உங்கள் வைஃபை பாதுகாப்பாகத்தான் இருக்கா?
29 Nov,2018
உங்கள் வைஃபை பாதுகாப்பாகத்தான் இருக்கா? – இதோ செக் பண்ணிக்கோங்க!
வைஃபையை நமக்கே தெரியாமல் வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதை இந்த சோதனைகள் மூலம் உறுதி செய்யலாம்.
இன்று மக்களுக்கு இணையம் என்பது ஓர் அத்தியாவசிய தேவையாக மாறிவிடும் அளவுக்குக் கடந்த ஆண்டுகளில் வளர்ச்சி பெற்றுள்ளது இது. பெரும்பாலும் மக்கள் இந்த இணையசேவையை இரண்டு வழியில் பெற்றுவருகின்றனர். ஒன்று மொபைல் சிம் மூலம் வழங்கப்படும் மொபைல் டேட்டா சேவை, மற்றொன்று பிராட்பேண்ட் சேவை. இந்த பிராட்பேண்ட் சேவையை நேராக LAN மூலம் உங்கள் சாதனங்களில் கனெக்ட் செய்யலாம். ஆனால் இன்று அதைவிடவும் WIFI மூலம் கனெக்ட் செய்வதுதான் அனைவருக்கும் எளிதாக இருப்பதால் இதுவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. இதற்காக பிராட்பேண்ட் சேவையைப்
பெறும்போது கூடவே WIFI ரௌட்டர் ஒன்றைப் பெறுவதும் இன்று வாடிக்கையாகிவிட்டது. ஆனால், சில நேரங்களில் நமது இணையசேவை ஸ்லோவாக இருப்பதாகத் தோன்றும். யாரேனும் நமக்குத் தெரியாமல் நமது WIFI-ல் கனெக்ட் செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படும். இதை எப்படிக் கண்டுபிடிப்பதென்றும் தெரியாமல் யோசித்துக் கொண்டிருப்போம். இதைப்போன்ற நேரங்களில் உண்மையிலேயே யாரேனும் இப்படி நமக்குத் தெரியாமல் நமது WIFI-ல் கனெக்ட் செய்திருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிப்பதற்கான சில எளிய வழிகள் உள்ளன அவை என்னவென்று பார்ப்போம்.
எல்லாச் சாதனங்களையும் ஆஃப் செய்து பாருங்கள்!
இதுதான் இருப்பதிலேயே மிகவும் எளிமையான வழி. WIFI-ல் நீங்கள் கனெக்ட் செய்துள்ள சாதனங்கள் அனைத்தையும் டிஸ்கனெக்ட் செய்யுங்கள். பின்பு ரௌட்டரைப் பாருங்கள், இப்போதும் வயர்லெஸ் இணைப்பைக் குறிக்கும் லைட் பிலின்க் ஆகிக்கொண்டே இருந்தால் வேறு எதோ ஒரு சாதனம் WIFI-ல் கனெக்ட் ஆகியிருக்கிறது என்று அர்த்தம். ஆனால், இதைச் செய்ய உங்களுக்கு வீட்டில் இருக்கும் அனைத்துச் சாதனங்களையும் தெரிந்திருக்கவேண்டும். இது சில நேரங்களில் சாத்தியமான விஷயமாக இருக்காது.
செயலிகள் வைத்து செக் செய்யுங்கள்
இதைப்போன்று சந்தேகத்துக்குரிய முறையில் யாரேனும் கனெக்ட் செய்திருக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க சில செயலிகள் இருக்கின்றன. இவை இது தொடர்பான சில அறிகுறிகளை உங்களுக்குக் காட்டும். அப்படியான சில செயலிகளை இப்போது பார்ப்போம்.
Wi-Fi Inspector
இந்த ஆண்ட்ராய்டு செயலி எந்தெந்த சாதனங்கள் உங்கள் வைஃபையில் இணைந்திருக்கின்றன. அவற்றின் IP address, MAC address மற்றும் சில தகவல்களைக் காட்டும். இதில் உங்களுக்குத் தெரிந்த சாதனங்களின் பட்டியலை சேவ் செய்து வைத்துக்கொள்ளலாம். அதைத் தவிர வேறு ஏதேனும் சாதனம் WIFI-ல் கனெக்ட் ஆகியதென்றால் உங்களுக்குத் தெரிந்துவிடும். ஆனால் இதைப்போன்ற செயலிகளில் விளம்பரங்கள் அதிகமாக இருக்கும் என்பது மைனஸ்.
