இனி ஈசியாக சர்ச் ஹிஸ்டரியை நீக்கலாம்!’ – கூகுளின் அதிரடி மாற்றங்கள்
26 Oct,2018
பயன்பாட்டாளர்களின் தகவல்களைப் பாதுகாப்பதில் மெத்தனம் காட்டுகிறது கூகுள் எனத் தொடர்ந்து சர்ச்சைக்குப் பின் சர்ச்சை கடந்த மாதங்களில் வந்துகொண்டே இருக்கிறது. இதனால் கடும் நெருக்கடிக்குள்ளான கூகுள் இனி பயன்பாட்டாளர்களே தங்களது தகவல்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களைக்
கண்காணிக்க மற்றும் முறைப்படுத்த எளிதான வழிமுறைகளைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் முதலில் கூகுள் சர்ச்சில் இருந்து தொடங்குமாம்.
இந்த திட்டத்தின்படி பயன்பாட்டாளர்கள் எளிதாக தங்களது சர்ச் தொடர்பான தகவல்களைப் பார்க்கவோ, மாற்றவோ முடியும். மேலும் ப்ரைவசி கண்ட்ரோல்களையும், எப்படி கூகுள் நிறுவனம் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகிறது என்பதையும் எளிதாக இனி பார்க்கமுடியும்.
இந்த சர்ச் ஹிஸ்டரி பார்க்கும் மற்றும் மாற்றும் வசதிகள் ஏற்கெனவே இருந்தாலும் அவற்றைப் பார்க்க கூகுள் அக்கௌன்ட் செட்டிங்ஸ் வரை சென்று தேட வேண்டியதிருக்கும். பலருக்கும் அது எங்கு இருக்கிறதென்றே தெரியாது. தற்போது நேரடியாக சர்ச் செய்யும்போதே இடதுபுறத்தில் இருக்கும் மெனுவிலேயே இதைச் சென்று பார்க்கமுடியும். இதைப்பற்றி விரிவாக விளக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது கூகுள்.
ப்ரைவசி கண்ட்ரோல்ஸையும் இதேப் போன்று எளிமைப்படுத்தியுள்ளது கூகுள். சர்ச் செய்யும்போது எந்த விளம்பரங்களைப் பார்க்கலாம் எவற்றைத் தவிர்க்கலாம் என்பதை ‘Ad Settings’ பிரிவில் மாற்றிக்கொள்ளலாம். மேலும், எந்தெந்த தகவல்களை கூகுள் சேமிக்கலாம் என்பதையும் கண்ட்ரோல் செய்யலாம். இதுபோன்ற மாற்றங்கள் மேப்ஸ் போன்ற மற்ற சேவைகளுக்கும் விரைவில் வருமாம்.