தகவல் தொழில் நுட்ப பிரிவில், பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தும் நிறுவனமான AV-Test, ஆண்டுக்கு ஒருமுறை, பயன்பாட்டில் உள்ள, இலவச மற்றும் கட்டணம் செலுத்திப் பெறும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை அவற்றின் பயன் மற்றும் அவை தரும் வசதிகளின் அடிப்படையில் பட்டியலிடுகிறது. பொதுவாக, இந்த விஷயத்தில், இது போன்ற சுதந்திரமான ஆய்வு கணிப்புகள் என்ன கூறினாலும், நாம்
தொடர்ந்து பயன்படுத்துவதற்கே முன்னுரிமை கொடுப்போம். இருப்பினும் இந்த கணிப்பு முடிவுகளை அறிந்து கொள்வது நல்லதுதான். நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளினால் சிக்கல்கள் ஏற்படுகையில், இந்த தர வரிசைப் பட்டியலில் முதல் சில இடங்களைப் பெற்றவற்றை நாம் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த தர வரிசைப் பட்டியல் பல பிரிவுகளாகத் தரப்பட்டுள்ளது. பாதுகாப்பு, செயல் திறன், பயன்பாடு, பழுது நீக்கும் தன்மை மற்றும் ஆண்ட்ராய்ட் பாதுகாப்பு என்ற பிரிவுகளில் இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
மிகச் சிறந்த பாதுகாப்பிற்கான விருது: வீடுகள் மற்றும அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில், சிறந்த பாதுகாப்பிற்கான விருதினை செமாண்டெக் (Semantec Norton Security) நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. இதில் இந்நிறுவனத்தின் Symantec Endpoint Protection தொகுப்பு, நிறுவனங்களுக்கான சிறந்த பாதுகாப்பு தரும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தற்போது கம்ப்யூட்டர்களைத் தாக்கி வரும் 1,50,000 வைரஸ் புரோகிராம்கள் மட்டுமின்றி, 1,500க்கும் மேற்பட்ட, ”ஸீரோ டே” தாக்குதலைத் தொடுக்கும் வைரஸ்களுக்கும் எதிராகவும், செமாண்டெக் பாதுகாப்பு அளிக்கிறது. (‘ஸீரோ டே’ தாக்குதல் என்பது, வைரஸ் புரோகிராம் ஒன்று, அது வெளியாகி, அதற்கான எதிர்ப்பு புரோகிராம் தயார்ப்படுத்த எடுத்துக் கொள்ளும் காலத்திற்குள் தாக்குதலைத் தொடுக்கும் கெடுதல் புரோகிராம் ஆகும்). பொதுவாக, ஆண்ட்டி வைரஸ் பிரிவில் இயங்கும் புரோகிராம்கள், இத்தகைய பாதுகாப்பினை சராசரியாக 97.9% அளவில் வழங்கி வருகின்றன. ஆனால், செமாண்டெக் 98.3% அளவிற்கு வழங்கி வருகிறது. அதனாலேயே முதல் இடம் பெற்றுள்ளது.
சிறந்த செயல்திறனுக்கான விருது: பல்வேறு நிறுவனங்கள், நல்ல பாதுகாப்பினைத் தரும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால், பல புரோகிராம்கள், அவை இயங்கும்போது, கம்ப்யூட்டரின் வேகத்தை மட்டுப்படுத்துபவையாக உள்ளன. இங்கு கம்ப்யூட்டர்களில், விளையாட்டுகள் மேற்கொள்கையில், கம்ப்யூட்டர் செயல்பாட்டின் வேகத்தைக் குறிப்பிடவில்லை. வழக்கமாக, கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் சாதாரண பணிகள் தான் குறிப்பிடப்படுகின்றன. இணைய தளங்களைப் பெறுதல், சாப்ட்வேர் புரோகிராம்களைத் தரவிறக்கம் செய்தல், டேட்டா காப்பி செய்தல் மற்றும் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்தல் போன்ற பணிகள் இதில் அடங்கும். இந்தப் பணிகளை மேற்கொள்கையில், கம்ப்யூட்டரின் வேகத்தினை எந்தவிதத்திலும் பாதிக்காத ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் இப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த வகையில் “சிறந்த செயல்திறனுக்காக” மூன்று ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் விருதைப் பெற்றன. நுகர்வோர்களுக்கான செயல்திறன் மிக்க ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களாக, Bitdefender மற்றும் Kaspersky Lab முதல் இடத்தைப் பெற்றுள்ளன. நிறுவனங்களுக்கான செயல் திறன் மிக்க புரோகிராமாக, Bitdefender தேர்ந்தெடுக்கப்பட்டது. வேகத்தின் அடிப்படையில், வீட்டுப் பயன்பாட்டு கம்ப்யூட்டர்களில், Bitdefender Internet Security தொகுப்பு சிறந்த செயல்பாட்டினைக் கொண்டதாக உள்ளது. Kaspersky Internet Security தொகுப்பு சில கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தேவைகளை இழுத்தது. நிறுவனங்கள் பயன்பாட்டினைப் பொறுத்த வரை, Bitdefender Endpoint Security தொகுப்பு முதல் இடத்தைப் பெற்றது. இது அனைத்து ஆறு வகை பரிசோதனைகளிலும் தன் செயல் திறனைக் காட்டியது என்று இதனைச் சோதனை செய்த AV-Test அறிவித்துள்ளது.
