இணைய வெளியில் பாதுகாப்பு தருவதற்கென ஆய்வு செய்து, தொடர்ந்து வைரஸ்களைக் கண்காணித்து வரும் வல்லுநர்கள், இந்தியாவில் பரவும் ‘டார்க் பாட்’ (Dorkbot) வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன. ஹேக்கர்கள் மற்றும் கம்ப்யூட்டர் இயக்கத்தினைப் பாழ் படுத்தும் செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் CERT-In (Computer Emergency Response Team of India) எனப்படும் அமைப்பு இந்த எச்சரிக்கையினை அளித்துள்ளது.
சமூக இணைய தளங்கள் வழியாகவே இந்த வைரஸ் நம் கம்ப்யூட்டர்களுக்குள் புகுந்துவிடுகிறது. பின்னர், கம்ப்யூட்டரில் உள்ள நம் பெர்சனல் தகவல்கள் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடி அனுப்புகிறது. பாஸ்வேர்ட், பிரவுசர் குறித்த தகவல்கள், குக்கிபைல்கள் ஆகியவற்றைக் கைப்பற்றுவதுடன், கம்ப்யூட்டரின் இயக்கத்தினையே முடக்கிப்போடும் அளவிற்கு இதனிடம் இயக்கச் செயல்முறைக்கான குறியீடுகள் உள்ளன.
இந்த வைரