நீங்கள் மொபைல் போன் அடிமையா? கவனம்! கொம்பு! ஆய்வில் தகவல்
22 Jun,2019
இன்றைய காலக்கட்டத்தில் தகவல் பறிமாற்றம் என்பதையும் தாண்டி, சமூக வலைதளங்கள், வங்கி பரிவர்த்தனை, கேம்ஸ் என பல உபயோகங்களுக்காகவும் மொபைல் போனை பலரும் பயன்படுத்துகின்றனர்.
தொழில் சார்ந்த முதலீட்டு பொருளாகவே மொபைல் போன் இருக்கிறது. இதனால் மொபைல் போன் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தான் இதில் அதிகம்.
இளைஞர்கள் பெரும்பாலும் குனிந்தபடியே ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறார்கள். இவ்வாறாக, குனிந்தபடியே மொபைல் போனை நீண்ட நேரம் உபயோகிப்பவர்களுக்கு உடல் வடிவில் மாற்றம் ஏற்படுவது தொடங்கி இருப்பதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, நீண்ட நேரம் மொபைல் போனை உபயோகிப்பவர்களுக்கு தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள், கூர்மையான எலும்பு ஒன்று வளர்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதுகுறித்து கூறுகையில், அதிக நேரம் குனிந்தபடியே மொபைல் போனை பயன்படுத்துவதால், தலையின் முழு எடையும் மண்டை ஓட்டின் பின்புறம் செல்கிறது. இதனால் தசை நாண்கள், தசை நார்கள் வளர்கின்றன. இதன் காரணமாக தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் கூர்மையான எலும்பு ஒன்று வளர்கிறது என தெரிவித்துள்ளனர்.