய்யும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. சாம்சங் ஹெல்த் மாணிட்டர் செயலி முதற்கட்டமாக கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 மாடலில் வெளியிடப்படுகிறது. இதிலுள்ள இதய துடிப்பு சென்சார்களை கொண்டு இரத்த அழுத்தம் டிராக் செய்யப்படுகிறது.
செயலியை வெளியிட சாம்சங் நிறுவனம் முதலில் தென் கொரிய உணவு மற்றும் மருத்துவ பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து மென்பொருளை மருத்துவ சாதனமாக அனுமதி பெற வேண்டும். இதை கொண்டு செயலியை அரசு அனுமதி பெற்ற இரத்த அழுத்தத்தை டிராக் செய்யும் மென்பொருளாக வெளியிட முடியும்.
இதை பயன்படுத்த பயனர் முதலில் சென்சாரை வழக்கமான இரத்த அழுத்த சோதனை செய்யும் சாதனத்துடன் பொருத்த வேண்டும். பின் ஒவ்வொரு முறை இரத்த அழுத்தத்தை டிராக் செய்ய, வாட்ச் இதய துடிப்பு சென்சார் வழங்கும் தகவல்களை கொண்டு இரத்த அழுத்தத்தை கணக்கிடும்.
இரத்த அழுத்த விவரங்கள் சரியானதாக இருக்க ஒவ்வொரு நான்கு வாரத்திற்கு ஒருமுறை சென்சாரில் தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் என சாம்சங் தெரிவித்துள்ளது. புதிய செயலி இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.