உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர்- சீனாவில் அறிமுகம்
                  
                     05 Mar,2019
                  
                  
                      
					  
                     
						
	 
	
	உலகிலேயே முதல் முறையாக சீனாவில் செய்தி வாசிப்பாளராக பெண் போன்ற உருவ அமைப்பில் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
	சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி சேனல், பெண் போன்ற வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரோபோவை செய்தி வாசிப்பாளராக பயன்படுத்தி உள்ளது. இந்த ரோபோ பீஜிங்கில் வருடாந்திர பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கும் தலைவர்கள் குறித்த செய்திகளை வாசித்தது.
	இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த ரோபோ மனிதர்களை போல முக பாவனைகள் மற்றும் செயல்களை அப்படியே செய்யும் திறன் கொண்டது. இதற்கு ‘சின் சியாமெங்’ என பெயரிடப்பட்டுள்ளது. சிறிய காதணிகள், இளஞ்சிவப்பு நிற உடை அணிந்து, முடி போன்றவை சாதாரண பெண் போன்று இயல்பாக இருந்தது.
	சின்குவா சேனலின் செய்தி வாசிப்பாளர் கியூ மங் உருவத்தினை மாதிரியாக கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பெண் ரோபோவை, சின்குவா செய்தி சேனலும் சொகோவு எனும் தொழிநுட்ப நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன.
	கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்கனவே ஆண்களை போன்ற வடிவமைப்பு கொண்ட 2 ரோபோக்கள் செய்தி வாசிப்பாளர்களாக சீனாவின் உசென் பகுதியில் உள்ள சேனலில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.