தண்டவாளம் இல்லாமல் இயங்கும் உலகின் முதல் ’ஸ்மார்ட் ரயில்’!
25 Oct,2017
ஹூவான் மாகாணத்தின் ஜூஜோ நகரில் இந்தச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சாதாரண ரயில்களைப் போலல்லாமல், வாகனங்கள் பயணிக்கும் சாலைகள் வழியாகவே ஓடும்வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலையின் ஓரத்தில் தண்டவாளங்களைப் போன்று வரையப்பட்ட கோடுகளின் வழியே பயணித்த ரயிலுக்கு ஜூஜோ நகர்வாசிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 300 பேர் வரை பயணிக்கும் வகையில் மூன்று பெட்டிகளாக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். ஜூஜோ நகரில் 3.1 கி.மீ. சாலையில் 4 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
ஏஆர்டி (Autonomous Rail Rapid Transit) என்றழைக்கப்படும் இந்த ரயிலை சீனாவின் சிஆர்ஆர்சி கார்ப்பரேஷன் நிறுவனம் வடிவமைத்துள்ளது. சீனாவின் அதிவேக ரயில்களை வடிவமைத்துக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் நிறுவனம் அது. 12.3 அடி நீளம் கொண்ட ஸ்மார்ட் ரயில் அடுத்தாண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று சீனா அறிவித்துள்ளது. சீனாவின் மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களுள் ஒன்றான ஜூஜோவில் முதலில் அறிமுகப்படுத்தப்படும் இந்த ஸ்மார்ட் ரயில் சேவை மற்ற நகரங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.