ஃபேஸ்புக்கில் இருந்து நிரந்தரமாக வெளியேறுங்கள் - ஆப்பிள் நிறுவனரின் எச்சரிக்கை
10 Jul,2019
உங்கள் இதயத்தின் துடிப்பைக் கூட சென்சார் மூலம் அவர்களால் தெரிந்துகொள்ள முடியும்
ஃபேஸ்புக் பாதுகாப்பில்லை என்றும் அனைவரும் அதிலிருந்து வெளியேற வேண்டுமென்றும் ஆப்பிள் நிறுவன நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஒஸ்னைக் தெரிவித்துள்ளார்
சமூக வலைத்தளம் என்றாலே அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஃபேஸ்புக். ஃபேஸ்புக் இந்திய மக்களிடம் அதிலும் குறிப்பாக இளைஞர்களிடம் பெரும் ஆதரவு பெற்றுள்ளது. ஃபேஸ்புக் அதிலிருக்கும் பயனாளர்களின் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதாக தெரிவிக்கிறது. ஆனாலும் அவ்வப்போது அதில் இருக்கும் கணக்குகளின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.
அதற்கு ஏற்ப பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக, கடந்த வருடம் புகார் எழுந்தது. தகவல்களை அனாலிட்டிக்கா நிறுவனம் திருடியதாக ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், அதற்காக மன்னிப்பும் கோரியது. அதற்கு பின்பு ஃபேஸ்புக் மீதான நம்பத்தன்மையில் சந்தேகத்துக்குரிய வகையிலேயே உள்ளது.
இந்நிலையில் ஃபேஸ்புக் பாதுகாப்பில்லை என்றும் அனைவரும் அதிலிருந்து வெளியேற வேண்டுமென்றும் ஆப்பிள் நிறுவன நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஒஸ்னைக் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ஸ்டீவ் ஒஸ்னைக்கிடம் ஃபேஸ்புக் தகவல் திருட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''ஃபேஸ்புக் தகவல் திருட்டுக்கு பிறகு நான் அந்த செயலியில் இருந்து வெளியேறிவிட்டேன். நீங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறுங்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் '' சமூக வலைதளங்களால் நன்மைகள் இருந்தாலும் அதற்கு ஈடாக நாம் நம்முடைய பிரைவசியைக் கொடுக்கிறோம். உங்கள் இதயத்தின் துடிப்பைக் கூட சென்சார் மூலம் அவர்களால் தெரிந்துகொள்ள முடியும். தனிப்பட்ட முறையில் அனுப்பும் தகவல்களையும் அவர்களால் கண்காணிக்க முடியும்.
இதையெல்லாம் தடுக்க ஒரே வழி என்னவென்றால், ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறுங்கள். இது பலருக்கும் கடினமானதாக இருக்கலாம். ஆனால் உங்களது பிரைவசியை கொடுப்பதைவிடவும் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறுவது கடினமாக இருக்காது’’ என தெரிவித்துள்ளார்.