பேஸ்புக்கிடமிருந்து தமிழருக்கு 20 இலட்சம் ரூபா வெகுமதி
22 Jul,2019
இன்ஸ்டாகிராம் செயலியிலுள்ள குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு பேஸ்புக் நிறுவனம் 20 இலட்சம் இந்திய ரூபாய்களை வெகுமதியாக வழங்கியுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், கூகுள் போன்ற சமூகவலைத்தளங்களில் நாம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விடயங்கள் மற்றும் எமது சுயவிபரங்கள் அனைத்தும் தற்போது திருடன் கையில் கொடுத்த சாவி போன்று ஆகிவிட்டது.
இதன் மூலம் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலே பொதுவெளியில் வெளியாகும் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
இந்த செயலிகளிலுள்ள பாதுகாப்பு குறைபாடுகள் ஒருவரின் கணக்கை ஹேக்கிங் செய்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியிலுள்ள இது போன்ற ஒரு குறைபாட்டை தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளரான லக்ஷ்மன் முத்தையாவை கண்டறிந்துள்ளார்.
இவரது கண்டுபிடிப்பு என்னவென்றால், ஏனைய சமூக ஊடகங்களை போன்று இன்ஸ்டாகிராமிலும் மறந்து போன கடவுச் சொல்லை மாற்றியமைப்பதற்கான வழி உள்ளது.
அதாவது, உங்களது பயனர் பெயரை பதிவிட்டு, அதோடு பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு சரிபார்ப்பு எண்ணை பெற்று, அதை உள்ளீடு செய்வதன் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியும்.
இந்த வழியிலுள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி எந்த இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கையும் ஹேக் செய்ய முடியும் என்பதை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இவரின் இந்த கண்டுபிடிப்பை பாராட்டி ஃபேஸ்புக் நிறுவனம் 30,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய்) வெகுமதியாக வழங்கியுள்ளது.
ஏற்கனவே 30 க்கும் மேற்பட்ட முறைகள் குறைபாடுகளை கண்டுபிடித்து ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற வெகுமதிகளைப் பெற்றுள்ளார் லக்ஷ்மன் என்பது குறிப்பிடத்தக்கது.
இக் குறைப்பாட்டை எப்படி ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு விளக்கினார் என்பது பற்றி லக்ஷ்மன் கீழ்வருமாறு பகிர்ந்துள்ளார்.
ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனது கணக்கில் உள்நுழைவதற்கான கடவுச்சொல்லை மறந்துவிட்டு, புதிய கடவுச்சொல்லுக்காக வேண்டுகோள் விடுக்கும் போது உங்களது தொலைபேசிக்கு ஆறு எண்கள் கொண்ட குறுஞ்செய்தி பாதுகாப்பு சரிபார்ப்புக்காக அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்வதன் மூலம் நீங்கள் புதிய கடவுச்சொல்லை ஏற்படுத்தி உங்களது கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியும்.
இவ்வாறு அனுப்பப்படும் பாதுகாப்பு சரிபார்ப்பு எண்கள் அந்நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பத்து இலட்சம் எண்ணிக்கை கொண்ட தொகுப்பிலிருந்து எடுத்தாளப்படுகிறது.
இதில் ஒரு குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் பயனரின் அலைபேசி எண்ணுக்கு அந்த பத்து லட்சம் தொகுப்பிலிருந்து எந்த எண்கள் சரிபார்ப்புக்காக அனுப்பப்படுகிறது என்பதை கண்டறிவதன் மூலம் அந்த கணக்கை ஹேக் செய்ய முடியும். இது சாத்தியமா? என்று தானே நினைக்கின்றீர்கள். ஆம் இதனை கண்டறிந்ததுடன் இதற்காக 1,000 மைக்ரோ கணினிகளை பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரண்டு லட்சம் எண்களை உள்ளீடு செய்து செயல்முறையிலும் நிரூபித்துள்ளார் லக்ஷ்மன் முத்தையா.
ஒரே ஐபி முகவரியில் இருந்து நூற்றுக்கும் குறைவான தவறான கடவுச்சொல்லை உள்ளீடு செய்தாலே இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு ஆனால், இதுவே வேறுபட்ட ஐபி முகவரியிலிருந்து ஒரே இன்ஸ்டாகிராம் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற முயற்சித்தால் அதை தடுக்கும் தற்காப்பு அமைப்பு இன்ஸ்டாகிராமிடம் இல்லை என்பதையே இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் முத்தையா.
இதனை அடுத்து "தொழிற் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது மட்டுமின்றி, கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலுள்ள குறைபாட்டை கண்டறிந்து வெளிப்படுத்துவது மக்களுக்கு பலனளிக்கும் என்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, எனது பணியை உத்வேகத்துடன் தொடருவதற்கு உதவுகிறது" என்று பெருமையுடன் கூறியுள்ளார் லக்ஷ்மன் முத்தையா.