வாழ்க்கையின் மகிழ்ச்சியான சமயங்களில் புதிய கார் வாங்கும் நிகழ்வும் ஒன்று. பொதுவாக கார் வாங்கும் சமயங்களில் பல காகிதங்களில் கையெழுத்து போடுவதிலேயே பலரும் கவனமாக இருந்துவிடுவர். விற்பனையகத்திலிருந்து காரை வெளியே எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ...
நீங்கள் விரும்பிய நிறத்தில் காரை தேர்வு செய்த பிறகு அதை பதிவு எண்ணுக்கு அனுப்பும் முன்பு சில சோதனைகளை நீங்கள் செய்வது அவசியம். அப்போதுதான் அந்த காரில் பிரச்சனை இருந்தால் நீங்கள் வேறொன்றை மாற்ற முடியும். பதிவு செய்த பிறகு மாற்ற முடியாது.
டெலிவரிக்கு முன்பாக நீங்கள் அனைத்து அம்சங்களையும் பார்த்து சம்மதம் தெரிவிக்காமல் உங்கள் பெயரில் இன்வாய்ஸ் தயாரிக்கக் கூடாது என்று விற்பனையாளரிடம் கண்டிப்பாக தெரிவித்துவிடுங்கள். காரை பகல் நேரத்தில் சென்று பார்த்து சோதனை செய்யுங்கள்.
காரின் உள்புறமும், வெளிப்புறமும் எவ்வித சேதமும் இல்லாமல் இருக்கிறதா என்பதை கவனமாக பார்க்க வேண்டும்.
பொதுவாக கார் உற்பத்தி ஆலையிலிருந்து போக்குவரத்து மூலம் கார் விற்பனையகத்துக்கு வரும். இதனால் காரில் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு.
சில விற்பனையகங்களில் காட்சி (டெமோ) கார் என வைத்திருப்பர். புதிதாக டெலிவரி எடுக்கும் முன்புவரை சில விற்பனையாளர்கள் அதை டெமோ காராக பயன்படுத்தி இருக்கலாம். ஸ்பீடோமீட்டர் வயர் இணைப்பை துண்டித்துவிட்டு பயன்படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே அதை கவனமாகப் பார்க்க வேண்டும்.
சில கார்களில் உற்பத்தி சார்ந்த குறைபாடு இருக்கும். அவற்றை உன்னிப்பாக கவனித்தால் கண்டுபிடித்துவிட முடியும். புதிய கார்கள் பல சமயங்களில் விற்பனையகங்களில் நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். வெயில், மழை இவற்றில் காய்ந்திருக்கும். இவற்றையெல்லாம் கட்டாயம் பார்க்க வேண்டும்.
முதலில் காரின் வெளிப்புறத்தை உன்னிப்பாக கவனியுங்கள். பம்ப்பரில் தொடங்கி பக்கவாட்டு பகுதி முழுவதுமாக பாருங்கள். காரில் ஏதேனும் கீறல், அடிபட்டிருந்தால், நசுங்கியிருப்பது தெரியும். முனைப் பகுதிகளில் ரீ-பெயிண்ட் செய்திருக்கிறார்களா என்று கவனியுங்கள்.
வெளிப்புறத்தை கவனமாக பார்த்த பிறகு உள்புறமும் கவனியுங்கள். டேஷ் போர்டு, டோர் பேட் ஆகியவை அனைத்தும் சரியாக பொருந்தும்படி உள்ளதா என்று கவனியுங்கள். டேஷ்போர்டு பகுதியில் உள்ள பெட்டிகளை திறந்து, மூடி சரியாக செயல்படுகிறதா என்று பாருங்கள். சீட்களில் ஏதேனும் கறை உள்ளதா என்று கவனியுங்கள். கீழ்ப்பகுதியில் உள்ள மேட்டை எடுத்து ஏதேனும் நீர் கசிவு இருக்கிறதா என்று பாருங்கள். முன்புற கண்ணாடி, ஜன்னல்கள் சரியாக உள்ளனவா அதில் விரிசல்கள் உள்ளதா என்று பார்க்கவும். சீட் பெல்ட் சரியாக உள்ளதா, டிரைவர் சீட் சரியாக நகர்கிறதா என்பதை கவனிக்கவும்.
பிறகு முன்புற பானட்டைத் திறந்து பேட்டரி வயர்கள் சரியாக உள்ளனவா, அதில் துரு பிடித்திருக்கிறதா, பேட்டரி லீக் உள்ளதா என்று பார்க்கவும். பேட்டரிக்கான உத்தரவாத அட்டையை கண்டிப்பாக வாங்கவும். என்ஜின் ஸ்டார்ட் ஆன சமயத்தில் காரினுள் சத்தம் எந்த அளவு உள்ளது என்பதை பார்க்கவும். வினோதமான சத்தம் வந்தால் அதை கவனிக்கவும். ஆக்சிலரேட்டரை அழுத்தினாலும் என்ஜின் அதிர்வு அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. என்ஜின் இயங்கிக் கொண்டிருக்கும்போது பின்பகுதியில் சைலன்சரை பார்க்கவும். புகை வெளியாகிறதா என்று பார்க்கவும். புதிய கார் கருப்பு புகையை வெளியிடாது.
முகப்பு விளக்கு, பின்புற விளக்கு, இன்டிகேட்டர் ஆகியன செயல்படுகிறதா என்பதை பார்க்கவும். டயரின் காற்று அழுத்தத்தை சோதித்த பிறகு அந்த காரை சிறிது தூரம் ஓட்டிப் பாருங்கள். அப்போதுதான் காரின் சஸ்பென்ஷன் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளது என்பது தெரியும். கார் டயரின் உற்பத்தி நாளையும் பார்த்துக் கொள்ளவும். கூடுதலாக தரப்பட்டுள்ள ஸ்டெப்னி டயர் மற்றும் ஜாக்கி போன்றவற்றையும் பார்வையிட வேண்டும்