பிரிட்டனில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் மனித ரோபோட்!
12 Feb,2019
பிரிட்டனில் 3டி தொழில்நுட்பத்தின் மூலம் ரோபோட் கலைஞர் ஒருவர், மனித அமைப்பை அப்படியே கொண்டு ரோபோட்டை உருவாக்குகின்றார்.
உலகில் பல்வேறு நாடுகளிலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மயமாகி காணப்படுகிறது. இந்நிலையில், மனித வடிவமைப்பில் இருந்து சற்றும் மாறாத வகையில் பெண் ரோபோட் ஒன்று உருவாக்கப்படுகிறது.
இந்த பெண் ரோபோட்டிற்கு ஐடா என பெயரிடப்பட்டுள்ளது. இதனை பிரிட்டனைச் சேர்ந்த ஐடென் மெல்லர் உருவாக்கி வருகின்றார். இதன் நுணுக்கமான முக பாகங்கள், புருவங்களின் முடி போன்றவற்றை தன் கைகளால் கலைநயத்துடன் செய்து வருகிறார்.
இதையடுத்து இந்த ரோபோட், அல்ட்ரா ரியலிஸ்டிக் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது. பெண்களைப் போன்று இயற்கையான முடிகள், புருவங்கள் போன்றவற்றை பொருத்தும் பணியில் சிறப்பு கலை நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஐடென் மெல்லர் கூறுகையில், ‘ஐடா ரோபோட்டினால் மக்களிடையே உரையாட முடியும். இன்றைய தொழில்நுட்பத்தினைப் பற்றிய கேள்விகளுக்கும் பதில் அளிக்கும். ஐடாவின் அசைவுகள், நகர்வுகள் யாவும் மனிதர்களை போல இயல்பாக இருக்கும். கண் விழிகள் பொருத்தப்பட்டு, ஐடா இருக்கும் அறை முழுதும் பார்க்கும் அளவிலும், மனிதர்களுடன் கண் அசைவின் மூலம் தகவல்களை பரிமாற முடியும்.
மேலும் கணினியில் செயற்கை நுண்ணறிவு கொண்டு ஐடா இயக்கப்படுவதன் மூலம், மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டு கொள்ளவும், மனிதர்களை போல் மிமிக்கிரி செய்யவும் முடியும். இந்த ரோபோட்டினை மனிதர்களுக்கு இணையான வகையில் உருவாக்குவதே எங்கள் நோக்கம்’ என்றார்.
மெஸ்மர் எனும் ரோபோட் தொழில்நுட்பத்தினை கொண்டு ஐடாவின் தலைப்பகுதி, சிலிகான் தோல் மற்றும் 3டி பிரிண்டிங் செய்யப்பட்ட பற்கள் போன்றவற்றை உருவாக்குகின்றனர்.
கார்ன்வாலின் பால்மவுத் நகரில் உள்ள பொறியியல் கலை நிறுவனத்தின் மூலம் பல பொறியாளர்களின் தொடர் முயற்சியினால், இந்த ரோபோட் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ள கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதன் புகைப்படங்கள் நவம்பர் மாதம் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன.