தமிழ் மொழிபெயர்ப்பு செயலி மைக்ரோசாஃப்ட் அறிமுகம்
08 Dec,2017
சர்வதேச அளவில் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தமிழ் மொழி பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 தளத்தில் இது கிடைக்கிறது. உலகம் முழுவதும் 60 மொழிகளில் மொழி பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது தமிழுக்கும் மொழி பெயர்ப்பானை அறிமுகம் செய்துள்ளது.
தமிழ் பேசும் மக்கள் உலகின் பல பாகங்களிலும் உள்ளனர். சுமார் 7 கோடி பேரின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இந்த மொழி பெயர்ப்பு வசதி இருக்கும் என்று நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. பிங்க் மொழிபெயர்ப்பு தளத்தில் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
தவிர மைக்ரோசாஃப்ட் மொழிபெயர்ப்பு செயலியிலும் (ஆப்) இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
தமிழ் பேசுபவரிடம் மைக்ரோசாஃப்ட் மொழி பெயர்ப்பு செயலி இருந்தால், மாற்று மொழியில் பேசும் நபரின் பேச்சு விவரம் உங்களது மொபைலில் தமிழ் எழுத்துகளாக வரும்.
வாக்கியத்தை அளித்தால் அதற்குரிய தமிழ் பதத்தை அளிக்கும் வசதியை 60 மொழிகளுக்கு இந்த செயலி வழங்குகிறது. மைக்ரோசாஃப்ட் வேர்டு, எக்ஸெல், பவர் பாயிண்ட், அவுட்லுக் உள்ளிட்ட தளங்களிலும் இந்த வசதியை பயன்படுத்தலாம்.
ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் உள்ள மொழி பெயர்ப்புகளை மைக்ரோசாஃப்ட் மொழி பெயர்ப்பு செயலியில் பயன்படுத்த முடியும்.
குறிப்பிட்ட வாக்கியத்தை பதிவு செய்து அது எந்த மொழியில் மொழி மாற்றம் செய்ய வேண்டும் என்பதை பதிவு செய்தால் தேர்வு செய்த மொழி மாற்றத்தில் அந்த பதிவு கிடைக்கும்.
இதற்கான இணையதள முகவரி: https://www.bing.com/translator