4 பேருடன் குழுவாக வீடியோ கால்: வாட்ஸ்ஆப் புது வசதி
18 Apr,2020
ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியுள்ள மக்கள், தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் ஒரே நேரத்தில் 4 பேர் வரை வீடியோ கால் பேசும் வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கவும், சமூக விலகலை பின்பற்றவும் பல நாடுகள் ஊரடங்கினை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதனால், வீட்டிலேயே முடங்கியுள்ள மக்கள், தங்களின் மனம் நிறைந்தவர்களை காண முடியாமலும், பேச முடியாமலும் தவித்து வருகின்றனர். அதேபோல், வீட்டில் இருந்து பணியாற்றி வருபவர்களிடம், அலுவலக பணி குறித்து அதிகாரிகள் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனை போக்க வாட்ஸ்ஆப் செயலியில் இனி 4 பேர் வரை ஒரே நேரத்தில் வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் பீட்டா இணையத்தில் இது குறித்து தகவல் பகிரப்பட்டுள்ளது. மேலும், இந்த வசதியை அறிமுகப்படுத்தப்பட்டால், வாட்ஸ்ஆப் பதிப்பை புதுப்பித்துள்ள நபர்களை மட்டுமே குழுவாக இணைத்து வீடியோ கால் அல்லது வாய்ஸ் காலில் தொடர்பு கொள்ள முடியும். முதலில் பீட்டா பயனர்களுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர், படிபடியாக அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதில், அதிகபட்சம் 4 பேர் வரை ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இன்னும் எண்ணிக்கை தொடர்பான தகவல் வெளியாகவில்லை. பேஸ்புக் மெசஞ்சர் மூலம் குழுவாக வீடியோ அழைப்பு மேற்கொள்ளும் எண்ணிக்கை வழக்கத்தை விட தற்போது 70 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.