எத்தியோப்பியாவில் செய்தியாளர்களை சந்திக்க இருந்த சோஃபியா ரோபோட்
                  
                     02 Jul,2018
                  
                  
                      
					  
                     
						
	எத்தியோப்பியாவில் செய்தியாளர்களை சந்திக்க இருந்த சோஃபியா ரோபோட்
	சௌதி அரேபியாவில் குடியுரிமை அளிக்கப்பட்ட சோஃபியா என்ற மனித வடிவ ரோபாட் தனது எத்தியோப்பியப் பயணத்தின்போது செய்தியாளர் சந்திப்பு நடத்தி உள்ளூர் மொழியான அம்ஹாரிக் மொழியில் பேசத் திட்டமிடப்பட்டிருந்தது.
	 
	இந்த புகழ் பெற்ற ரோபோட் எத்தியோப்பியா கொண்டுவரப்படும் வழியில், ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் இதன் முக்கியப் பாகங்கள் அடங்கிய பை ஒன்று காணாமல் போய்விட்டது. இதனால் வெள்ளிக்கிழமை எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நடக்க இருந்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
	 
	ஹாங்காங்கை சேர்ந்த ஹான்சன் ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனம் வடிவமைத்த இந்த சோஃபியா ரோபோட் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கனடா சென்றிருந்தது சோஃபியா. தற்போது மூன்று நாள் பயணமாக எத்தியோப்பியா வந்த இந்த ரோபோட் எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுவுடன் இரவு விருந்தில் பங்கேற்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது.
	2015ல் செயல்பாட்டுக்கு வந்த இந்த ரோபோட் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாகப் பேசவிருந்த இரண்டாவது மொழி எத்தியோப்பியாவின் அதிகாரபூர்வ மொழியான அம்ஹாரிக்தான்.