இளைய தலைமுறையினருக்கு தீங்கு விளைவிக்கிறதா? ஸ்மார்ட் போன்
20 Feb,2019
தற்கொலைக்குத் தூண்டுவது, ஸ்மார்ட் போன்களுக்கு இளைய தலைமுறையினர் அடிமையாவது என, டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் நல்லதைவிட தீங்கே அதிகம் என்ற குற்றச்சாட்டு சமீபத்திய நாட்களில் எழுந்துள்ளது.
இணையம் நம் மனநலன் மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது? நம் மனஅழுத்தத்தை எப்படி கையாள்வது என்று பல கேள்விகள் எழுகின்றன.
2017ல் பிரிட்டனில் மோலி ரசல் என்ற 14 வயது சிறுமி தன் உயிரை மாய்த்து கொண்டார். இதனை குறிப்பிட்டு சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிக்கின்றன என்று பிரிட்டன் மக்கள் சுட்டிக்காட்டத் தொடங்கினர்.
சமூக ஊடகங்களில் மோலி பார்த்த சில புகைப்படங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தன்னை தானே வருத்திக் கொள்வது குறித்த படங்களை பார்த்தே மோலி தன் உயிரை எடுத்துக்கொண்டதாக அவரது தந்தை நம்புகிறார்.
அந்த சம்பவத்தையடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் இதுபோன்ற புகைப்படங்களை நீக்குவதாகக் கூறியது.
இது மட்டுமல்லாமல் ஸ்மார்ட் போன்களை அல்லது மற்ற சாதனங்களை நீண்ட நேரம் உற்றுப் பார்ப்பது தீங்கு விளைவிக்கலாம் என்ற வாதமும் இங்கு முன்வைக்கப்படுகிறது. எவ்வளவு நேரம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து பிரிட்டன் அரசாங்கத்தின் நான்கு தலைமை மருத்துவ அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதில் ஒருவரான சேலி டேவிஸ் கூறுகையில், ஸ்மார்ட் போன்களின் திரைகளை அதிக நேரம் பார்ப்பது தீங்கு விளைவிக்குமா என்று ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
சிறுவர்கள் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் போன் பயன்படுத்தக்கூடாது. மேலும் அவர்கள் படுக்கை அறைக்கு போன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது.
பெரியவர்கள் சிறியவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். உணவு உண்ணும் நேரத்தில் போன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஆனால் கேல் நியூபோர்ட், சாதனங்களுடனான நம் உறவை பற்றி யோசிக்க வேண்டும் என்கிறார். உங்கள் வேலைக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, தொழில்நுட்பம் உங்களை பயன்படுத்த விடக்கூடாது என்று கூறுகிறார்.
ஸ்மார்ட் போன் குறித்து அவர் அளிக்கும் முதல் குறிப்பு இதுதான்: "உங்களை வைத்து பணம் பார்க்கும் செயலிகளை முதலில் உங்கள் போனில் இருந்து எடுத்துவிடுங்கள். அப்போது அந்த நிறுவனங்களால், உங்கள் நேரத்தையும் கவனத்தையும் வீணடிக்க முடியாமல் போகும்."
டெஸ்க்டாப் கணிணிகளில் இந்த செயலிகளை பயன்படுத்துவது தவறில்லை. ஸ்மார்ட் போன்களுக்கு நாம் அடிமையாகி இருப்பதே இங்கு பிரச்சனை. நாம் இணையத்திலிருந்து தொடர்ந்து பல தகவல்களை எடுத்துக்கொண்டே இருக்கிறோம். மற்றும் அதற்கு நம் கருத்துகளை பதிவு செய்து வருகிறோம்.
நவீன வாழ்க்கை முறையில், மன அழுத்தத்தை நாம் எப்படி கையாள்வது என்று தீர்வு சொல்கிறார் மைக்கெல் ஆக்டன் ஸ்மித். Calm என்ற ஸ்மார்ட் போன் செயலி. இது தியானம் மற்றும் தூக்கமின்மைக்கான தீர்வைத் தரக்கூடும்.
ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி உங்கள் மனநலத்தை மேம்படுத்துவது என்பது சற்று முரணாக இருக்கலாம். ஆனால், இங்கு தொழில்நுட்பம் பிரச்சனை இல்லை என்றும், இதனால் நேர்மறை மற்றும் எதிர்மறையான தாக்கங்கள் இரண்டுமே இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
ஸ்மாரட் போனின் பயன்கள் அதன் எதிர்மறை அம்சங்களை குறைக்கிறது என்கிறார். ஆனால், கணிணி அறிவியல் கல்வி பயின்று, எழுத்தாளராக இருக்கும் கார்ல் நியூபோர்ட் சமூக ஊடக கணக்குகள் ஏதுமின்றி வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
அவரிடம் ஒரு பழைய ஐபோன் இருந்தாலும், அதை பெரிதும் கார்ல் பயன்படுத்துவதில்லை. "ஏதேனும் மிகவும் முக்கியமான விஷயத்துக்கே தொழில்நுட்பத்தை பயன்படுத்துவேன். தொழில்நுட்பம் என் வாழ்க்கையை மாற்ற அனுமதிக்க மாட்டேன்" என்று அவர் கூறுகிறார்.