வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டில் இனி அந்த பிரச்சனை இருக்காது
04 Oct,2018
வாட்ஸ்அப் செயலியில் ஸ்வைப் டு ரிப்லை அம்சம் சமீபத்தில் வழங்கப்பட்டது. தொடர்ந்து புதிய அம்சங்களை பயனர்களுக்கு வழங்கி வரும் வாட்ஸ்அப் இம்முறை மற்றொரு புதிய அம்சத்தை வழங்கி வருகிறது. பிக்சர்-இன்-பிக்சர் மோட் என அழைக்கப்படும் புதிய அம்சம் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோக்களை வாட்ஸ்அப் செயலியினுள் பார்க்க வழி செய்யும்.
ஆன்ட்ராய்டு தளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அம்சமாக பிக்சர்-இன்-பிக்சர் மோட் இருந்தது. வாட்ஸ்அப் புதிய அப்டேட் விவரங்களை வழங்கி வரும் WABetaInfo செயலியில் புதிய அம்சம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு 2.18.301 தளத்தில் புதிய அம்சம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வாட்ஸ்அப் பதிப்பை பயன்படுத்துவோர் புதிய அம்சம் கிடைக்கவில்லை எனில், வாட்ஸ்அப் செயலியை பேக்கப் செய்து ரீ-இன்ஸ்டால் செய்யலாம் என கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களின் வீடியோ லின்க்கள் பகிர்ந்து கொள்ளப்படும் போது பிக்சர்-இன்-பிக்சர் மோட் ஆக்டிவேட் ஆகும். இதை கிளிக் செய்யும் போதே பிக்சர்-இன்-பிக்சர் மோட் தெரியும், இதை கொண்டு தொடர்ந்து சாட் செய்ய முடியும்.
சாட் ஸ்கிரீனை தொடரும் போது இந்த அம்சம் மறைந்துவிடும். வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். வெர்ஷனில் இவ்வாறு இருக்காது என்பதால், ஆன்ட்ராய்டு தளத்திற்கான அம்சம் மாற்றப்படலாம் என தெரிகிறது.