இலங்கையில் முதலாவது வாகன தயாரிப்பு தொழிற்சாலை நாளை வெலிப்பென்னவில்
17 Aug,2019
இந்தியாவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் இலங்கையின் ஐடியல் நிறுவனத்துடன் இணைந்து மஹிந்திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயாரிப்பு தொழிற்சாலையை இலங்கையில் முதல் முறையாக ஆரம்பிக்கவுள்ளது.
மத்துகம வெலிப்பென்ன என்ற இடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த தொழிற்சாலையின் அதிகாரபூர்வ செயற்பாடுகள் நாளை 17ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதாக ஐடியல் நிறுவன ஸ்தாபகரும் தலைவருமான நளின்வெல்கம தெரிவித்தார்.
ஐடியல் நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, வெலிப்பென்ன பகுதியில் 65 ஏக்கர் நிலப்பரப்பில் 7 ஏக்கரில் வாகன உற்பத்தி தொழிற்சாலையின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த வாகன தயாரிப்பு தொழிற்சாலைக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்" என பெயரிடப்பட்டுள்ளதாகவும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இத்திட்டம் பெரிதும் உதவும். எனவே முதலில் நாடு முன்னேற்றமடைய வேண்டும். அதன் பின்னர் நாமும் வளம் பெறக்கூடியதாக இருக்கும் என்றார்.
உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமொன்று முதல் முறையாக இலங்கையில் நேரடியாக முதலீடு செய்துள்ளது. இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக இலங்கையில் மஹிந்திரா நிறுவனம் முதலீடு செய்துள்ளது. எனவே வாகன இறக்குமதி விடயத்தில் இனி இலங்கை வெளிநாட்டு நிறுவனங்களை நம்பியிருக்க வேண்டியதில்லை என்று நளின் வெல்கம மேலும் கூறினார்.
இந்தியாவில் 2016இல் தயாரிக்கப்பட்ட மஹிந்திரா முருஏ 100 100 என்ற ரக வாகனத்துடன் தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகவுள்ளது. இந்த ரக வாகனங்கள் இந்தியாவில் மட்டும் ஒரு இலட்சத்திற்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று 40 ஆயிரம் வாகனங்களை வருடமொன்றுக்கு இலங்கையில் தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.