பேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி
09 Sep,2019
பேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் சுயவிவரங்கள் மற்றும் செல்போன் எண்கள் இணையதளங்களில் கசிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலும் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பேஸ்புக் பயனாட்டாளர்களாக உள்ளனர். இந்நிலையில், பேஸ்புக்கில்
உள்ள பாதுகாப்பு குறைபாடு காரணமாக அதை பயன்படுத்தும் 41 கோடி பேரின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த TechCrunch நிறுவனம் கூறியுள்ளது. பயனாளர்களின் சுய விவரங்களுடன் அவர்களது செல்போன் எண்களும் இணையத்தில் உலா வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 11 கோடி பேர் மற்றும் இங்கிலாந்து நாட்டின் 1 கோடியே 80 லட்சம் பேர் மற்றும் வியட்நாமைச் சேர்ந்த 5 கோடி பயனாளர்களின் தகவல்கள் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளது. மேலும், சில பயனாளிகளின் ஐ.டி. பெயர்கள் தொலைப் பேசி எண்ணுடன் வெளியிடப்பட்டுள்ளன. சிலவை தொலைப்பேசி எண், இருக்கும் இடம் உள்ளிட்டவைகளுடன், சிலவை முக்கியமான தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.
செல்போன் எண்கள் இணையத்தில் கசிந்துள்ளதால் பயனாளர்கள் தேவையற்ற அழைப்புகளை ஏற்கும் சிக்கலுக்கு ஆளாகி உள்ளனர். பயனாளிகளின் மொபைல் எண்களை அறிந்து கொண்டு தேவையற்ற ஸ்பாம் கால்கள், வர்த்தக அழைப்புகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.பாதுகாப்பு குறைப்பாடுகளால் தகவல்கள் திருடப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், அவை அனைத்தும் பழைய தகவல்கள் என்றும் கூறியுள்ளது. சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்சியின் ஐ.டி.யை ஹேக்கர்கள் ஹேக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.