கடல் பிளாஸ்டிக்கை அகற்ற புதிய தொழில்நுட்பம்
11 Oct,2019
பசுபிக் பெருங்கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் திட்டத்தில் முதல்கட்ட பணியை வெற்றிகரமாக நெதர்லாந்து விஞ்ஞானிகள் குழு முடித்துள்ளது .
நெதர்லாந்தை சேர்ந்த போயான் சால்ட் என்ற விஞ்ஞானி, 'தி ஓஷன் கிளீனப்' என்ற நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக இருக்கிறார்.
ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் முடித்துள்ள இவர், கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதற்கு 'நகரும் வளையம்' போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர் உருவாக்கிய தொழில்நுட்பத்தை சோதனை ரீதியாக இயக்கி வந்தார். தற்போது இதில் வெற்றி கண்டுள்ளார். இவரது தொழில்நுட்பம் மூலம் முதல்கட்டமாக பல டன் அளவிலான பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
இத்தொழில்நுட்பம் 'சி' வடிவில் ஒரு அரை வளையம் போல இருக்கும் இதன் நீளம் 2 ஆயிரம் அடி. பாராசூட் மூலம் இயக்கப்படுகிறது. பாரசூட் முன்னோக்கி செல்ல, இவ்வலை பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்துக்கொண்டே வரும். வாரம் ஒருமுறை கப்பல் சென்று சேகரித்த குப்பைகளை ஏற்றிச்செல்லும். வளையத்தின் மத்தியில் கடல்வாழ் உயிரினங்கள் கடந்து செல்வற்கு பத்து அடி ஆழத்துக்கு துணி உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் டன் கணக்கிலான மீன் வலைகள் முதல், பெரிய மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
முதல்கட்ட வெற்றியைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடக்க உள்ளது.