தொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
20 Nov,2018
தங்களது குழந்தைகளிடையே அதிகரித்து வரும் கைபேசி பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கவலையுறும் பெற்றோர், குழந்தைகளின் தொழில்நுட்ப பயன்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சிரமப்படுவதாக சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பா முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,000 பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், 43 சதவீத பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் அதிகரித்து வரும் தொழில்நுட்ப சாதன பயன்பட்டால் அவர்களது தூக்கம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், 38 சதவீத பெற்றோர் தங்களது குழந்தைகளின் கையடக்க கணினி, கைபேசி பயன்பாட்டினால் அவர்களது சமூக திறன்களில் ஏற்பட்டுள்ள மாறுபாடு குறித்தும், 32 சதவீதத்தினர் குழந்தைகளுக்கு மனரீதியான பிரச்சனை ஏற்படுமோ என்று எண்ணி கவலைப்படுவதாகவும் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
பெற்றோர்களாகிய நாங்களே அதிகளவு தொழில்நுட்ப சாதனங்களில் செலவிட்டு எங்களது குழந்தைகளுக்கு தவறான முன்னுதாரணமாக இருந்துவிட்டோம் என்று பெரும்பாலான பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்ப காலத்தின் சிக்கல்
பிரபல தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமான நார்டான் நடந்திய இந்த கருத்துக்கணிப்பில் ஐந்து முதல் 16 வயது வரையிலான குழந்தைகளையுடைய பெற்றோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
முன்னெப்போதும் இல்லாததைவிட அதிகளவிலான ஆர்வத்துடன் குழந்தைகள் தங்களது பெரும்பாலான நேரத்தை கையடக்க கணினிகள், கைபேசிகளின் திரைகளில் செலவிடுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக பிரிட்டனை சேர்ந்த சிறுவர்கள் வீட்டிற்கு வெளியே விளையாடுவதைவிட அதிகமான நேரத்தை கைபேசிகளில் செலவிடுவதாகவும், சுமார் 23 சதவீத குழந்தைகள் தங்களது பெற்றோரை விடவும் அதிகமான நேரத்தை கைபேசிகளில் செலவிடுவதும் தெரியவந்துள்ளது.
மின்னணு காலத்திற்கேற்ற குழந்தை வளர்ப்பு குறிப்புகள்
குழந்தைகள் எவ்வளவு நேரம் மின்னணு திரைகளில் செலவிடலாம்; எவற்றையெல்லாம் பார்ப்பதற்கு அனுமதியுண்டு என்று திட்டமிட்டு தெளிவுற குழந்தைகளுக்கு விளக்குங்கள்
குழந்தைகள் இணையதளத்தில் என்ன செய்கிறார்கள் என்பது குறித்தும், என்ன பார்க்கிறார்கள் என்பது குறித்தும் விளங்க வையுங்கள்.
குழந்தைகளிடம் அவர்களுக்கு தெரிந்த நண்பர்களுடன் சமூக இணையதளங்களில் தொடர்புகொள்வதற்கு ஊக்குவியுங்கள்.
இணையத்தில் ஒன்றை கிளிக் செய்வதற்கு முன்னர் சிந்திக்க வேண்டியதன் அவசியம் குறித்து குழந்தைகளுக்கு கற்பியுங்கள்.
குழந்தைகள் தெரிந்தோ, தெரியாமலோ தவறான விடயங்களை இணையதளங்களில் பார்ப்பதை தடுக்கும் மென்பொருள்களை பயன்படுத்துங்கள்.
சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை பகிர்வதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து குழந்தைகளுக்கு தெளிவாக விளக்குங்கள்.
'நல்ல முன்மாதிரியாக இருங்கள்'
பிரிட்டனை சேர்ந்த சிறுவர்கள் சராசரியாக ஒருநாளைக்கு மூன்று மணிநேரத்தை தொழில்நுட்ப சாதனங்களின் திரைகளில் செலவிடுவதாக இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
"இந்த தொழில்நுட்ப காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது எளிதான காரியமல்ல" என்று நார்டான் நிறுவனத்தின் ஐரோப்பாவின் மேலாளரான நிக் ஷா கூறுகிறார்.
"குழந்தைகளை சரிவர உண்ண வைப்பது, சரியான நேரத்திற்கு வீட்டுப்பாடங்களை செய்ய வைப்பது, தூங்க வைப்பது உள்ளிட்ட அந்த கால பிரச்சனைகள் தொடர்ந்து இருப்பதாகவும், அதோடு குழந்தைகளின் தொழில்நுட்பம் சார்ந்த பயன்பாட்டை நிர்வகிப்பதும் இணைந்துள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.
இருந்தபோதிலும், 60 சதவீத பெற்றோர் தங்களது குழந்தைகள் புதிய விடயங்களை கற்றுக்கொள்வதற்கு இதுபோன்ற சாதனங்கள் பெரும் உதவி புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், வெறும் ஒன்பது சதவீத பெற்றோர்களே குழந்தைகளின் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்பாடு தொடர்பாக எவ்வித விதிமுறைகளையும் விதிக்கவில்லை என்பதும், 65 சதவீத சிறுவர்கள் தங்களது கையடக்க கணினிகள், கைப்பேசிகளை தூங்கும் அறைகளிலேயே பயன்படுத்துவதும் இந்த கருத்துக்கணிப்பில் மூலம் தெரியவந்துள்ளது.
49 சதவீத பெற்றோர் தங்களது குழந்தைகளின் தொழில்நுட்ப சாதன பயன்பாட்டிற்கு சிறந்த விதிமுறைகளை வகுக்க விரும்புவதாகவும், ஆனால், அதை செயல்படுத்துவது சிக்கலானதாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
"குழந்தைகளுக்கு தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்துவது தொடர்பாக விதிமுறைகளை விதிப்பதற்கு முன்னர் ஒவ்வொரு பெற்றோரும் தனது செயல்பாட்டை சுயபரிசோதனை செய்து, குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று ஷா மேலும் விளக்குகிறார்