சிறந்த பயன்பாட்டுத் தன்மை: நுகர்வோர்கள் பயன்படுத்த எளிதானதாகவும் திறன் மிக்கதாகவும் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இந்த பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றைச் சோதனையிடுகையில், வைரஸ் இல்லாத புரோகிராம்களை, வைரஸ் உள்ள புரோகிராம்களாகக் (false positives) காட்டுதல், கெடுதல் சிறிதும் தராத இணைய தளங்களைத் தடுத்தல் போன்றவற்றை முதன்மைச் சோதனை காரணிகளாகக் கொண்டு சோதனையிடப்பட்டன. ஆயிரக்கணக்கான இணைய தளங்களைப் பார்வையிட்டும், நூற்றுக் கணக்கான புரோகிராம்களைப் பதிந்தும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில், நுகர்வோர்களுக்கானவையாக, Avira AntiVirus Pro மற்றும் Kaspersky Lab Internet Security தொகுப்புகள் முதல் இரு இடங்களைப் பிடித்தன. நிறுவனங்களுக்கான தொகுப்புகளில், Intel Security McAfee Endpoint Security தேர்ந்தெடுக்கப்பட்டது.
பழுது நீக்குவதில் விருது: நம் கம்ப்யூட்டர் ஏதேனும் மால்வேர் புரோகிராம்களின் தாக்குதல்களினால், பிரச்னையச் சந்தித்தால், எந்த ஆண்ட்டி வைரஸ் அதனை விரைவாக நீக்குகிறது? என்ற கேள்விக்கான சிறந்த தீர்வே, இந்த விருதிற்கான ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை உறுதி செய்தது. மேலே குறிப்பிட்ட விருதுகளில், நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் என இரண்டு பிரிவாக, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் பார்க்கப்பட்டன. இந்தப் பிரிவில் அந்தப் பிரிவினை இல்லாமல், மொத்தமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பான தொகுப்பு (“security suite”) மற்றும் (“stand-alone clean-up tool”) என இரண்டு திறன் வகைகளும் சோதனை செய்யப்பட்டன. எட்டு மாத காலத்தில், நூற்றுக் கணக்கான மால்வேர் புரோகிராம்கள் பாதித்த பல பெர்சனல் கம்ப்யூட்டர்கள் சோதனைக்குள்ளாயின. இவற்றில், மேலே சொல்லப்பட்ட இரு திறன் அடிப்படையில், சிறந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பாதுகாப்பான பழுது நீக்கும் தொகுப்பாக Avira AntiVirus Pro புரோகிராமும், இலவசமாக பழுது நீக்கும் சாதனமாக Kaspersky Virus Removal Tool புரோகிராமும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
சிறந்த ஆண்ட்ராய்ட் பாதுகாப்பு: ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள், ஏறத்தாழ கம்ப்யூட்டரின் பணிகள் அனைத்தையும் மேற்கொள்ளும் வகையிலான திறன் கொண்டதாக உள்ளதால், இணையம் நாடும் பெரும்பாலானவர்கள், தங்கள் ஸ்மார்ட் போன் வழியாகவே அதனை மேற்கொள்வதால், ஹேக்கர்கள் தங்கள் வைரஸ்களை போன்களுக்கும் அனுப்பி, தகவல்களைத் திருடுகின்றனர். ஆனால், கம்ப்யூட்டரில் பாதுகாப்பினை ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அளவிற்குத் திட்டமிடும் பயனாளர்கள், தங்கள் போன்களுக்கும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என முனைப்பாகச் செயல்படுவதில்லை.
ஆண்ட்ராய்ட் போன்களைப் பொறுத்தவரை முழுமையான பாதுகாப்பு தரும் வகையில் அமைக்கப்பட்டுத் தரப்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையே AV-Test ஆய்வு செய்தது. இதில், பாதுகாப்பு, பயன்பாடு மற்றும் கூடுதல் வசதிகள் ஆகியவை முதன்மை ஆய்வுக் காரணிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன. அந்த வகையில், அனைத்திலும் சிறப்பாக முதல் இடம் பெற்றது Bitdefender Mobile Security தொகுப்பாகும். தவறாக நல்ல புரோகிராம்களை அல்லது தளங்களை, “மோசமானவை” (false positives) என இந்தத் தொகுப்பு காட்டவில்லை. இந்த புரோகிராம் இயங்கும்போது, கூடுதலாக பேட்டரியின் சக்தியைப் பயன்படுத்தவில்லை. இது தரும் கூடுதல் வசதிகளும், பயனாளர்களுக்கு ஆர்வம் தருபவையாக இருந்தன.
பாதுகாப்பு மட்டும் கருத்தில் கொண்டு பார்க்கையில், Sophos Mobile Security புரோகிராமும் ஆண்ட்ராய்ட் போன்களுக்குச் சிறந்ததாக அமைந்திருந்ததாக AV-Test கூறியுள்ளது. இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் வைரஸ் மற்றும் மால்வேர்களைக் கண்டறிவதில், 100% திறமையுடன் செயல்பட்டது. மிகுந்த அபாயம் கொண்ட வைரஸ்களாக, ஏறத்தாழ 3,000 வைரஸ்களை, ஸ்கேன் செய்து, கண்டறிந்து, நீக்குமாறு இந்த புரோகிராம் செயல்படுத்தப்பட்டது. இந்த வகையில் 18,000 அப்ளிகேஷன்கள் இச் சோதனைக்குள்ளாக்கப் பட்டன. அவை அனைத்திலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, முதல் இடத்தை Sophos Mobile Security பிடித்தது.
மேலே தரப்பட்டுள்ளவற்றில், நீங்கள் உறுதியாக நம்பும் சில ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இல்லாமல் இருக்கலாம். அதனால், இங்கு தரப்பட்டுள்ளவற்றை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம். இருப்பினும், பல்வேறு சோதனைகளை, அறிவியல் ரீதியாகத் தொடர்ந்து சோதனை செய்து, இந்த முடிவுகளும் விருதுகளும் அறிவிக்கப்பட்டன என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.