இதுவரை, விண்டோஸ் 10 மொபைல் சாதனங்களில் மட்டுமே கிடைத்து வந்த இன்ஸ்டாகிராம் செயலி, தற்போது, விண்டோஸ் 10 பெர்சனல், டேப்ளட் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் கிடைக்கிறது. படங்களை நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் (Instagram)
செயலியினை,
விண்டோஸ் ஸ்டோரிலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைய முகவரி: https://www.microsoft.com/
en-ph/store/p/instagram/9nblggh5l9xt
இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், மேலே குறிப்பிட்டுள்ள சாதனங்களிலிருந்து நேரடியாகப் படங்களை எடுத்து, அவற்றை எடிட் செய்து நண்பர்களுக்கு அனுப்ப முடியும். விண்டோஸ் 10 இயங்கும் மற்ற சாதனங்களில், இந்த கூடுதல் வசதிகள் கிடைக்காது என
மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
அண்மையில், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டாகிராம் செயலி தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை நூறு கோடியைத் தாண்டியது. இதனால், இதே போன்ற எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்பட்ட வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் மெசஞ்சர் செயலிகள் கொண்ட பட்டியலில், இன்ஸ்டாகிராம் செயலியும் இடம் பெற்றுள்ளது. ஒரு மாத காலத்தில் இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளது. சென்ற ஏப்ரல் மாதம் தான், இந்த செயலி, விண்டோஸ் 10 மொபைல் சாதனங்களுக்குக் கிடைத்தது.
புதிய சாதனங்களில், Instagram Stories, Direct, and Explore ஆகிய மற்ற வசதிகளும் கிடைக்கின்றன. மொத்தத்தில் இந்த சாதனங்களில்,
1) படங்களை அப்போதைக்கு அப்போது எடுத்து, எடிட் செய்து பதிந்து பகிர்ந்திடலாம்,
2) நீங்கள் பின்பற்றும் உங்கள் நண்பர்களின் கதைகள் வரிசையாக மேலாகத் தரப்படும்.
3) Instagram Live Tile மூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தற்போது என்ன செய்கின்றனர் என்பதனை அறியலாம்.
4) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அறிவிப்புகள் உங்களுக்கு அனுப்பப்படும்; இதன் மூலம் முக்கியமான மேம்படுத்தல்களை அறிந்து கொள்ளலாம்.
5) Instagram Direct வழியாக, தகவல்கள் திரட்டிகளை ஒருவருடனோ அல்லது பலருடனோ பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் தகவல்களையும், செய்தியாக அனுப்பலாம்.
6) Search, Explore, Profile, and Feed ஆகிய செயல்பாடுகள் தற்போது முழுமையாகக் கிடைக்கின்றன.
மற்ற விண்டோஸ் சாதனங்களில், போட்டோ எடுத்தல், விடியோ பதிவு மற்றும் இவற்றைப் பகிர்ந்து கொள்ளும் வசதிகள் கிடைக்காது. டேப்ளட், பி.சி. மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் மட்டுமே கிடைக்கும்.
வேர்டில் ரூலரும் மெனுவும்
வேர்ட் புரோகிராமில், ரூலர்கள் எனப்படும் இடது மற்றும் மேலாகக் காட்டப்படும் ஓர வரைகோல், நாம் அதில் தயாரிக்கும் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட், கிராபிக்ஸ், டேபிள்கள் மற்றும் பிற சிறப்பு இணைப்புகளைச் சரியான இடத்தில் அமைக்க உதவுகின்றன. நமக்கு டெக்ஸ்ட் அமைக்க நிறைய இடம் வேண்டும் என்றால், இவற்றை மறைத்து வைத்து பயன்படுத்தலாம். பின்னர், தேவைப்படும் வேளையில், மீண்டும் அமைத்துக் கொள்ளலாம். மேலும், மிகச் சிறிய திரை கொண்ட கணினி சாதனங்களில் பணி புரிபவர்கள், நிச்சயம் இந்த ரூலர்களை மறைக்கவே விரும்புவார்கள்.
வேர்ட் செயலியில், ரூலர்கள், Print Layout வியூவில் மட்டுமே காட்டப்படும். எனவே, ரூலர்களை மறைக்கும் முயற்சிகளை எடுக்காமலேயே, ரூலர்கள் காட்டப்படவில்லை என்றால், வியூ டேப் மீது கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் பட்டியலில், Document Views பிரிவில் “Print Layout” பட்டனில், கிளிக் செய்திடவும்.
இந்த வியூ டேப் மூலம், ரூலர்களை மறைக்கவும், காட்டவும் செட் செய்திடலாம். ரூலர்களை மறைத்திட, ரிப்பனில், View அழுத்திப் பின்னர், Show/Hide குரூப்பில் முதலாவதாகக் கிடைக்கும் Ruler என்பதன முன்பாக உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். காட்டப்பட வேண்டும் என்றால், அதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தினால் போதும். ரூலர்கள் மறைந்தால், மேலாகச் சிறிது இடம் கூடுதலாகக் கிடைக்கும்.
ஒரு சிலர், இடது பக்கம் நெட்டு வாக்கில் கிடைக்கும் ரூலரை மட்டும் எடுத்துவிட்டு, மேலாக உள்ள ரூலரை வைத்துக் கொள்ள விரும்புவார்கள். ஏனென்றால், நெட்டு வாக்கில் இடது புறம் உள்ள ரூலரைப் பலரும் அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை. இந்த ரூலர் அமைப்பினை மேற்கொள்ள, ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்திடவும்.
தொடர்ந்து, கிடைக்கும் டயலாக் பாக்ஸில், இடது பக்கம் ‘Advanced’ என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் வலது பிரிவில், ஸ்குரோல் செய்து சென்று, Display என்னும் பிரிவில், “Show vertical ruler in Print Layout view” என்பதைக் காணவும். இதில் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தினால், நெட்டு ரூலர் கிடைக்கும். எடுத்துவிட்டால், அது காட்டப்பட மாட்டாது. தேவையான மாற்றத்தினை ஏற்படுத்தி, ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி வியூ பிரிவில், ரூலர் பெட்டியில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால், மேலாக உள்ள படுக்கை வசமானதாக உள்ள ரூலர் மட்டுமே காட்டப்படும். இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவில்லை என்றால், நெட்டு ரூலர் காட்டபட வேண்டும் என டிக் அடையாளம் ஏற்படுத்தி இருந்தாலும், காட்டப்பட மாட்டாது.
இதே போல ரிப்பன் முழுவதையும் மறைத்து டாகுமெண்ட் அமைக்க கூடுதல் இடம் பெறலாம். இதற்கு, ஏதேனும் ஒரு ரிப்பன் டேப்பில் இருமுறை கிளிக் செய்திடவும். உடன் ரிப்பனில் காட்டப்படும் அனைத்தும் மறைந்து போய், கூடுதலாக, மேலாக இடம் கிடைக்கும். டேப் பெயர்கள் மட்டுமே காட்டப்படும். மீண்டும் இவற்றில் ஒன்றில் இருமுறை கிளிக் செய்தால், ரிப்பன் மெனு அனைத்தும் காட்டப்படும்.
டேப்பில், ஒருமுறை கிளிக் செய்தால் மறையும் மற்றும் காட்டப்படும். ஆனால், கிளிக் செய்து மெனுவினைப் பெற்றவுடன், டெக்ஸ்ட் பகுதியில் கிளிக் செய்தால், உடன் ரிப்பன் மெனு மறைந்துவிடும். தொடர்ந்து காண வேண்டும் என்றால், இருமுறை கிளிக் செய்திட வேண்டும்