ஒரு நொடியில் 5 ட்ரில்லியன் படங்கள் எடுக்கும் உலகின் அதிவேக கேமரா!
06 May,2017
ஸ்வீடனில் இருக்கும் லண்ட் பல்கலைக்கழக (Lund University) ஆய்வாளர்கள் உலகின் அதிவேக கேமராவைக் கண்டுபிடித்து சாதனை
படைத்துள்ளனர். பென் கேமரா, ஸ்க்ரூ கேமரா, கோட் ஹூக் கேமரா என கேமராவின் வடிவங்கள் அடுத்தக்கட்டத்தை தாண்டி போய்க்கொண்டிருகின்றன. தற்போது பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கேமராக்கள், ஒரு நொடியில் ஒரு லட்சம் புகைப்படங்கள் வரை படமெடுக்கும் தன்மை கொண்டது. ஆனால் இந்த சூப்பர் ஃபாஸ்ட் கேமரா ஒரு நொடியில் ஐந்து ட்ரில்லியன் (ஐந்து லட்சம் கோடி) வரை படமெடுக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒளியின் நகர்வைக் கூட படமெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களைத் தொகுத்து வீடியோவாக மாற்ற முடியும்
இந்த கேமராவைக் கொண்டு ஒளியின் ஃபோட்டான் துகள்கள் பேப்பரில் ஊடுருவதை வெற்றிகரமாகப் படம்பிடித்து ஆய்வாளர்கள் சாதனை படைத்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த கேமராவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வேதியியல் மாற்றங்கள், ஒளி ஊடுருவல் போன்ற அதிவேகமாக நடைபெறும் செயல்களைப் படம்பிடிக்க முடியும். மேலும், அதிவேகமான செயல்கள் எப்படி நடக்கிறது, அப்போது என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது பற்றியும் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.