இனி ஒருவருக்கு மட்டுமே ‛பார்வர்டு': வாட்ஸ்ஆப் புதிய கட்டுப்பாடு
07 Apr,2020
புதுடில்லி: கொரோனா குறித்து பொய்யான செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில் வாட்ஸ்ஆப் செயலியில் ஒருவருக்கு மட்டுமே ‛பார்வர்டு' செய்யும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நண்பர்கள், உறவினர்கள் என யாரிடமும் தகவல்களை பரிமாறிக்கொள்ள உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலியில், பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், போலி செய்திகள் அதிகம் பகிரப்படுவதை தடுக்கும் வகையில், ஒரு செய்தியை ஒருநேரத்தில் அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே பார்வர்டு செய்யும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதன்மூலம் பொய்யான தகவல்கள் அதிகளவு பகிரப்படுவது ஓரளவு தவிர்க்கப்பட்டது. ஆனாலும், ஒரே தரவினை, ஐந்து, ஐந்து பேருக்கு என தனித்தனியாக பார்வர்டு செய்ய முடிந்தது.
இந்நிலையில், உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், பார்வர்டு வசதியில் மேலும் கட்டுப்பாடுகளை வாட்ஸ்ஆப் விதித்துள்ளது. இதன்படி, ஒரு குறிப்பிட்ட தரவு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முறை பார்வர்டு செய்யப்பட்டிருந்தால், அதன்பின், ஒருவருக்கு மட்டுமே ‛பார்வர்டு' செய்ய முடியும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொய்யான தகவல்கள் பலருக்கு பரப்பப்படும் அபாயம் குறையும் என நம்பப்படுகிறது.