அரசியல் சார்ந்த விளம்பரங்களின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த வேண்டிய அழுத்தத்தின் கீழ் தொழில்நுட்ப நிறுவனங்களின் உள்ளன.
பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், தனது வலைதளத்தில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை இன்னும் வெளிப்படையான வகையில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
அரசியல் சார்ந்த விளம்பரத்தாரர்கள் அவர்களின் அடையாளத்தையும், இருப்பிடத்தையும் உறுதிசெய்ய வேண்டும். மேலும், அவர்களின் பதிவுகளில் "யாருக்காக யார் பணம் செலுத்தியது" என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
ரஷ்யாவை சேர்ந்த குழுக்கள் சமூக வலைதள விளம்பரங்களை பயன்படுத்தி அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து இந்நடவடிக்கைகளை ஃபேஸ்புக் எடுத்துள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் பிற இணைய நிறுவனங்களின் நிர்வாகிகள் வரும் செவ்வாயன்று நடக்கவிருக்கும் அமெரிக்க செனட் சபையின் விசாரணையின் முன் ஆஜராக உள்ளனர்.
"ஃபேஸ்புக்கிற்கு வரும் வாடிக்கையாளர்கள், அவர்கள் பார்க்கும் விளம்பரங்களை யார் ஏற்படுத்துவது மற்றும் குறிப்பாக அரசியல் சார்ந்த எந்த விளம்பரங்களை எல்லாம் அவர்கள் செய்கிறார்கள் என்பதை அறியும் வகையில் இருக்க வேண்டும்," என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் விளம்பரப் பிரிவு துணைத்தலைவர் ராப் கோல்ட்மேன் வலைப்பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பயனாளர்கள் "யாருக்காக யார் பணம் செலுத்தியது" செலுத்தியது என்பதை தெரிவு செய்தவுடன் அந்த விளம்பரத்தாரரை பற்றிய மேலதிக விவரங்களை பார்க்கும் வகையில் இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
தன்னுடைய பிரச்சாரத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று டிரம்ப் மறுத்துள்ளார்.
ஃபேஸ்புக் அனைத்து விளம்பரங்களுக்கும் வெளிப்படையான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதாகவும், அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் இணைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. எல்லா பக்கங்களும் இயக்கும் விளம்பரங்களையும் பயனர்கள் காண முடியும்.
புதிய திட்டங்களுக்கான சோதனைகள் கனடாவில் தொடக்கப்பட்டு, அதன் பின்னர் அமெரிக்காவில் வரும் 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவுள்ள இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாகவே அங்கு இதை செயல்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு இது செயற்படுத்தப்படுகிறது.
ரஷ்ய ஆதரவு குழுக்கள் தங்களது விளம்பரத் தளங்களை தவறாக பயன்படுத்துவதை கண்டறிந்த பின்னர், தொழில்நுட்ப நிறுவனங்கள் அதை தங்களின் சுய-ஒழுங்குமுறை மூலமாவே கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.
செவ்வாய் கிழமையன்று, ட்விட்டரும் இதே போன்ற வெளிப்படையான நடவடிக்கைகளை அறிவித்தது. தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கான அடையாளங்கள் மற்றும் அவர்களுக்கு நிதியளித்தவர்கள் பற்றிய மேலதிக விவரங்கள் உட்பட பல நடவடிக்கைளை அறிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனம், 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் மிகப்பெரிய செய்தி ஊடகங்களான ரஷ்ய டுடே (RT), ஸ்புட்னிக் ஆகிய இரண்டிற்கும் தலையீடு இருப்பதாக அஞ்சப்படுவதால் அவற்றின் விளம்பரங்களை வாங்குவதை தவிர்த்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாகக் கூறிப்படுவதை ரஷ்யா மீண்டும் மறுத்துள்ளது. ஆனால் இதுதொடர்பாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையில் உள்ள சாத்தியமான தொடர்பைப் பற்றிய விசாரணையை தூண்டியுள்ளது. டொனால்ட் டிரம்ப்போ தனக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்கிறார்.