போன் பறக்கும்?!' VIDEO
16 Sep,2018
போன் பறக்கும்?!'
2030-ல் மொபைல் போன்கள் பறக்கலாம்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார் நடிக்கும் 2.0 படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. யூடியூப்பில் 3 மொழிகளையும் சேர்த்து மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இதைப் பார்த்துள்ளனர். டீசரில் வருவதைப் போல் போன்களை ஹேக் செய்வது கூட சரி, அது எப்படிப் பறந்து அந்த உருவங்களை உண்டாக்க முடியும் என்று யோசித்ததில் இதனால் இருக்குமோ என்று சில விஷயங்கள் பிடிபட்டன.
எந்திரன் படத்தின் முடிவு அனைவருக்கும் நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன். செயற்கை நுண்ணறிவு ( Artificial Intelligence ) அருங்காட்சியகத்தில் பாகங்கள் பிரிக்கப்பட்ட சிட்டி ரோபோ பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அதை மாணவர்கள் வந்து பார்வையிட்டு செல்வார்கள். இது நடக்கும் காலம் 2030. தற்போது டீசரில் சிட்டியை வைத்துத்தான் நடக்கும் பிரச்னைகளுக்கு முடிவுகட்ட முடியும் என்று வசீகரன் அறிமுகப்படுத்தும் போது சிட்டி அதே அருங்காட்சியகத்தில் இருப்பது போல டீசரில் காட்டப்படுகிறது. இதன் மூலம் இது 2030-க்கு பிறகு நடைபெறும் கதை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இன்னும் பதினைந்து வருடங்களில் என்ன கண்டுபிடிப்புகளால் இந்த போன்கள் பறந்திருக்க முடியும் என்று யூகிப்போம்.
செல்ஃபி ஸ்டிக்குகளுக்கு பதிலாகப் போனே கொஞ்சம் தூரம் வரை அந்தரத்தில் பறந்து போட்டோ எடுக்கும் தொழில்நுட்பம் அப்போது வந்திருக்கலாம். இன்றே இதைச் செய்ய சிலர் முயற்சி செய்து வருகின்றனர். இப்போதிருக்கும் ட்ரோன் கேமராக்களுக்குப் பதிலாகக் கூட போன்களை வருங்காலத்தில் நாம் பயன்படுத்தலாம். ஏற்கெனவே எல்.ஜி நிறுவனம் ட்ரோன் போன் ஒன்றை வெளியிடப்போகிறது என்று ஒரு வதந்தி வீடியோ வைரல் ஆனது. மேலும் கையடக்கத்தில் ஏர்செல்ஃபி என்னும் சிறிய ட்ரோன் கேமராக்கள் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டன. மேலும், வெறும் மோட்டார்களின் மூலம் ஓடும் சுழலிகள் உதவியுடன் போனை பறக்கச் செய்யும் வீடியோ ஒன்றை இந்தியர் ஒருவர் பதிவிட்டிருந்தார். இது எந்தளவு உண்மை என்பதும் தெரியவில்லை.
ஆனால் படத்தில் எந்த ஒரு கூடுதல் பாகமும் போன்களில் இணைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சுழலிகள் எதுவும் இல்லாமல் இதைச் செய்ய வைப்பது தற்போதைக்கு நடக்காத ஒரு காரியமே. வேற என்னவாக இருக்கும்? ஒரு வேளைக் காந்த சக்தியோ என்று பார்த்தால் அதுவாக இருக்கவும் வாய்ப்பில்லாதது போலவே தெரிகிறது. போனில் இருக்கும் மேக்னெட்டோமீட்டர் காந்த சக்தியால் ஈர்க்கப்படும் என்பது உண்மை தான். காந்த சக்தி கூடுதலாக இருந்தால் போனும் காந்தமாக மாறிவிடும். ஆனால் போன்கள் பறக்கும் அளவுக்கு ஈர்க்கவேண்டும் என்றால் காந்த சக்தி மிகவும் அதிகமாக இருக்கவேண்டும். 10 டெஸ்லா அளவிற்குக் காந்த சக்தி போய்விட்டாலே போன் வேலை செய்யாமல் பழுது அடைந்து விடுமாம். இதில் எங்கே பறக்க வைத்து போன்களின் டிஸ்பிளேகளை கொண்டு அக்ஷய் குமார் முகத்தையெல்லாம் கொண்டு வருவது. அதுவும் குறிப்பாக போன்களை மட்டும் எப்படி காந்த சக்தி கொண்டு ஈர்க்க முடியும்?
இதைத்தவிர வேற ஒரு ஐடியாவும் சிக்குற மாதிரி தெரியல. படத்தைப் பொறுமையா ரிலீஸ் அப்போ பார்த்தாலே தெரியப் போகுது, இந்த வெட்டி ஆராய்ச்சி எல்லாம் எதுக்குனு நீங்க கேட்கலாம். எல்லாம் ஒரு ஆர்வம்தான். உங்களுக்கு, வேற என்னவா இருக்கும்னு ஒரு ஐடியா வந்தா மறக்காம கமென்ட்ல சொல்லிட்டு போங்க மக்களே!
'ஒரு வேளை எல்லாரும் ஃப்ளைட் மோட ஆன் பண்ணி வச்சிருப்பாங்களோ!'