ஒரு அலுவலகத்தில் மேனேஜர் என்பவர்தான் முக்கியமானவர். காரணம், அவர்தான் அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு வேலைகளையும், இலக்குகளையும் நிர்ணயிப்பவர். பணியாளர்கள் இலக்குகளை நோக்கிதான் பணிபுரிகிறார்களா எனக் கண்காணிப்பவரும் அவர்தான்.
இத்தனை நாளும் இந்த வேலைகளை எல்லாம் ஒரு மனிதர் செய்துவந்தார். இனி இந்த வேலையை ஒரு சாஃப்ட்வேர் பக்கவாக செய்துதந்துவிடும் என்றால் நம்புவீர்களா? யெஸ், நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். ‘ஸ்லாக்’(slack) என்னும் சாஃப்ட்வேர், மிகப் பெரிய நிறுவனங்களில் பிசினஸ் சொல்யூஷன் சாஃப்ட்வேராக பயன்படுத்தப்படுகிறது. இதனைக்கொண்டு அலுவலக அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.
ஸ்டீவர்ட் பட்டர்ஃபீல்டு என்பவர்தான் ‘ஸ்லாக்’ என்னும் சாஃப்ட்வேரை உருவாக்கியவர். ஆரம்பத்தில் வீடியோ கேம் ஒன்றைத் தயார் செய்து அது தோல்வியில் முடியவே, அதிலிருந்து கற்ற அனுபவத்தில் ஃப்ளிக்கர்(Flickr) எனும் அப்ளிகேஷனை வடிவமைக்க, அதனை யாகூ வாங்கியது. அதன்பின் நான்கு வருடங்களுக்குப் பிறகு அவர் தயாரித்த ஆன்லைன் கேமும் தோல்வியையே தழுவியது. அப்போது உதித்த ஐடியாதான் இந்த ஸ்லாக். இது நிறுவனங்களுக்கு இடையே தொடர்புகொள்ளும் மென்பொருளாக தயாரிக்கப்பட்டது. இதற்கு மிகப் பெரிய அளவில் நிறுவனங்களிடமிருந்து வரவேற்பு கிடைத்தது.
ஸ்லாக் மென்பொருள் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும்? குழுக்களுக்கு இடையேயான கருத்துப் பரிமாற்றம், ஒட்டுமொத்த நிறுவனத்தின் கருத்துப் பரிமாற்றம், வேலைகளை நிர்ணயிப்பது, அதனைக் கண்காணிப்பது, தனிநபர் தகவல் தொடர்பு ஆகியவற்றை இதன் மூலம் செய்ய முடியும்.
ஒட்டுமொத்த நிறுவனத்தின் தகவல் பரிமாற்றத்தில் அதிகப்படியான வெளிப்படைத் தன்மையை இந்த மென்பொருளால் கொண்டுவர முடியும். குழு, ஒரு குறிப்பிட்ட புராஜெக்ட், தனிநபர் என அனைவருக்குமான தகவல்களை அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு ஒரே சேனலில் தெரிவிக்க முடியும்.
உதாரணமாக, ஒரு நிறுவனம் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வருகிறது. அதில் எத்தனை பேர் வேலை செய்ய வேண்டும் என்பதை மனிதவளப் பிரிவுக்கும், எத்தனை பொருட்களை தயாரிக்க வேண்டும் என்பதை உற்பத்திப் பிரிவுக்கும், அவர்களுக்கான ஊதியத்தை அக்கவுன்ட்ஸ் பிரிவுக்கும் எல்லாருக்கும் தெரியும் வகையில் வெளிப்படைத்தன்மையோடு நிர்ணயிக்க முடியும்.
பிரைவேட் சேனல் மூலம் ஒரு நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவை மட்டும் இயக்க முடியும். இதன் மூலம் அந்த பிரிவுக்குள் வெளிப்படைத் தன்மையை அதிகமாக வைத்திருக்க முடியும். இதனை அதே நிறுவனத்தில் உள்ள மற்ற பிரிவு பணியாளர்களால் பார்க்க முடியாது. உதாரணமாக, ஒரு ஆன்லைன் நிறுவனத்தில் அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து எடுக்கும் ஆர்டர்களை டெலிவரி செய்யும் பிரிவுக்கான விவரங்களை, பிரைவேட் சேனல் என்பவர் ஒற்றை க்ளிக் மூலம் அது டெலிவரி செய்யப்பட்டதா, இல்லையா என்பதை தனது நிறுவனத்துக்குத் தெரிவிக்க முடியும்.
இதில் அதிக அளவுள்ள ஃபைல்களை மட்டுமல்ல, அலுவலகம் தொடர்பான விவரங்கள், போட்டோ, வீடியோ என அனைத்துவிதமான ஃபைல்களையும் மற்றவர்களுடன் தனியாகவோ அல்லது மொத்த குழுவுக்கோ அனுப்ப முடியும் அல்லது பெற முடியும். மேலும், ஒருவருக்கு நிறுவனம் தரும் வேலை, அதனை செய்துமுடிக்க வேண்டிய நேரம், அது செய்து முடிக்கப்பட்டு இருக்கும் நிலவரம் ஆகியவற்றை இதன் மூலம் கண்காணிக்கலாம். இத்தனை வசதிகளையும் இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்பது சிறப்பான விஷயம். ஆனால், குறிப்பிட்ட சில மேம்பட்ட சேவைகளை இந்த நிறுவனம், தனிநபருக்கு மாதம் இத்தனை டாலர் என்கிற அடிப்படையில் கட்டணச் சேவைகளாகவும் தருகிறது.
இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 3.8 பில்லியன் டாலர். மேலும், இதில் நாள் ஒன்றுக்கு 2.7 மில்லியன் ஆக்டிவ் பயன் பாட்டாளர்கள் உள்ளனர். அதில் எட்டு லட்சம் பேர் பிரீமியம் பயன்பாட்டாளர்கள். 100 மில்லியன் ஆக்டிவ் பயன்பாட்டாளர்களை எட்டினால் 10 பில்லியன் டாலர் வருவாயை எட்ட முடியும் என இதன் நிறுவனர் ஸ்டீவர்ட் கூறியுள்ளார்.
மாற்றங்களுக்கு உட்படும் நிறுவனங்களில் இதுபோன்ற மென்பொருட்களின் பயன்பாடு பணியாளர்களின் வேலைகளை அப்டேட்-ஆக வைத்திருக்கவும், அவர்களின் பணியை மதிப்பிடவும், தொடர்ந்து வேலைகளை ஆட்டோமேட் செய்யவும் உதவுகிறது.
எப்படிப் பயன்படுத்துவது?
*ஸ்லாக் அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இலவசமாகக் கிடைக்கும்.
*கணினியிலும் இதற்கான சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.
*இதற்கு உங்கள் நிறுவனக் கணக்கி லிருந்து லாக் இன் செய்தால், உங்கள் மின்னஞ்சல் மூலம் உங்கள் கணக்கைத் துவங்கிக்கொள்ள முடியும்.
*உங்கள் நிறுவன அட்மின்,. உங்களுக்குத் தேவை உள்ள சேனலில் உங்களை இணைத்துவிடுவார்.
*அதன்மூலம் உங்களுக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்படும். இதனை சிறு நிறுவனங்கள்கூட பயன்படுத்த முடியும்.
வேர்ட் டிப்ஸ்ஸ
டேபிள் செல்லில் டெக்ஸ்ட்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பல பக்கங்களுடன் தயாரித்திருப்போம். இதில் ஓரிரு டேபிள்களும் இருக்கும். இறுதியில் தான் ஏதேனும் ஒரு டேபிளில் இன்னும் சில சொற்களைச் சேர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த சொல்லை இணைக்கையில், டேபிள் கட்டம் நீண்டு, அனைத்து அமைப்பும் வீணாகும் நிலை ஏற்படலாம். டாகுமெண்ட் அல்லது டேபிள் சற்று கீழாக நீண்டு செல்லும் நிலை ஏற்படலாம். எனவே, செல்லில் டெக்ஸ்ட் அமைக்கையில், அது தானாக அதனுள்ளாகவே சரி செய்திடும் வகையில் இருந்தால், நமக்கு வசதியாக இருக்கும் அல்லவா? இதற்கான வழி ஒன்று வேர்ட் புரோகிராம் தருகிறது. அதனைப் பார்க்கலாம்.
1. நீங்கள் சற்று மாற்றி அமைக்க வேண்டிய நெட்டு வரிசை அல்லது வரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இது நீங்கள் மேலே 1ல் சொல்லப்பட்ட செயலை மேற்கொண்டால் தான் கிடைக்கும்.
3. அடுத்து டேபிள் குரூப்பில் Properties டூல் தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட் Table Properties என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Cell டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இனி Options பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Cell Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
6. அடுத்து Fit Text என்னும் செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
7. தொடர்ந்து இருமுறை ஓகே கிளிக் செய்திடவும். முதலில் Cell Options, அடுத்து Table Properties டயலாக் பாக்ஸ் மூடப்படும்.
இங்கு வேர்ட் எப்படி செயல்படுகிறது? செல்லில் உள்ள சொல்லின் எழுத்தளவைக் குறைத்துக் கொண்டு ஏற்கனவே வடிவமைத்த கட்டத்திற்குள்ளாக அமைக்கிறது. வேர்ட் டெக்ஸ்ட்டின் அகலத்தைக் குறைத்துக் கொள்கிறது. இதனை தொழில் நுட்ப ரீதியாக “scrunching” என்று சொல்வார்கள்.
இலக்கண, சொற்பிழை காட்டாதே: வேர்ட் புரோகிராமில், நாம் டெக்ஸ்ட் டைப் செய்திடும்போதே, அதில் உள்ள எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளைச் சுட்டிக் காட்டும் வசதி தரப்பட்டுள்ளது. நாம் டைப் செய்கையில், இதனால், பிழை உள்ள சொற்களின் கீழாக, பச்சை மற்றும் சிகப்பு வண்ணங்களில் நெளிவான கோடுகள் காட்டப்படும். ஆனால், ஒரு சிலருக்கு இது எரிச்சலைத் தரும். மேலும், தமிழில் டெக்ஸ்ட் டைப் செய்கையில், அவற்றை ஆங்கிலச் சொற்களாக எடுத்துக் கொண்டு, அநேகமாக, பெரும்பாலான சொற்களில் இந்தக் கோடுகள் காட்டப்படும். எனவே, தமிழில் டைப் செய்து டெக்ஸ்ட் அமைப்பவர்களுக்கு, இந்த கோடுகள் அர்த்தமற்றவையாக இருக்கும். இந்த கோடுகள் காட்டப்படுவதை, வேர்ட் செயலி காட்டாமல் இருக்கும்படி அமைத்திடலாம். அதற்குக் கீழே தந்துள்ளபடி செயல்படவும்.
1. ஆபீஸ் பட்டன் அழுத்தி, Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். நீங்கள் வேர்ட் 2010 பயன்படுத்துவதாக இருந்தால், ரிப்பனில் File டேப்பினை அழுத்தி, பின்னர் Options கிளிக் செய்திடவும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் Proofing என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.
3. Mark Grammar Errors As You Type என்ற செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி, சொல் மற்றும் இலக்கண பிழைகள் சுட்டிக் காட்டப்பட மாட்டாது.