உலகை உலுக்கும் ‘மோமோ’ சவால். பின்னணி என்ன?
01 Aug,2018
அவளது பெயர் ”மோமோ”. மனதை பாதிக்கும் வகையில் தோன்றும் அவள் வெளிர் தோலுடன், வீங்கிய கண்களுடன் கெட்டச் சிரிப்பை உதிர்க்கிறாள்.
அவளது முகம் தற்போது உலகம் முழுவதும் வாட்ஸ்அப் வழியாக பிரபலமானதாக மாறியிருக்கிறது.
யார் இந்த மோமோ?
அவள் உங்களது ஸ்மார்ட்ஃபோன் திரையில் திடீரென தோன்றக்கூடும் மேலும் தைரியமிருந்தால் சவாலில் பங்கெடுங்கள் என ஓர் சவாலையும் விடலாம்.
இதில் பங்கெடுத்தால் உங்களை மன ரீதியாக பாதிக்கும் வகையிலான விஷயங்கள் நடக்கக்கூடும்.
லத்தீன் அமெரிக்க அதிகாரிகள் இது போன்ற செய்திகளை மக்கள் தங்களுக்குள் பரப்ப கூடாது என அறிவுறுத்தியுள்ளது மேலும் இந்த ஆன்லைன் விளையாட்டு எல்லையை மீறக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
”இது எல்லாமே ஒரு பேஸ்புக் பக்கத்தில் இருந்துதான் துவங்கியது. ஒரு குழுவைச் சேர்ந்த சிலர் முன் தெரிந்திராத ஒரு எண்ணில் இருந்து அழைப்புவிடுக்க முடியுமா என ஒருவொருக்கொருவர் சவால் விட்டுக்கொண்டனர்” என்கிறது மெக்சிகோ யுஐடிஐ காவல்துறை.
”மோமோவுக்கு நீங்கள் செய்தி அனுப்பினால் பதிலுக்கு அவள் வன்முறையை சித்தரிக்கும் விதமான படங்களை அனுப்புவாள் என பல பயனர்கள் கூறுகின்றனர்.
சிலர் அச்சுறுத்தும் செய்திகளை மோமோ அனுப்பியதாகவும் மேலும் சம்பந்தப்பட்ட தனிநபரின் தகவல்கள் அதில் வெளிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்” என்கிறது மெக்சிகோ காவல்துறை.
மோமோ சவாலானது தற்போது அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் வரை, அர்ஜென்டினாவில் இருந்து நேபாளம் வரை உலகம் முழுவதும் பரவிவருகிறது.
ஸ்பெயினில் ”சமூக ஊடகத்தில் புதுப்போக்காக உருவெடுத்துவரும் இது போன்ற அபத்தமான சவால்களை மக்கள் தவிர்க்க வேண்டும்” என அந்நாட்டு காவல்துறை மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.
மெக்சிகோவின் பாணியில் ஸ்பெயின் காவல்துறையும் டிவிட்டரில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த சவாலில் பங்கெடுப்பதை கைவிடுங்கள் என ஊக்கமிழக்கச்செய்யும் பணியை செய்து வருகிறது.
#PasaDeChorradas எனும் ஹேஷ்டேகை பயன்படுத்தி இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. முட்டாள்தனத்தை புறக்கணியுங்கள் #IgnoreNonsense என்பதே இந்த ஹேஷ்டேகின் பொருள்.
காவல்துறையின் இந்த எச்சரிக்கைகள் ஒருபக்கமிருக்க, மோமோ என்பது என்ன? அது எங்கிருந்து துவங்கியது என்பதில் இன்னமும் நிறைய குழப்பங்கள் இருக்கவே செய்கிறது.
எங்கிருந்து வந்தது?
Where did it come from? எனும் கேள்வி ஆன்லைன் முழுவதும் கொட்டிக்கிடக்கிறது. ஆன்லைன் தளமான ரெட்டிட்டில் சமீபத்தில் அதிகம் படிக்கப்பட்ட இக்கேள்வி இது.
”நான் ஒரு காணொளியை கண்டேன். அது விரும்பத்தகாத வகையில் காணப்படுகிறது. நான் இது ஒரு சேட்டைத்தனமான விஷயம் என நினைக்கிறேன். ஆனால் என்னால் உறுதியாக சொல்லமுடியவில்லை” என ஒரு பதிவு இருக்கிறது.
அதற்கு பயனர்கள் மத்தியில் பிரபலமான விடை : ” ஸ்பானிஷ் மொழி பேசும் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இன்ஸ்ட்டாகிராமில் இருந்து இந்த புகைப்படத்தை அவர் விரும்பியவாறு வெட்டி சுருக்கிவைத்துக் கொண்டார் (Crop).
மேலும் ஒரு வாட்ஸ்அப் கணக்கையும் துவங்கிவிட்டார். மக்கள் அந்த எண்ணை கண்டுகொண்டவுடன் வதந்திகள் பரவத்தொடங்கின. அதோடு நீங்கள் தொடர்பில் இருந்தால் அவள் வன்முறையான, மனதை பாதிக்கும் விதமான செய்திகளையும் படங்களையும் அனுப்புவாள்” என்பதாகும்.
சில பயனர்கள் ”அவள் உங்களது அந்தரங்க தகவல்களை அணுகுகிறாள்” என்றும் தெரிவித்துள்ளனர்.
ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டிருக்கும் யூடியூப் பிரபலம் ரெயின்போட் இந்த நூதன நிகழ்வு குறித்து ஜூலை 11 அன்று ஒரு காணொளியை வெளியிட்டார்.
15 லட்சத்துக்கும் அதிகாமானோரால் அக்காணொளி பார்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் ரெயின்போட்டிற்கு இந்த மோமோ சவால் உருவாக்கியது யார் என்பது குறித்து தெரியவில்லை.
நமக்குத் தெரிந்தது என்னவெனில் இந்த வாட்ஸ்அப் சவாலானது மூன்று மொபைல் நம்பரோடு தொடர்புடையதாக இருக்கிறது .
ஜப்பான் நாட்டின் குறியீடு (+81), கொலம்பியா நாட்டின் குறியீடு (+52) மற்றும் மெக்சிகோ (+57) ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது .
இந்த சவால் எங்கிருந்து துவங்கியது என்பதைச் சொல்வது மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. ஆனால் இந்த மோமோ என அறியப்படும் அந்த புகைப்படம் ஜப்பானில் இருந்து வந்திருக்கிறது.
மோமோவின் விரும்பத்தகாத முகமானது 2016-ல் டோக்கியோ நகரத்திலுள்ள வெண்ணிலா கேலரியில் நடந்த கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிலை ஒன்றுக்குச் சொந்தமானது.
விசித்திரமான மற்றும் அவலட்சணமான சிலை, ஓவியம், புகைப்படங்கள் போன்றவைகளின் சேகரிப்புகளை வெண்ணிலா கேலரி விரும்புகிறது.இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த பேய்கள், ஆவிகள் குறித்த கண்காட்சியில் அனைவரையும் ஈர்க்கும் ஒன்றாக ‘மோமோ’ இருந்தது.
அப்போது நிறைய பேர் மோமோவுடன் படம் எடுத்துக்கொண்டனர். இன்ஸ்ட்டாகிராமில் இப்படங்கள் நிறைய காணப்பட்டன.
யாரோ ஒருவர் இன்ஸ்ட்டாகிராமில் இருந்து அப்படங்களை அவர்களிடம் ஏற்றவாறு திருத்தி முற்றிலும் வேறான ஒன்றாக மாற்றியமைத்தனர்.
அபாயங்கள் என்ன?
மோமோவுடன் விளையாடுவதிலுள்ள அபாயங்கள் என்ன?
முன்பின் அறியாத எண்ணுடன் தொடர்பு கொள்வது நல்ல யோசனை அல்ல. ஆனால் நீங்கள் ஏன் மோமோவை தவிர்த்து கடந்துபோக வேண்டும் என்பதற்கு ஐந்து காரணங்கள் இருக்கிறது என்கிறது மெக்சிகோ யுஐடிஐ காவல்துறை.
உங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் விவரங்கள் திருடப்படும் அபாயம் உள்ளது
இது வன்முறையை தூண்டும். ஏன் தற்கொலை செய்யக் கூட தூண்டும்
பயனர்கள் தொந்தரவுக்கு உள்ளாகலாம்
பயனர்களை பயமுறுத்தி பணம் பறிப்பு செய்யப்படலாம்
மன அழுத்தம், பதட்டம் மற்றும் இன்சோம்னியா எனும் தூக்கமின்மை நோய் உள்ளிட்டவற்றால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படலாம்.
புது ”புளூ வேல்”
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு வைரலான குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரை தற்கொலை செய்துகொள்ள தூண்டியதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய புளூ வேல் சவாலுடன் மோமோ சவால் ஏற்கனவே ஒப்பிடப்பட்டு வருகிறது .
புளுவ வேல் சவால் ரஷ்யாவிலிருந்து துவங்கினாலும் விரைவிலேயே சமூக வலைதளம் வாயிலாக உலகம் முழுவதும் பரவியது.
”மோமோ”’ வாட்ஸ்அப் வாயிலாக பரவத்தொடங்கினாலும் குழந்தைகளுக்கான விளையாட்டான மைன்கிராஃப்ட் மூலமாக அதிகளவு கவனம்பெற்றுள்ளது.
அறியப்படாத எண்ணுடன் தொடர்பு கொள்ளவோ, அதனுடன் குறுஞ்செய்தி இணைப்புகளில் இணையவோ வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள் இணைய குற்றவியல் வல்லுனர்கள்.