ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப் உள்ளிட்ட எதையுமே பயன்படுத்த முடியாது.
இந்த சூழ்நிலைதான் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் நிலவுகிறது. அதாவது, ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கண்ட சமூக வலைதளங்களோ அல்லது முழு இணையதள சேவையோ அவ்வப்போது அரசாங்கத்தால் முடக்கப்படுகிறது.
பிரபல சமூக வலைதளங்கள் சாட் நாட்டில் முடக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
ஜிம்பாப்வேயை போன்று சமீபத்தில் சூடானில் நடந்த அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தின்போது இணைய சேவைகள் பகுதியளவு முடக்கப்பட்டிருந்தது.
இணைய பயன்பாட்டாளர்களின் செயல்பாடு தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காகவே இவ்வாறு செய்வதாக அரசாங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பகுதியளவோ அல்லது முழுமையாகவோ அரசாங்கங்கள் எவ்வாறு இணைய சேவைகளை முடக்குகின்றன என்று பார்ப்போம்.
இணைய சேவை முடக்கம்
இணைய சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடுவதன் மூலம் அரசாங்கங்களால் ஒரு நாட்டிலுள்ள இணைய பயன்பாட்டாளர்களின் பயன்பாட்டை பகுதியளவோ அல்லது முழுமையாகவோ முடக்க முடியும்.
பெரும்பாலான நாடுகளில் சமூக ஊடகங்களின் செயல்பாடுகள் முதலில் முடக்கப்படுகிறது.
மோசமான தருணங்களில், அரசுகள் நாட்டின் முழு இணையதள சேவையையுமே முடக்குவதற்கு உத்தரவிடலாம்.
ஐவோரி கோஸ்ட், டிஆர் காங்கோ, சாட், கேமரூன், சூடான், எத்தியோப்பியா, மாலி, நைஜீரியா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு பல்வேறு காரணங்களுக்காக இணைய சேவைகள் முடக்கப்பட்டிருந்தது.
ஆப்பிரிக்க நாடுகளை தவிர்த்து, உலகளவில் பார்க்கும்போது 2016ஆம் ஆண்டு 75 முறையும், 2017இல் 108 முறையும், அதிகபட்சமாக கடந்த ஆண்டு 188 முறையும் இணைய சேவைகள் பகுதியளவாகவோ அல்லது முழுமையாகவோ முடக்கப்பட்டன.
முடக்கம் செய்யப்படும் வழிகள்
இணையதளத்தை முடக்குவதற்கு ஒரு நாட்டின் அரசாங்கம் விடுக்கும் உத்தரவை அந்த குறிப்பிட்ட நாட்டிலுள்ள இணைய சேவை நிறுவனங்கள் தனித்தனியே செயல்படுத்துகின்றன.
பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தின் முகவரி மட்டும் முடக்கப்பட்டு அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுத்தப்படுகிறது.
அதுபோன்ற முடக்கப்பட்ட இணையதளங்களை பயனர்கள் பார்க்கும்போது, 'சர்வர் கிடைக்க பெறவில்லை' அல்லது 'இந்த இணையதளம் சேவை நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளது' என்பது போன்ற தகவல்கள் வரும்.
'த்ராடல்லிங்' என்னும் மற்றொரு இணைய சேவை முடக்க முறையின் மூலம் குறிப்பிட்ட இணையதளத்தின் வேகம் மிகவும் குறைக்கப்பட்டு, அதன் சேவையில் ஏதோ பிரச்சனை இருப்பது போன்ற பிம்பம் உண்டாக்கப்படும்
இந்த முறையில் இணையதள சேவைகள் முடக்கப்படும்போது, இதற்கு சம்பந்தப்பட்ட இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமா அல்லது வேண்டுமென்றே இவ்வாறு செய்யப்படுகிறதா என்பதை கண்டுபிடிக்க முடியாது.
மேற்கண்ட நடவடிக்கைகள் பலனளிக்காத பட்சத்தில், இணைய சேவையை முற்றிலுமாக தடை செய்வதற்கு அரசாங்கங்கள் இணைய சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடுகின்றன.
இணைய சேவை நிறுவனங்களால் மறுக்க முடியுமா?
ஒரு குறிப்பிட்ட நாட்டின் தொலைத்தொடர்புத்துறை சட்டங்களை பொறுத்தே, அதன் அரசாங்கம் இணைய சேவைகளை முடக்கும் அதிகாரம் அமைகிறது.
அரசாங்கங்களிடமிருந்து உரிமத்தை பெற்றே தொலைத்தொடர்பு நிறுவனங்களை தொடங்க முடியும். எனவே, இணைய சேவை முடக்கம் தொடர்பான அரசின் உத்தரவுகளை செயல்படுத்தாத பட்சத்தில் பெரும் அபராதம், உரிம ரத்து உள்ளிட்ட பிரச்சனைகளை அந்நிறுவனங்கள் சந்திக்க நேரிடும்.
அரசாங்கங்களின் உத்தரவை எதிர்த்து இணைய சேவை நிறுவனங்கள் நீதிமன்றங்களில் முறையிடலாம் என்றாலும், பெரும்பாலான நேரங்களில் இது நடைபெறுவதில்லை.
இணையதள சேவை முழுவதுமாக முடக்கப்படாத பட்சத்தில், முடக்கப்பட்ட சில இணையதளங்களை மட்டும் பயன்படுத்தும் வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில் மிகவும் பிரபலமான வழியாக விர்ச்சுவல் பிரைவேட் நெட்ஒர்க் (VPN) உள்ளது.
அதாவது, விபிஎன்-ஐ பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எந்த முகவரிலிருந்து, கருவியிலிருந்து இணையதளத்தை உபயோகிக்கிறீர்கள் என்பதை இணைய சேவை வழங்கும் நிறுவனங்களால் கண்டறிய முடியாது.
விபிஎன்-களையும் அரசாங்கங்களால் தடைசெய்ய முடியும் என்றாலும், அவற்றை பயன்படுத்தும் வெளிநாட்டு தூதர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் அதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.
அதிகரித்து வரும் போலிச் செய்திகளின் காரணமாகவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளின் அரசாங்கங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்திற்கெதிரான மக்களின் வெறுப்புணர்வு வெளிப்படுத்தப்படுவதை நசுக்குவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.