சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது ரஷ்யாவின் மனித ரோபோ
                  
                     27 Aug,2019
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	
	சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யா கடந்த 22ம் தேதி முதல் முறையாக ஃபெடார் என்ற மனித ரோபோவை அனுப்பியது. விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவசர காலங்களில் உதவி செய்வதற்காக, சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் மூலம் இந்த ரோபோ அனுப்பி வைக்கப்பட்டது.
	
	வெற்றிகரமாக புறப்பட்டுச் சென்ற விண்கலம், 24ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தின் அருகே சென்றது. ஆனால், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.
	 
	அதன்பின்னர் நேற்று அந்த கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, மீணடும் விண்வெளி நிலையத்துடன் விண்கலம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. அதிலிருந்த மனித ரோபோ விண்வெளி நிலையத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது. மனித ரோபோ விண்வெளி நிலையத்தை அடைந்திருப்பதாக நாசா இன்று உறுதி செய்துள்ளது.
	ஸ்கைபோட் எஃப் 850 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ள இந்த ரோபோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவி செய்ய உள்ளது. அத்துடன், அந்த ரோபோவின் செயல் திறனும் பரிசோதனை செய்யப்படும்.
	இதே போன்று 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, ரோபோனாட்-2 என்ற மனித ரோபோவை அனுப்பியது. 2013 ஆம் ஆண்டு ஜப்பான் இதே போன்று கிரோபோ என்ற சிறிய ரோபோவை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.