உற்பத்தியைநிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 !
05 Mar,2019
உலகிலேயே மிகப் பெரிய விமானம் என்ற பெருமையுடன் உள்ள "ஏர்பஸ் ஏ-380" தனது கடைசி மூச்சை விடவுள்ளது. அதாவது இந்த விமானத்தின் உற்பத்தியை ஏர்பஸ் நிறுவனம் நிறுத்தவுள்ளதாம்.
மிகப் பெரிய ராட்சத விமானம் என்பதாலும், விலை மிக மிக அதிகம் என்பதாலும் இதை வாங்க யாரும் வருவதில்லை. இதனால்தான் உற்பத்தியை நிறுத்தப் போகிறதாம் ஏர்பஸ். 10 வருடங்களுக்கு முன்புதான் இந்த சூப்பர்ஜம்போ விமானத்தை அறிமுகப்படுத்தியது ஏர்பஸ். 500 பேருக்கும் மேல் இந்த விமானத்தில் பயணிக்க முடியும். இந்த விமானத்தை அதிகம் பயன்படுத்துவது எமிரேட்ஸ் நிறுவனம்தான். அந்த நிறுவனம் தான் கொடுத்திருந்த ஆர்டரை ரத்து செய்து விட்டதால் ஏர்பஸ் நிறுவனம் இதன் உற்பத்தியை நிறுத்தும் முடிவுக்கு வந்து விட்டது.
3500 பேருக்கு வேலை போகிறது
ஏர்பஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் கிட்டத்தட்ட 3500 பேருக்கு வேலை போகிறது. சூப்பர் ஜம்போ விமானத்தால் ஏர் பஸ் நிறுவனம் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 764 மில்லியன் டாலர் அளவுக்கு பெரும் நஷ்டத்தை சந்தித்தது என்பது நினைவிருக்கலாம்.
போயிங் நிறுவனம் குஷி
ஏர்பஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் போட்டியாளரான போயிங் நிறுவனம் குஷியாகியுள்ளதாம். தனது தயாரிப்புகளுக்கு நிலவி வந்த பெரிய சவால் விடை பெறுவதை போயிங் நிறுவனம் உள்ளூர மகிழ்ச்சியுடன் பார்க்கும் என்று தெரிகிறது. ஏர்பஸ் நிறுவன முடிவால் பிரான்சின் டல்ஹவுஸ் நகரில் உள்ள அதன் தலைமையகம் சோகமாக காணப்படுகிறதாம்.
சூப்பர் ஜம்போ வருகை
அதேசமயம், எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கும் கூட இந்த முடிவு பெரும் பின்னடைவு என்று சொல்கிறார்கள். காரணம் இந்த சூப்பர் ஜம்போ விமானம் வந்த பிறகுதான் அந்த நிறுவனத்தின் பொலிவு மேலும் கூடிப் போனது. துபாய் விமான நிலையத்திற்கும் இந்த சூப்பர் ஜம்போ விமானத்தின் வருகையால் மவுசு கூடிப் போனது.
ஒப்பந்தம் ரத்து
ஆரம்பத்தில் ஏர்பஸ் நிறுவனத்துடன் எமிரேட்ஸ் நிறுவனம் 23.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான ஒப்பந்தம் போட்டிருந்தது. புதிய ஏ380 மற்றும் ஏ350 சூப்பர் ஜம்போ விமானங்களையும், சிறிய ரக ஏ330 விமானங்களையும் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இது. இதைத்தான் தற்போது ரத்து செய்துள்ளது எமிரேட்ஸ்.
இதனால்தான் ஏர்பஸ், தனது சூப்பர் ஜம்போ உற்பத்தியையே நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளது..