பனிச்சறுக்கு செய்யும் ரோபோட்
                  
                     13 Feb,2019
                  
                  
                      
					  
                     
						
	 
	
	உலகின் பல நாடுகளிலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மயமாகி காணப்படுகிறது. மேலும் ரோபோட்களின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். நாளுக்கு நாள் பல்வேறு நாடுகளில் ரோபோட்களின் உருவாக்கமும், மனிதர்களுக்கு இணையான செயல்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
	
	இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு செய்யும் வகையிலான ரோபோட் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ரோபோட்  மனிதர்களை போல தானாகவே பனிச்சறுக்கில் ஈடுபட உள்ளது. எவ்வித இயக்கமும் இன்றி பனியில் செயல்பட பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
	 
	இதன் பாகங்கள் 3டி தொழில்நுட்பத்தைக் கொண்டு பிரிண்டிங் செய்யப்பட்டவை. இதன் மூலம் எந்த பனிப்பரப்பிலும் விழாமல் செயல்பட இயலும். இந்த ரோபோட்டை மத்திய தொழில்நுட்ப நிறுவனமான, ஈடிஎச் ஜூரிச்சின் ரோபோட்டிக் ஆய்வக பேராசிரியர் ஸ்டெலியன் கோரோஸ் உருவாக்கியுள்ளார்.
	இதுகுறித்து அவர் பேசுகையில், 'பனிச்சறுக்கில் ரோபோட்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை காணவே இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். குறிப்பாக இந்த ரோபோட்டின் கால்களில் இருக்கும் பிளேடு போன்ற அமைப்பு, பனியில் எந்த திசையிலும் மனிதர்களை போல மாற்றி ஸ்கேட்டிங் செய்ய இயலும்.  
	தற்போது ரோபோட்டின் கால் பகுதி மட்டும் உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. பின்னர் முழுவதுமாக வடிவமைக்கப்பட்டு தானாகவே எவ்வித இயக்கமும் இன்றி செயல்படுத்தப்படும். மேலும் இந்த ரோபோட்களுக்கு 4 கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது இருக்கும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ரோபோட்களின் பாகங்கள் சிரமமின்றி எளிமையாக தயாரிக்கப்படுகின்றன' என்றார்.
	இந்த வகையான ரோபோட்கள் பனிச்சறுக்கில் சிக்கியவர்களை தேடுவதற்கும், மீட்பு பணிகளுக்கும், பனிச்சறுக்கில் ஈடுபடும் மக்களுக்கு உதவி செய்யவும் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.