பாப்கார்ன் விற்பனையாளர் வீட்டிலேயே தயாரித்த விமானம் :
07 May,2019
பாகிஸ்தானில் தபூர் பகுதியில் வசிப்பவர் முகமது பயாஸ். இவர் கடந்த சில வருடங்களாக பாப்கார்ன் விற்று வியாபாரம் செய்து வருகிறார். சிறுவயது முதலே விமானப்படையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும், ஆர்வத்துடனும் இருந்துள்ளார்.
ஆனால் குடும்பத்தில் நிலவிய வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மற்றும் இணையத்தள வசதி மூலம் காற்றின் அழுத்தம், வேகம் ஆகியவற்றை துல்லியமாக கற்றுக் கொண்டு விமானம் செய்வது தொடர்பான அத்தனை நுணுக்கங்களையும் தெரிந்துக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து பணி நேரம் போக, வீட்டில் இருக்கும்போது துரிதமாக செயல்பட்டு விமானம் ஒன்றை தயார் செய்துள்ளார். இவர் விமானம் உருவாக்கி வருகிறார் என்பதை அறிந்த பாகிஸ்தான் விமானப்படையினர் அடிக்கடி அவர் வசிக்கும் வீட்டிற்கு வந்து இது குறித்து விசாரித்து வந்துள்ளனர்.
மேலும் அவரது பணியினை கண்காணிப்பது மட்டுமின்றி விளக்கம் கேட்டும் வந்துள்ளனர். இந்த விமானத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், விமானப்படையினர் அவரது திறமையை பாராட்டும் வகையில் சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளனர்.
இந்த விமானத்தை அருகில் இருக்கும் கிராமத்தினரும், கல்வி பயிலும் மாணவர்களும் பார்வையிட்டு வருகின்றனர். முகமதின் இந்த விமான தயாரிப்பு அனைவருக்கும் ஊக்கத்தினையும், தன்னம்பிக்கையினையும் ஏற்படுத்தி வருகிறது. அவருக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது