வயர் இணைப்பின்றி ஸ்பீக்கர்களை, புளுடூத் தொழில் நுட்பம் மூலம் இணைத்து இசையை ரசிப்பது இப்போது பலரின் வழக்கமாக மாறிவிட்டது. மொபைல் போனை பாக்கெட்டில் வைத்து, ஹெட் போனை மட்டும் தலையில் மாட்டிக் கொண்டு, இரு காதுகளில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் வழியாக, மொபைல் போனில் இருந்து ஒலிக்கும் பாடல்களை கேட்பது நடைப் பயிற்சியின் ஓர் அம்சமாக மாறிவிட்டது.
இதே போல, கம்ப்யூட்டர்களில் பணியாற்றும்போதும், புளுடூத் மூலம் சிறிய ஸ்பீக்கர்களுக்கு இணைப்பு கொடுத்து, இசையை ரசித்தவாறே பணியாற்றுவதும் வழக்கமாகி வருகிறது. இதனாலேயே, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிய பல வாசகர்கள், விண்டோஸ் 10 சிஸ்டத்தில், புளுடூத் இயக்கம் சரியாகச் செயல்படவில்லை என கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். இவர்கள் தரும் பிரச்னைகள் பலவிதமாக உள்ளன.
அதற்கான தீர்வுகளை இங்கு காணலாம்.
பெர்சனல் கம்ப்யூட்டர்கள் சார்பாக நாம் வாங்கும் துணை சாதனங்கள் பெரும்பாலும், வயர் இணைப்பின்றி, புளுடூத் வழி இணைப்பதாகவே உள்ளன. ஸ்பீக்கர்கள், பிரிண்டர்கள் அல்லது, மானிட்டர் திரைகள் என இவை இருக்கலாம். இவை அனைத்தும் வயர் இணைப்பின்றி, டேட்டாவினை அனுப்பிப் பெறும் தொழில் நுட்பத் திறனைக் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். இவை நமக்குக் கிடைத்த கூடுதல் வசதிகள். ஆனால், இவை செயல்படாமல் சிக்கலை ஏற்படுத்துகையில் தான் நமக்கு சிரம திசை தொடங்கும். இவற்றை எப்படி நீக்குவது என இங்கு சில குறிப்புகளைப் பார்க்கலாம்.
விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இத்தகைய புளுடூத் சிரமங்கள், அந்த சிஸ்டத்திற்கே உரித்தானவை என்று கருதினால் அது தவறு. எந்த விண்டோஸ் இயக்கத்திலும் இது போன்ற பிழைகள் ஏற்படலாம். இந்த பிரச்னை குறித்து ஆழமாகப் பார்க்கும் முன், இந்த தொழில் நுட்பம் குறித்து சில அடிப்படைகளைக் காணலாம்.
முதலாவதாக, புளுடூத் தொழில் நுட்ப இயக்கம், நாம் இணைய வைத்திடும் இரு சாதனங்களிலும் இயக்க நிலையில் இருக்க வேண்டும். பெர்சனல் கம்ப்யூட்டரை எடுத்துக் கொண்டால், ஸ்டார்ட் மெனு திறந்து Settings>Devices எனச் செல்லவும். Devices பிரிவில், Bluetooth என்பதனைத் தேடி அறியவும். இது இடதுபக்கம் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் காணப்படும். இதனை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
தேர்ந்தெடுத்தவுடன், Manage Bluetooth Devices என்ற தலைப்பில், முதலாவதாக, புளுடூத் தொழில் நுட்பத்தினை இயக்க, On / Off என்ற நிலைகள் காட்டப்படும். இந்த ஸ்லைடர் பட்டனை On பக்கம் தள்ளி வைக்கவும். உடன், ஏற்கனவே இணைக்கப்பட்ட சாதனங்களின் பெயர்கள், மாடல் எண் உடன் காட்டப்படும். இது உங்கள் கம்ப்யூட்டர், அதன் அருகே உள்ள புளுடூத் கொண்ட, இணையக் கூடிய சாதனங்களைத் தேடி அறியக் காட்டும் வழியினைத் திறக்கும். அந்த சாதனங்கள் இது போல், உங்கள் கம்ப்யூட்டரை அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அதற்கு, இதன் கீழாக உள்ள, Related Settings என்ற பிரிவில், More Bluetooth Options என்ற பிரிவினைக் கிளிக் செய்திடவும். இப்போது தனியே ஒரு கட்டம் Bluetooth Settings என்ற பெயருடன் காட்டப்படும். இதில், Allow Bluetooth devices to find your PC என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இதன் மூலம், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டருக்கு அருகில் உள்ள சாதனங்கள், உங்கள் கம்ப்யூட்டரை, அதன் பெயரைக் காட்டி அடையாளம் காட்டும்.
இனி, மீண்டும் Bluetooth பிரதான பிரிவிற்கு வரவும். இப்போது, உங்கள் கம்ப்யூட்டர் அருகில் உள்ள புளுடூத் சாதனம் அடையாளம் காட்டப்படும். இணைக்கப்பட்ட சாதனங்கள் Paired என்றும், இணைப்பு ஏற்படுத்தப்படாத சாதனங்கள், Ready to pair என்றும் பட்டியலிடப்பட்டிருக்கும். Ready to pair என்று அடையாளம் காணப்பட்ட சாதனைத்தை இணைக்க வேண்டும் எனில், அதில் Pair என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.
இங்கு ஒரு பிரச்னையைப் பார்க்கலாம். ஒரு சிலர், நான் வைத்திருக்கும் ஸ்பீக்கர் அல்லது பிரிண்டரை, கம்ப்யூட்டர் காட்டவில்லை என்று கூறுகின்றனர். அப்படிக் காட்டப்படவில்லை என்றால், அந்த சாதனத்தின் புளுடூத் திறன் இயக்கப்படவில்லை என்று பொருளாகிறது. சில சாதனங்களில், இந்த இயக்கும் செயல்பாடு B என எழுத்து கொண்ட ஒரு ஸ்விட்ச் மூலம் மேற்கொள்ளப்படும். அப்படி இல்லாத சாதனங்களில், அதனை இயக்கும் ஸ்விட்ச் On செய்யப்பட்டவுடன், ஏதேனும் மெனு காட்டப்பட்டால், அதில் புளுடூத் இயக்கம் குறித்த தகவல் காட்டப்படும். அப்படியும் தெரியவில்லை என்றால், அந்த சாதனத்தைத் தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் இணைய தளம் சென்று அறிந்து கொள்ளலாம். முதலில், அந்த சாதனம் புளுடூத் திற வழியில் இணைக்கப்படக் கூடியதாகத் தயார் செய்யப்பட்டுள்ளதா என்பதனை, அந்த தளத்திலேயே உறுதி செய்து கொண்டு, பின்னர் இயக்கும் வழிகளைத் தேடி அறியவும்.
இரண்டு சாதனங்களிலும், (கம்ப்யூட்டர் + ஸ்பீக்கர்) புளுடூத் இயக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை Pair ஆக மறுக்கின்றன என்று இன்னொரு வகை பிரச்னையைக் கூறி உள்ளனர். அப்படியானால், முதலில் விண்டோஸ் 10 கம்ப்யூட்டரில், புளுடூத் சார்பான ட்ரைவர்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளனவா என்று பார்க்கவும். இதற்கு, ஸ்டார்ட் மெனு சென்று, தேடல் கட்டத்தில் Device Manager என்று டைப் செய்து தேடி, கிடைக்கும் பதில்களில் முதல் பதிலில் கிளிக் செய்திடவும்.
இதனைத் திறந்து பார்த்தவுடன், புளுடூத் ஆப்ஷன் திறந்து, நீங்கள் இணைக்க விரும்பும் சாதனம் பட்டியலில் உள்ளதா எனப் பார்க்கவும். இருந்தால், அதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். பின்னர், மீண்டும் அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். இப்போது ஆப்ஷன் மெனு கிடைக்கும். இதில் Update Driver Software என்பதனையும் Search automatically for updated driver software என்பதனையும் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இனி, விண்டோஸ் இயக்கம் தானாகவே, அந்த சாதனத்திற்கான ட்ரைவர் பைலைத் தேடி எடுத்து, சிஸ்டத்தில் பதிந்திடும். பிரச்னை தானாகத் தீர்ந்துவிடும்.
இதன் பின்னரும், அந்த சாதனம் இணைய மறுத்தால், அந்த சாதனத்தின் பெயரைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, மீண்டும் புதியதாக இணைப்பது போல, அந்த சாதனத்தைக் கண்டறிந்து இணைக்கவும். நீக்குவதற்கு இங்கு தரப்பட்டுள்ளபடி செயல்படவும். ஸ்டார்ட் மெனு சென்று, Settings>Devices>Bluetooth எனச் செல்லவும். முதன்மைப் பிரிவில், உங்கள் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்தவுடன் கொடுக்கப்படும் மெனுவில், அதனை நீக்க, Remove என்ற ஆப்ஷன் தரப்பட்டிருப்பதைக் காணலாம். அதனை அழுத்தி, சாதனத்தை பட்டியலில் இருந்து நீக்கவும். பின்னர், இணைப்புக்கான வழிகளை மேற்கொள்ளவும். இதற்குக் கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், சிக்கல் மற்றும் பிரச்னை தீருவதற்கான வழிகள் உள்ளன.
இந்த வழிகளில் நிச்சயம் ஏதேனும் ஒன்று, உங்கள் பிரச்னையைத் தீர்த்து, இரு சாதனங்களையும் புளுடூத் மூலம் இணைத்துத் தரும்
போலியான செக்யூரிட்டி பைல் ஜாக்கிரதை
மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் இயக்க முறைமையுடன், வைரஸ்களையும் மால்வேர் செயலிகளையும் தடுக்க Microsoft Security Essentials என்னும் செயலியை இணைத்தே வழங்கி வருகிறது. தற்போது அதைப் போன்றே போலியான செயலி ஒன்று வைரஸ் ஆக பரவி வருவதாக மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது.
(https://blogs.technet.microsoft.com/mmpc/2016/10/21/beware-of-hicurdismos-its-a-fake-microsoft-security-essentials-installer-that-can-lead-to-a-support-call-scam/)
டிஜிட்டல் உலகில் பாதுகாப்பு என்பது ஒரு பெரிய அரிதான விஷயமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக உள்ளது. நாம் வாழும் உலகம், எப்போதும் தொடர்பில் உள்ளதாக இருப்பதால், நம் கம்ப்யூட்டர்களில், ஸ்மார்ட் போன்களில் ஹேக்கர்கள் நுழைவது மிக எளிதாக உள்ளது. இதைத் தடுக்க எத்தனை செயலிகள் இருந்தாலும், அவற்றை மீறி ஹேக்கர்கள் தங்கள் வேலையைக் காட்டிக் கொண்டுதான் உள்ளார்கள்.
போலியாக வரும் மால்வேர் செயலியின் பெயர் Hicurdismos. இது செக்யூரிட்டி எசன்சியல்ஸ் செயலியை இன்ஸ்டால் செய்திடும் புரோகிராமாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது. ஆனால், இது ஒரு மால்வேர் புரோகிராம். இதை இன்ஸ்டால் செய்தவுடன், நமக்கு விண்டோஸ் சிஸ்டம் க்ராஷ் ஆனால் தரப்படும் நீல நிறத் திரை (Blue Screen of Death (BSOD)) காட்டப்படும். இது போலியான திரை. இதன் மூலம் நம்மை அதிர்வடைய வைத்து, தன் நோக்கத்தை இந்த மால்வேர் செயல்படுத்திக் கொள்கிறது.
ஆனால், ஒருவர் இந்த போலியான செயலியைத் தரவிறக்கம் செய்துள்ளாரா என்று அறிந்து கொள்ள சில வழிகள் இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
இந்த மால்வேர் புரோகிராமிற்காக setup.exe என்ற பைல் தரவிறக்கம் செய்யப்படும். ஆனால், மைக்ரோசாப்ட் இது போன்ற பெயரில் செக்யூரிட்டி எசன்சியல்ஸ் இன்ஸ்டாலர் எதையும் தருவதில்லை.
இந்த மால்வேர் தரும் நீலத் திரையில், தொடர்பு கொள்ள தகவல் தரப்பட்டிருக்கும். விண்டோஸ் கிராஷ் ஆனால் கிடைக்கும் நீலத்திரையில் அது போல தகவல்கள் எதுவும் தரப்படுவதில்லை.
மால்வேர் பைல் மிகவும் மாறுபட்ட அளவுகளில் இருக்கும். 1 எம்.பி.க்கும் குறைவாக இருக்கும். மைக்ரோசாப்ட் பைல்கள் பெரியதாக இருக்கும். இந்த பைலில் காட்டப்படும் நிறுவனத்தின் பெயரிலும் வேறுபாடு இருக்கும்.
விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10 இயக்க முறைமைகளில், செக்யூரிட்டி எசன்சியல்ஸ் செயல்பாடு, விண்டோ டிபண்டர் (Windows Defender) செயலியில் இணைக்கப்பட்டிருப்பதால், அவை தேவை இல்லை என இந்த அறிவிப்பில் காட்டப்படும்.
