ஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு: சிறப்பு அம்சங்களுடன் கூடிய அதிரடி அறிவிப்புகள்
                  
                     05 Jun,2019
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	
	சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் 2019 டெவலப்பர்கள் நிகழ்வு கீநோட் உரையுடன் துவங்கியது.
	ஆப்பிள் நியூஸ் பிளஸ், ஆப்பிள் டிவி பிளஸ் போன்ற சேவைகள் குறித்த அறிவிப்போடு கீநோட் உரையை ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தொடங்கினார். ஆண்டின் டெவலப்பர் நிகழ்வு ஜூன் 3 ஆம் தேதி துவங்கி ஜூன் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வு ஆப்பிள் நிறுவனத்தின் மெக்கன்ரி கன்வென்ஷன் ( கலிஃபோர்னியா சன் ஜோஸில்) சென்டரில் நடைபெறுகிறது.
	2019 ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வுக்கான (WWDC 2019) டிக்கெட்கள் மார்ச் 20 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நுழைவு சீட்டு கட்டணம் முந்தைய ஆண்டுகளை போன்றே 1599 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,10,777) என நிர்ணயம் செய்யப்பட்டது.
	ஆப்பிள் டிவியில் உள்ள இயங்குதளம் வீட்டில் உள்ள ஒவ்வொறுவருக்கும் பிரத்தியக சேனல்களை பரிந்துரை செய்யும். மேலும் எக்ஸ் பாக்ஸ் ஒன் மற்றும் பிளே ஸ்டேஷன் 4 போன்ற விளையாட்டு சாதனங்களுடன் ஒன்றிணைந்து செயல் ஆற்றும் வகையில் ஆப்பிள் டிவி மேம்படுத்தப்பட்டுள்ளது.
	ஆப்பிள் வாட்ச் இயங்குதளத்தில் புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் வாட்ச்க்கு வண்ணம் சேர்க்கும் வகையில் தீம்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட புதிய ஆப்பிள் செயலி முந்தைய பதிப்பை விட 30 சதவீதம் வேகமாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
	பயனாளரின் அந்தரங்க தகவல்களை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள எதுவாக சில மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் செய்துள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் ஒரு முறை மட்டும் லொகேஷனை பகிர்வது போல் அமைப்பை மாற்றிக்கொள்ள முடியும். மேலும் கேமரா சிறப்பான புகைப்படங்களை எடுக்கும் வகையில் செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது.
	செயற்கை நுண்ணறிவு தொழிலிநுட்பத்தில் இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் சிரி மேலும் சில சிறப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஐ.ஓ.எஸ். 13 பதிப்பில் டார்க் மோட் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஐ.ஓ.எஸ். 13 இயங்குதளத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.