F-Secure Router Checker:
வெப் அப்ளிகேஷனான இதன்மூலம் திருட்டு கனெக்ஷன்களில் நிகழும் பெரிய பதிவிறக்கங்கள் எதுவும் ஆகாமல் தடுக்கமுடியும் என்று கூறப்படுகிறது. இது ஹேக்கிங் போன்ற சீரியஸான விஷயங்களையும் ட்ராக் செய்யுமாம்.
மேலும் பல மேம்பட்ட மென்பொருள்கள் இந்த விஷயத்துக்காகவே கிடைக்கின்றன அவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் ட்ரை செய்து பார்க்கலாம்.
அட்மின் பக்கத்தில் செக் செய்யுங்கள்
ஒவ்வொரு ரௌட்டர்க்கும் கண்டிப்பாக செட்டிங்ஸை மாற்றிக்கொள்ளக்கூடிய அட்மின் பக்கம் ஒன்று இருக்கும். இதன் அமைப்பு ரௌட்டர்க்கு ரௌட்டர் மாறும். பெரும்பாலும் “192.168.1.1″ “192.168.2.1” ஆகிய IP address-களில் ஏதேனும் ஒன்றை பிரௌசரில் டைப் செய்தாலே இந்தப் பக்கம் வந்துவிடும். அப்படியும் வரவில்லை என்றால் நீங்கள் வைத்திருக்கும் ரௌட்டரின் அட்மின் பக்கத்துக்கு எப்படிச் செல்லமுடியும் என்பதை தேடிப் பாருங்கள். இந்த அட்மின் பக்கத்தில் இருக்கும் செட்டிங்ஸில் ஒரு ரவுண்டு வந்தால் கனெக்ட் ஆகியிருக்கும் சாதனங்களின் MAC address-ஐ பட்டியலிடும் பகுதி ஒன்றைக் கண்டுபிடிக்கலாம். இது பெரும்பாலும் “wireless status”, “wireless configuration” அல்லது “DHCP client list” ஆகிய பகுதியின் கீழ்தான் இருக்கும். இதில் நீங்கள் கனெக்ட் செய்திருக்கும் சாதனங்களை விட அதிகமான எண்ணிக்கையைக் காட்டினால் உங்கள் WIFI திருடப்பட்டுக்கொண்டிருக்கும் வாய்ப்பு இருக்கு.
கண்டுபிடிப்பது சரி, இதை தடுப்பதற்கு என்ன செய்ய?
முதலில் ரௌட்டர் இன்ஸ்டால் செய்யும்போது கொடுக்கப்பட்ட பாஸ்வேர்டு மற்றும் பெயரை மாற்றுங்கள். இதை மேல் குறிப்பிட்ட அட்மின் பக்கத்தில் செய்யமுடியும். பெயரை மாற்ற Service Set Identifier எனப்படும் SSID என்பதை செட்டிங்ஸில் தேடுங்கள். முக்கியமாகச் சிறந்த வயர்லெஸ் நெட்ஒர்க் encryption ஒன்றைப் பயன்படுத்துகிறீர்களா என்பதை செக் செய்யுங்கள். WPA2 encryption-ஐ பயன்படுத்துவது சிறந்தது. இப்போது மற்றதெல்லாம் அந்தளவு பாதுகாப்பானது அல்ல.
இதுதவிர உங்களது WIFI-ஐ யாருக்கும் தெரியாதபடி மறைத்துவைக்கவும் முடியும். இதற்கும் அதே அட்மின் பக்கத்தில் இருக்கும் SSID பிரிவில் `Hide’ என்று கொடுக்கலாம். இதுவும் ஒவ்வொரு ரௌட்டரையும் பொறுத்து மாறும், ஆனால் இந்த வசதி என்பது கண்டிப்பாக எல்லா ரௌட்டரிலும் இருக்கும். பின்பு உங்கள் சாதனத்தில் கனெக்ட் செய்யலாம் என்று முயற்சி செய்யும்போது உங்கள் WIFI அருகில் இருக்கும் WIFI லிஸ்டில் வராது. எனவே நாம்தான் பெயரையும் பாஸ்வேர்ட்டையும் கொடுத்து லாகின் செய்யவேண்டும்.
இப்படி மற்றவர்கள் நமது WIFI-ல் கனெக்ட் செய்வதால் வெறும் டேட்டா மட்டும்தான் வீணாகிறது என்ற ஒரு தவறான புரிதலும் மக்களிடையே இருக்கிறது. ஆனால் உண்மையில் தெரியாத நபர் ஒருவர் நமது பிரைவேட் ஹோம் நெட்ஒர்க்கில் இணைவது என்பது அதைவிடவும் ஆபத்தானது. எனவே உங்க WIFI-ஐ பத்திரமா பார்த்துக்கோங்க!