இந்த மால்வேர் காட்டும் நீலத் திரையில், கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டதாகக் காட்டப்படுவதுடன், தொழில் நுட்ப உதவிக்காக, உடனடியாக ஓர் இலக்கம் தரப்பட்டு அதனைத் தொலைபேசியில் அழைக்குமாறு அறிவிப்பு தரப்படும். இந்த் எண்ணை அழைக்கச் சொல்வது ஒரு ஏமாற்று செய்தியாகும். இந்த எண்ணை அழைத்தால், மறுமுனையில் பேசுபவர், கம்ப்யூட்டரில் உள்ள பிரச்னையைச் சரி செய்திட கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும் என அறிவிப்பார். உண்மையில் கம்ப்யூட்டரில் எந்தப் பிரச்னையும் இருக்காது.
இந்த மால்வேர் புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரை அடைந்துவிட்டால், அதனை விண்டோஸ் டிபண்டர் செயலியைக் கொண்டு நீக்கலாம். இதற்கு இணைய இணைப்பு தேவை இல்லை. இணைய இணைப்பு இல்லாமல், டிபண்டர் செயலியை இயக்கி, இந்த மால்வேர் புரோகிராமை நீக்கலாம். மேலும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் ரீ ஸ்டார்ட் செய்திடத் தேவை இருக்காது.
இது போல உங்கள் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம் செயல்பாடு தென்பட்டால், மைக்ரோசாப்ட் உடனே, அதனைத் தனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து தெரிவிக்க நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:
வேர்டில் டேபிளுக்கு ஆட்டோ பிட்
நாம் உருவாக்கும் ஆவணங்களில் டேபிள்களை இணைக்க வேர்ட் பல வழிகளில் நமக்கு உதவுகிறது. டேபிள் ஒன்றை இணைத்த பின்னர், அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை நாம் நம் தேவைகளுக்கேற்ப, அதில் அமைக்கப்படும் டேட்டாவிற்கிணங்க, நாம் மாற்ற வேண்டியதிருக்கும். இதற்குப் பல வழிகள் உள்ளன. இதில் முக்கியமான ஒரு வசதி இதில் தரப்பட்டுள்ள என்பதுதான்.
உங்களுடைய டேபிளின் ஒவ்வொரு நெட்டு வரிசைக் கட்டத்திலும் சிறிய அளவில் டேட்டா வைத்திருந்தால், இந்த வசதி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனைப் பயன்படுத்தக் கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.
நீங்கள் வேர்ட் 2000, 2003 பயன்படுத்துபவர்களாக இருந்தால், கீழே தரப்பட்டுள்ளபடி செட்டிங்ஸ் அமைக்கவும்.
1. சம்பந்தப்பட்ட டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
2. டேபிள் மெனுவில் உள்ள AutoFit என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது ஒரு துணை மெனுவினைக் காட்டும்.
3. இந்த துணை மெனுவில் AutoFit to Contents என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் பயன்படுத்துவது வேர்ட் 2007 அல்லது வேர்ட் 2010 ஆக இருந்தால்,
1. சம்பந்தப்பட்ட டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
2. இனி, Layout என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து, Cell Size என்ற குரூப்பில், AutoFit என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் ஒரு கீழ்விரி மெனுவினைத் தரும்.இதில் பல ஆப்ஷன்கள் கிடைக்கும்.
4. இவற்றிலிருந்து AutoFit to Contents என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இதனால் டேபிளில் ஏற்படும் மாற்றம், நீங்கள் அதன் கட்டங்களில் நிரப்பியிருக்கும் தகவல்களைப் பொறுத்தது. டேபிள் முழுக்க காலியாக இருந்தால், அனைத்து கட்டங்களும் ஒரே மாதிரியான அளவில் மாற்றி அமைக்கப்படும். அல்லது ஏதேனும் சில கட்டங்களில் மட்டும் தகவல்கள் இருப்பின், அவற்றிற்கேற்ப அனைத்து கட்டங்களும் மாற்றி அமைக்கப்படும். பல வகையான தகவல்களை செல்களில் அமைத்திருந்தால், மவுஸ் உதவியுடன் மேலே குறிப்பிட்ட வசதியைப் பயன்படுத்தலாம். டேபிளின் இடது எல்லைக் கோட்டில் டபுள் கிளிக் செய்திடவும். நெட்டு வரிசை செல்களின் எல்லைக் கோடு தானாக அட்ஜஸ்ட் செய்யப்படும். மேலே தரப்பட்ட வழிகளின் மூலம் செட்டிங்ஸ் ஏற்படுத்திச் செய்திடும்.