இனி செய்திகளை பார்க்கவேண்டியதில்லைஸ! செயற்கை நுண்ணறிவுடன் அசத்தும் கூகுள்
09 Dec,2018
கூகுள் நிறுவனம், கூகுள் அஸிஸ்டென்ட் உதவியுடன் செய்திகளை ஒலி வடிவத்தில் கொடுக்க சில செய்தி நிறுவனங்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்களுடன் இணைந்துள்ளது. செய்திகளெல்லாம் டிஜிட்டல் வடிவில் வந்துவிட்டபோதிலும் பலரும் தாங்கள் இருக்கும் இடம் மற்றும் சூழ்நிலை காரணத்தினால் அதனைப் படிக்கவோ அல்லது பார்க்கவோ வாய்ப்பும், நேரமும் இல்லாமல்போகிறது.
ஆனால், இனி செய்திகளைப் பார்க்கவோ, படிக்கவோ வேண்டிய அவசியம் இல்லாமல், எங்கிருந்தாலும் தங்களுக்கு விருப்பமான செய்திகளை காதுகளால் கேட்டுக்கொள்ளும் வகையில் கூகுள் அஸிஸ்டென்டை செயற்கை நுண்ணறிவுடன் (AI) கூகுள் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. இதில் தேவையற்ற செய்திகளைத் தவிர்ப்பது, கேட்க தவறியச் செய்திகளை மீண்டும் பின்சென்று கேட்பது போன்ற வசதிகளுடன் கூகுள் அஸிஸ்டென்ட் வேலை செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது என்பது கூடுதல் சிறப்பு.
முதற்கட்டமாக இந்த ஒலிவடிவ செய்திகள் குறைந்த அளவிலான எண்ணிக்கையில், அமெரிக்காவில் மட்டுமே ஒலிபரப்பக்கூடியாதாக இருக்கின்றது. மேலும் தற்போதைக்கு இந்த ஒலிவடிவ செய்திகள் ஆங்கிலத்தில் மட்டுமே இயங்கிவருகின்றது. இது எப்போது மற்ற மொழிகளில் பயன்பாட்டிற்கு வரும் அல்லது வருமா என கூகுள் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால் மற்ற மொழிகளிலும் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம். காரணம், கூகுள் அஸிஸ்டென்ட் முதலில் அறிமுகம் செய்தபோது ஆங்கிலத்தில் மட்டுமே வந்தது. ஆனால், பின்னாளில் அது மற்ற மொழிகளிலும் பயன்பாட்டிற்கு வந்தது. அந்த வகையில் ஒலிவடிவ செய்திகளும் விரைவில் மற்ற மொழிகளிலும் வருமென எதிர்பார்க்கலாம்.