உங்களது கைபேசி செய்யும் மாயாஜாலத்திற்கு அளவே கிடையாது. இன்றைய காலத்தில் கைபேசியை அழைப்புகளை மேற்கொள்வதற்கும், குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கும், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் போன்ற குறிப்பிட்ட சில செயலிகளை பயன்படுத்துவதற்கு மட்டும் நீங்கள் கைபேசிகளை பயன்படுத்துகிறீர்கள் என்றால், முதலீடு செய்த பணத்தை நீங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்று பொருள்.
ஆம், தற்காலத்தில் கைபேசிகள் வெறும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் போன்றவற்றை கடந்து நமது தினசரி வாழ்க்கையை எளிமைப்படுத்தக்கூடிய பல்வேறு ஆச்சர்யகரமான விடயங்களை மேற்கொள்ளும் மின்னணு கருவியாக உருவெடுத்துள்ளது.
கைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொருமுறை புதிய கைபேசிகளை வெளியிடும்போதும், பெரும்பாலான பயனீட்டாளர்கள் அதன் திரை, கேமரா, பேட்டரி, நினைவகம், மிக முக்கியமாக விலை போன்ற அம்சங்களைத்தான் பார்க்கிறார்கள். ஆனால், அதையும்தாண்டி பல்வேறு சிறம்பம்சங்களை கொண்டுதான் கைபேசிகள் வெளியிடப்படுகின்றன.
உங்களது சாதாரண ரிமோட்டுகள் எப்படி செயல்படுகின்றன?
தொலைக்காட்சிப்பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், இருந்த இரண்டு, மூன்று சேனல்களை பார்ப்பதற்கு குவிந்த கூட்டத்தையும், சேனல்களை மாற்றுவதற்கு பட்டப்பாட்டையும் பலரால் மறக்கவே முடியாது
அதையெல்லாம் மாற்றி, நீங்கள் உட்கார்ந்த இடத்திலேயே டிவி, ஏசி போன்ற பல்வேறு மின்சாதனங்களை மாற்றுவதற்கு உதவும் ரிமோட்டுகள் இயங்குவதற்கு இன்ஃப்ராரெட் (IR) என்னும் அகச்சிவப்பு கதிர்கள், ரேடியோ ஃப்ரீகுவன்சி (RF) என்னும் ரேடியோ அலைகள் ஆகிய இரண்டு தொழில்நுட்பங்கள் காரணமாக உள்ளன.
இன்ஃப்ராரெட் (IR)
பெரும்பாலான மின்சாதங்களில் பயன்படுத்தப்படும் ரிமோட்டுகள் இன்ஃபராரெட் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுள்ளன. உங்களது ரிமோட்டில் அழுத்தும் பட்டன்களை அது அகச்சிவப்பு கதிர்களை பயன்படுத்தி மாற்றத்தை மேற்கொள்ள வேண்டிய மின்சாதனத்துக்கு மின்னணு சமிக்ஞைகளாக அனுப்புகிறது.
ரிமோட்டிலிருந்து அனுப்பப்படும் பைனரி கோடுகளை, ஒளி அலைகளிலிருந்து பிரித்தெடுக்கும் வேலையை மைக்ரோ ப்ராசசர் என்னும் நுண்செயலி மேற்கொண்டு நீங்கள் கூறிய கட்டளைகளை மேற்கொள்கிறது.
எல்இடி தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்த தொழில்நுட்பம், இடையில் சுவர்கள் உள்பட தடுப்புகள் இருந்தாலோ அல்லது அதிகபட்சம் 30 அடிகளுக்கு அதிகமான தொலைவில் இருந்தாலோ செயல்படாது.
ரேடியோ ஃப்ரீகுவன்சி (RF)
அகச்சிவப்பு அலைகளுக்கு பதிலாக ரேடியோ அலைகள் இந்த தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, நீங்கள் ரிமோட்டில் கொடுக்கும் கட்டளைகள் ரேடியோ அலைகளாக மாற்றப்பட்டு, மின்சாதனத்தால் பெறப்பட்டு மைக்ரோ ப்ராசசரால் குறியீடுகளாக்கப்பட்டு (Decoding) கட்டளை செயல்படுத்தப்படுகிறது.
