மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயிலை வெற்றிகரமாக சோதனை செய்தது
                  
                     18 May,2019
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	ஜப்பானில் அடுத்த தலைமுறைக்கான  அதிநவீன  ஷின்கென்சன் புல்லட் ரெயிலின் தயாரிப்பினை அந்நாட்டு கிழக்கு ரெயில்வே நிர்வாகம் முடித்துள்ளது. இந்த புல்லட் ரெயிலின் முகப்பு பகுதி கூர்மையான மூக்கினை போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகப்பு பகுதிக்கு 91 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.640 கோடி) செலவிடப்பட்டுள்ளது.  
	
	இந்த அதிநவீன ரெயில் ஒரு மணி நேரத்திற்கு 320 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியதாகும். அதாவது 198 மையில் செல்லும். இந்த ரெயில் நேற்று முன்தினம் ஜப்பானின் வடக்கு பகுதிகளான செண்டாயில் இருந்து மொரியோகா வரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
	 
	இது குறித்து ரெயில்வே நிர்வாக அதிகாரி கூறுகையில், ‘முதன்முறையாக இந்த புல்லட் ரெயிலின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது. இதர சோதனைகள் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்படும்’ என கூறினார்.
	இந்த ஷின்கென்சன் ரெயில்  2030-2031ம் ஆண்டு மக்கள் பயணம் செய்ய ஏதுவாக சேவைக்கு விடப்படும். ஜப்பானின் வடக்குப்பகுதியில் உள்ள ஹொக்காய்டோ தீவின் மிகப்பெரிய நகரமான சப்போரோ வரை மேலும் விரிவுப்படுத்தப்படும்.
	இந்த அதிநவீன ரெயில் சேவையை முன்கூட்டியே தொடங்க, பணிகள் விரைந்து முடிக்கப்படும்.  ‘ஏஎல்எப்எ-எக்ஸ்’ ரக ஷின்கென்சன் புல்லட்  ரெயில் உலகிலேயே  அதிவேகமாக இயங்கும் சக்கரம் கொண்ட புல்லட் ரெயில் ஆகும் என  ஜப்பான் கிழக்கு ரெயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.