டேபிளின் நெட்டு வரிசை நிலை: வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்று தயாரிக்கும் போது, அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை மிகத் துல்லியமாக அமைக்க முடியும். அதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. எந்த நெட்டு வரிசையின் அகலத்தை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் Layout என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. டேபிள் குரூப்பில், Properties என்னும் ஆப்ஷனை கிளிக் செய்திடவும். வேர்ட் டேபிள் ப்ராப்பர்ட்டீஸ் (Table Properties) என்னும் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Column என்னும் டேப் காட்டப்பட வேண்டும்.
5. அடுத்து Preferred Width என்பதைப் பயன்படுத்தி, நெட்டு வரிசையின் அகலத்தை, நீங்கள் எண்ணுகிறபடி அமைக்கவும்.
6. அடுத்த நெட்டு வரிசையினைத் தேர்ந்தெடுக்க, Previous Column அல்லது Next Column பட்டன்களில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.
7. மாற்ற வேண்டிய அனைத்து நெட்டு வரிசைகளிலும் மேற்படி செயல்பாட்டினை மேற்கொள்ள மேலே 5 மற்றும் 6 நிலைகளில் கூறப்பட்டுள்ளவற்றை மேற்கொள்ளவும்.
8. முடித்த பின்னர், ஓகே கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸை மூடவும்.
பார்மட்டிங் மாற்ற: வேர்ட் டெக்ஸ்ட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மற்ற சொற்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட அழுத்தமாக, அடிக்கோடு, சாய்வு மற்றும் வேறு சில பார்மட்களில் அவற்றை அமைத்திருப்போம். அமைத்த பின்னர், இந்த பார்மட்டிங் தேவை இல்லை என எண்ணினால், இவற்றை மொத்தமாக நீக்க வேண்டுமென்றால், இதனைத் தேர்வு செய்து மெனு பார் சென்று ஒவ்வொரு ஐகானாகக் கிளிக் செய்வோம். இதற்குப் பதிலாக இரண்டு ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். பார்மட்டிங் நீக்கி எளிமையான டெக்ஸ்ட் மட்டுமே தேவைப்படும் சொற்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + ஷிப்ட்+இஸட் (Ctrl+Shft+Z)அழுத்துங்கள். மொத்தமாக பார்மட்டிங் அனைத்தும் நீக்கப்படும். வேர்ட் உள்ளாக ResetChar என்ற கட்டளையை அமல்படுத்துகிறது. இதனை கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் அழுத்தியும் மேற்கொள்ளலாம்.
இதே போல ஏதேனும் பாரா பார்மட்டிங் செய்திருந்தால், அந்த பார்மட்டினை நீக்க பாராவினை செலக்ட் செய்து கண்ட்ரோல் + க்யூ (Ctrl+Q) அழுத்துங்கள்.
டெக்ஸ்ட் ஒன்றுக்கு சாதாரண நார்மல் ஸ்டைல் இருந்தால் போதும் என்று எண்ணினால், உடனே அதனைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல்+ஷிப்ட்+என் (Ctrl+Shft+N) அழுத்தவும்.
வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copyp).
Ctrl+d: ஓர் எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட.
எக்ஸெல் டிப்ஸ்ஸ தேதி இடுகை
தேதி இடுகையில் புள்ளிகளைப் பயன்படுத்த: எக்ஸெல் புரோகிராம், மாறா நிலையில், அதில் தேதிகளை இடுகையில் சாய்வான கோட்டினை (/) இடுகிறது. தேதிகள் அதிக எண்ணிக்கையில் நீங்கள் அமைக்க இருந்து, அவற்றில், கோட்டுக்குப் பதிலாக, புள்ளிகள் வரவேண்டும் என விரும்பினால், கீழ்க்கண்டபடி செயல்பட்டு
அமைப்பினை மாற்றலாம்.
முதலில் மாற்ற வேண்டும் என விரும்பும் தேதிகளைக் கொண்ட செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின், அந்த செல்கள் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Format Cells” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பார்மட் செல்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Number” டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். இதில் உள்ள Category பட்டியலில் “Custom” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “m.d.yyyy” (மேற்கோள் குறிகள் இல்லாமல்) என டைப் செய்திடவும். இங்கு “mm.dd.yyyy” என உள்ளீடு செய்தால், ஒற்றை இலக்க தேதி மற்றும் மாதம் வருகையில், அந்த இலக்கத்தின் முன் ஒரு சைபர் சேர்க்கப்படும். (எ.கா. 01.04.2016) இனி, தேதிகள் இடுகையில், சாய்வு கோடுக்குப் பதிலாக, புள்ளிகள் இருப்பதைக் காணலாம். பின் நாளில், இது சரியில்லை, பழைய சாய்வு கோடே இருக்கட்டும் என விரும்பினால், இதே முறையைப் பின்பற்றி, கேடகிரி பட்டியலில், “Date” என்பதனைத் தேர்ந்தெடுத்து, “Type” பட்டியல் பெட்டியில், நீங்கள் விருப்பப்படும் பார்மட்டினைத் தேர்ந்தெடுக்கவும்.
டேட்டாவின் கீழ் அடிக்கோடு: எக்ஸெல் புரோகிராம், செல்களில் அமைக்கப்படும் டேட்டாவின் கீழாகப் பலவகை அடிக்கோடுகளை அமைக்க உதவிடுகிறது. இவற்றைப் பெற்று அமைக்கக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். Format மெனுவில் Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Format Cells என்னும் டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் Font என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் கீழ் இடது பக்கம் Underline என்னும் பாக்ஸ் கிடைக்கும். இதில் காட்டப்பட்டுள்ள பல்வேறு அடிக்கோடுகளிலிருந்து, நீங்கள் விரும்பும் அடிக்கோட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். Underline Type Meaning None என்று சென்றால், செல் ஒன்றில் ஏற்கனவே உள்ள கோடுகள் நீக்கப்படும். Single என்பதனைத் தேர்ந்தெடுத்தால், ஒரு வரிக்கோடு அடிக்கோடாக அமைக்கப்படும். Double என்பது இரண்டு கோடுகளைத் தரும். Single Accounting Same என்பது, கோட்டினைச் சற்றுக் கீழாக அமைக்கும். Double Accounting Same இரட்டைக் கோடுகளைச் சற்றுக் கீழாக இறக்கி அமைக்கும்.
ஒரே டேட்டா – பல செல்கள்: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். பின்னர் டேட்டாவினை ஒரு செல்லில் டைப் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா காப்பி செய்யப் பட்டிருக்கும்.