கைபேசியின் மூலம் ரகசிய கேமராக்களை கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது.?
08 Dec,2018
சில நாட்களுக்கு முன்பு சென்னை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் செயல்பட்டு வரும் பெண்கள் விடுதியில் அதன் உரிமையாளர் பத்துக்கும் மேற்பட்ட ரகசிய கேமராக்களை பொருத்தி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நீங்கள் இந்த கட்டுரையை உங்களது வீட்டில் படித்துக்கொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது நீங்கள் இந்த கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் திறன்பேசி/ கணினி/ மடிக்கணினியை தவிர்த்து உங்களை சுற்றி எங்கெல்லாம் கேமரா வைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது தெரியுமா?
வீட்டின் அறைகளில் இருக்கும் கடிகாரத்தில், மின்னணு கருவிகளை சார்ஜ் செய்யும் அடாப்டரில், சுவற்றில், மின்விளக்குகளில், குழாய்களில், கைக்கடிகாரத்தில், பேனாவில், ஆடையில், பவர் பேங்கில், போட்டோ பிரேமில், பென் டிரைவில், வாசனை திரவிய பாட்டிலில், கழிவறை துடைப்பானில், புகைப்போக்கியில், காலணியில், கண்ணாடியில் என நீங்கள் சிறிதும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத பொருட்களில், இடங்களில் உங்களை கண்காணிப்பதற்காக கேமராக்களை நிறுவ முடியும்.
மற்ற அனைத்து பொருட்களை போன்றே ரகசிய கேமராக்களையும் மிகவும் எளிதாக அமேசான், பிலிப் கார்ட் போன்ற இணையதள வணிக நிறுவனங்கள் வாயிலாகவும், அருகிலுள்ள கடைகளிலிருந்தும் வாங்க முடியும். இந்நிலையில், ரகசிய கேமராக்களை வாங்குவதற்கு ஆயிரம் வழிகள் உள்ளதே, அதை கண்டுபிடிப்பதற்கு ஏதாவது எளிதான வழி உள்ளதா என்று சிந்திக்கிறீர்களா?
வீட்டிலுள்ள ஒவ்வொரு இடத்தையும் துருவித் துருவி ஆராய்வதையும், அனைத்து மின்விளக்குகளையும் அணைத்துவிட்டு டார்ச் லைட்டை கொண்டு தேடுவதையும் விடுத்து எந்நேரமும் உங்களது கைகளில் இருக்கும் கைபேசியின் மூலம் ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?
ஆம், உங்களது கைபேசியில் குறிப்பிட்ட செயலிகளை நிறுவுறுவதன் மூலம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கைபேசி முதல் கண்ணுக்கு புலப்படாத கேமராக்கள் வரை அனைத்தையும் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புள்ளது.
சில நூறு ரூபாய்க்கு கூட ஆண்ட்ராய்டு கைபேசிகளை வாங்கிவிட முடியும். என்னதான் விலை குறைவான கைபேசியில் கிட்டத்தட்ட அனைத்து செயலிகளையும் பயன்படுத்த முடியும் என்றாலும், குறிப்பிட்ட செயலியின் அனைத்து சிறப்பம்சங்களையும் உங்களால் பெற முடியாது.
மேலும், ஆண்ட்ராய்டு மட்டுமின்றி ஆப்பிளின் ஐஓஎஸ் இயங்குதளத்திலும் போலி செயலிகள் உலவுவதால் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து செயலிகளும் எதிர்பார்த்த பலனை கொடுக்குமென்று சொல்ல முடியாது.
ரகசிய கேமரா கண்டறியும் செயலிகள் எப்படி செயல்படுகின்றன?
நீங்கள் ரகசிய கேரமராக்களை கண்டறியும் எந்த செயலியை தரவிறக்கினாலும், அவை ஒரு முக்கிய செய்தியை காண்பித்த பிறகே செயல்பட தொடங்குகின்றன. அதாவது, "எங்களது செயலி அளிக்கும் முடிவுகள் உங்களது கைபேசியின் திறனை சார்ந்தது. ஒருவேளை இந்த செயலி செயல்படுவதற்குரிய திறன் உங்களது கைபேசியில் இல்லையென்றால், நீங்கள் தவறான முடிவுகளை பெறக்கூடும்" என்று அந்த செயலிகள் குறிப்பிடுகின்றன.