ஆனால், இந்த ரேடியோ அலைகளை மையாக கொண்ட ரிமோட்டுகள் திறனுக்கேற்றவாறு 100 அடிக்கும் அதிகமான தூரத்திலோ அல்லது சுவர்கள், திரை உள்ளிட்ட தடுப்புகள் இருந்தாலும்கூட எவ்வித பிரச்சனையுமின்றி கட்டளைகளை நிறைவேற்றுகிறது.
கைபேசியில் எப்படி சாத்தியமாகிறது?
கைபேசியில் ஹெட்போனை போடுவதற்கும், நீங்கள் பேசுவதை பதிவு செய்யும் மைக், ஒலியை வெளிப்படுத்தும் ஒலிப்பெருக்கி போன்றவை இருப்பதை போன்று ஐ.ஆர் பிளாஸ்டர் (IR Blaster) என்னும் நுண் அமைப்பும் பொருத்தப்படுகிறது. ஆனால், ஐ.ஆர் பிளாஸ்டர் அனைத்து கைபேசிகளிலும் காணப்படுவதில்லை.
உங்களது கைபேசியில் ஐஆர் பிளாஸ்டர் உள்ளதா, இல்லையா என்பதை நீங்களாகவோ அல்லது கைபேசியின் செட்டிங்ஸ் பகுதிக்கோ சென்று காண முடியும்.
பொதுவாக ஐஆர் பிளாஸ்டர் கைபேசியின் மேற்பகுதியில் அமைக்கப்படுகிறது. பெரும்பாலும், கருப்பு நிறத்தில் பிளாஸ்டிக் வளையத்தை போன்றோ அல்லது செவ்வக வடிவத்திலோ இது காணப்படும். உங்களால் நேரடியாக பார்த்து கண்டறிய முடியவில்லை என்றால், கைபேசியின் செட்டிங்ஸ் பகுதியிலுள்ள, "கம்யூனிகேஷன் பெரிபெரல்ஸ்" என்பதில் ஐஆரும் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
சிறந்த, தகுந்த செயலியை தேர்வுசெய்வது எப்படி?
உங்களது கைபேசியில் ஐஆர் பிளாஸ்டர் இருந்தால்தான் அதை ரிமோட்டாக பயன்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவேளை, மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு வழிகளிலும் உங்களால் ஐஆர் பிளாஸ்டர் கண்டறிய முடியவில்லை என்றால், அதைமீறி என்ன முயற்சித்தாலும் பயனில்லை.
கைபேசியில் ஐஆர் பிளாஸ்டரை கொண்டுள்ளவர்கள், ஆண்ட்ராய்டு மட்டுமின்றி ஐஓஎஸ் இயங்குதளத்திலும் காணப்படும் 'ரிமோட் கன்ட்ரோல்' செயலிகளை பதிவிறக்கம் செய்து ரிமோட்டுகளுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
ரிமோட் கன்ட்ரோல் செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது, மிகுந்த கவனத்துடன் குறிப்பிட்ட செயலியின் பதிவிறக்கங்களின் எண்ணிக்கை, தர மதிப்பீடு, பயனீட்டாளர்களின் கருத்து போன்றவற்றை ஆய்வு செய்து தரவிறக்கம் செய்தால் ஏமாற்றம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
ஏனெனில், உங்களது கைபேசியில் ஐஆர் பிளாஸ்டர் இருந்தும், அதை பயன்படுத்த முடியாத நிலையை சில போலியான செயலிகள் ஏற்படுத்துகின்றன.
குறிப்பிட்ட செயலியை தரவிறக்கம் செய்த பின்பு, நீங்கள் உங்களது கைபேசியை டிவி, ஏசி போன்ற எந்த மின்சாதனத்திற்கு ரிமோட்டாக பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதையும் அதன் தயாரிப்பு நிறுவனத்தையும் என்பதை தேர்ந்தெடுங்கள். அவ்வளவுதான்! இனி உங்களது கைபேசியை ரிமோட்டாகவும் பயன்படுத்துங்கள்.