சாம்சங்கை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் முதலிடம்
02 Feb,2018
சான்ஃபிரான்சிஸ்கோ: சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2017-ம் ஆண்டின் நான்காவது காலாண்டு விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச டேட்டா கார்பரேஷன் சார்பில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி உலகம் முழுக்க 40.35 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டை விட 6.3% குறைந்திருக்கிறது. எனினும் 2017-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டை விட 8.1 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. கடந்த ஆண்டு முழுக்க சுமார் 140 கோடு ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 1 சதவீதம் குறைவு ஆகும். சீனா மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் புதிய மற்றும் விலை உயர்ந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வாங்க ஆர்வம் செலுத்தவில்லை என சர்வதேச டேட்டா கார்பரேஷன் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் டாப் 5 இடங்களை பிடித்த நிறுவனங்கள் பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.
7.73 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பிடித்திருக்கிறது. சாம்சங் நிறுவனம் 7.41 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹூவாய் நிறுவனம் மூன்றாவது இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறது. ஹூவாய் நிறுவனம் கடந்த காலாண்டு நிலவரப்படி 4.1 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.
சியோமி நிறுவனம் ஒப்போவை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தையும், ஒப்போ நிறுவனம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. முந்தைய ஆண்டை விட இருமடங்கு அதிக பங்குகளை பெற்று சியோமி நிறுவனம் 2.81 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற சந்தைகளில் சியோமியின் தொடர் வளர்ச்சி இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது