அரிய பல தகவல்களை தன்னகத்தே பொதித்து வைத்திருக்கும் நவீன உலகின் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா நிதி நெருக்கடியால் தள்ளாட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
வரலாற்று காலத்தில் நமது வாழ்நாளுக்கு முற்பட்ட நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை பற்றிய அரிய தொகுப்புகள் ‘என்சைக்லோப்பீடியா’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் புத்தக தொகுப்புகளாக முன்னர் வெளிவந்தன.
ஆங்கில எழுத்துகளின் அகரவரிசைப்படி பல்வேறு தொகுப்புகளாக வெளியான இந்த புத்தகங்களின் மூலம் நாம் அறிய விரும்பிய தகவல்களை எல்லாம் விளக்கப்படங்களுடன் தெரிந்துகொள்ள முடிந்தது.
ஆனால், இந்த புத்தகங்கள் ஒவ்வொன்றும் பலநூறு பக்கங்களை கொண்டதாகவும் முழு தொகுப்பும் பல்லாயிரம் ரூபாய் விலையிலும் இருந்ததால் ஏழை-எளியவர்களால் இவற்றை வாங்கி பயனடைய இயலாத நிலை இருந்தது.
எனினும், மாவட்ட அரசு தலைமை நூலகங்களில் ‘குறிப்புதவி நூல்கள்’ என்ற பகுதியில் இவை வைக்கப்பட்டிருந்தன. நம்மால் இந்த புத்தகங்களை சொந்தமாக்கி கொள்ள இயலாமல் போனாலும் தேவையான குறிப்புகளை பெற ‘என்சைக்லோப்பீடியா’ தொகுப்புகள் உறுதுணையாக அமைந்தன.
சில ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளாக வெளியாகும் ‘என்சைக்லோப்பீடியா’ புத்தகங்களில் முந்தைய பதிப்புக்கு பிறகு நடைபெற்ற மேலும் பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
நாளடைவில் உலகளாவிய அளவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி அபாரமான வளர்ச்சியை அடைந்தது. கம்ப்யூட்டர், மின்னணு எழுத்தியல் முறை அதிகரித்தது. இன்டர்நெட் எனப்படும் இணையத்தளத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாத அம்சமாக மாறியது.
எழுத்துகளாக அச்சுக்கோர்த்து, மையால் காகிதத்தில் அச்சிட்டு புத்தகமாக தயாரித்து விற்பனை செய்த காலம் மாறி, இணையத்தின் வழியாக மின்னணு முறையில் கம்ப்யூட்டரில் புத்தகங்களின் பக்கங்களை காணும் நிலை உருவானது.
இப்படி சில தகவல்கள் பல இடங்களில் பரவிக்கிடக்கும் நிலையை மாற்றி அனைத்து தகவல்களையும் கலைக்களஞ்சியமாக ஒரே இடத்தில்
குவியலாக படைக்கும் எண்ணம் அமெரிக்காவை சேர்ந்த ஜிம்மி வேல்ஸ் என்பவருக்கு தோன்றியது.
இதன் விளைவாக ‘என்சைக்லோப்பீடியா’ புத்தகத் தொகுப்புகளைப்போல் இணையத்தளத்தின் வாயிலாக ஓர் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கினார். ’விக்கிப்பீடியா’ என்ற பெயருடன் 15-1-2001 அன்று துவக்கப்பட்ட இந்த இணையவழி அறிவுச்சேவைக்கு இன்று வயது 18.
தற்போது அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள ’விக்கிப்பீடியா’ நிறுவனத்தின் படைப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் பிரதான ஆசிரியர்கள் என்று எவரும் இல்லை.
உலகின் பல்வேறு விவகாரங்கள் மற்றும் பிரபலங்கள், முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்புகளை தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து இந்த ’விக்கிப்பீடியா’ இணையப்பக்கத்தில் தனித்தனி தலைப்புடன் பதிவு செய்கின்றனர்.
குறிப்பாக, இணையத்தளத்தில் நரேந்திர மோடி என்று தேடினால் முதலில் அவரது பெயரிலான 'விக்கிப்பீடியா’ பக்கத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். இப்படி உலகளாவிய அளவில் பல வரலாறுகளும் சம்பவங்களும் தனிநபர்கள் பற்றிய குறிப்புகளும் விக்கிப்பீடியாவில் பொதிந்துள்ளன.
பெரும்பாலும் முதலில் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்படும் இதுபோன்ற தரவுகளை பிறநாட்டினர் தங்களது தாய்மொழியில் மீள்பதிவிடுகின்றனர். இந்தியாவிலும் அனைத்து மாநில மொழிகளிலும் பல 'விக்கிப்பீடியா’ தகவல்கள் காணக் கிடைக்கின்றன.
அவற்றில் சில திருத்தங்களையும் பலர் சுட்டிக் காட்டுவதுண்டு. பின்னர், அவை நிவர்த்திக்கப்படும். இப்படி பல தனிநபர்கள் தாமாகவே முன்வந்து சம்பளம் ஏதுமின்றி பதிவிடும் தகவல்களை தொகுப்பாக திரட்டி வைக்கும் பணியை 'விக்கிப்பீடியா’ நிர்வாகம் செய்து வருகிறது. இந்த தகவல் திரட்டுகளை எல்லாம் பாதுகாப்பதற்காக ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகளை விலைகொடுத்து பெறுவதற்கும், தகவல் திரட்டுகளை எல்லாம் டிஜிட்டல் கோப்புகளாக சேகரித்து, பாதுகாத்து சர்வர்களின் மூலம் பயனாளிகளுக்கு அளிப்பதற்கும் ஏராளமான பணம் தேவைப்பட்டாலும் வர்த்தக நோக்கம் ஏதுமின்றி, பயனாளிகளின் அறிவுப்பசிக்கு தேவையான அம்சங்கள் அனைத்தும் இங்கு இலவசமாகவே கிடைத்து வருகின்றன.
இதனால், உலகம் முழுவதும் பலகோடி மக்கள் பலனடைந்துள்ளனர். அன்றாடம் சிலகோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், சில தகவல்களை தேடி விக்கிப்பீடியா பக்கத்துக்கு செல்லும் வாசகர்களுக்கு அந்நிறுவனத்தின் சார்பில் ஒரு அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, சில விக்கிப்பீடியா பக்கங்களின் முகப்பில் ஒரு விண்ணப்பம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
‘இந்தியாவில் உள்ள அனைத்து வாசகர்களும் அறிவது.., விக்கிப்பீடியாவின் சுதந்திரத்தை நீங்கள் பாதுகாத்து நிலைநாட்ட ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உங்களிடமிருந்து நன்கொடைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், 99 சதவீதம் பேர் அப்படி தருவதில்லை.
இதை வாசிக்கும் அனைவரும் 150 ரூபாயாவது அன்பளிப்பாக அளித்தால்தான் இனிவரும் ஆண்டுகளுக்கு அபிவிருத்திக்கான பாதையில் விக்கிப்பீடியாவை அழைத்துச் செல்ல இயலும்.
லாபநோக்கமற்ற முறையில் இந்த விக்கிப்பீடியாவை நாங்கள் தொடங்கியபோது இதனால் ஏற்படப்போகும் பொருளிழப்பு பற்றியும் இதற்காக நீங்கள் வருத்தப்பட நேரிடும் என்றும் பலர் எச்சரித்தனர்.
ஆனால், விக்கிப்பீடியா வர்த்தகரீதியாக மாற்றப்பட்டு விட்டால் அதனால் இந்த உலகிற்கு பேரிழப்பு என்று நாங்கள் கருதினோம். ஞானத்தை விரும்பும் அனைவரையும் விக்கிப்பீடியா ஒன்றிணைத்து வருகிறது. படைப்பாளிகள், வாசகர்கள் மற்றும் சில கொடையாளர்கள் ஆகியோர் நம்மை வாழ்வித்து வருகின்றனர்.
நம்பகத்தன்மை மற்றும் நடுநிலைத்தன்மை மாறாத எண்ணற்றத் தகவல்களை இங்கு பதிவிட்டு உங்களுக்காக உழைக்கும் மக்களை உள்ளடக்கிய சமுதாயமாக திகழும் விக்கிப்பீடியா இணையத்தில் உயிர்ப்புடன் இருக்கவும் வளரவும் உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள்’ என அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரூ.150, 300, 500, 1000, 1500, 3000, 5000 அல்லது அதற்கு அதிகமான தொகையையும்கூட நன்கொடையாக அளிக்க விரும்பும் கொடையாளர்கள் பணம் செலுத்துவதற்கான வசதியும் இந்த தகவல் வந்துபோகும் பெட்டியில் இடம்பெற்றுள்ளது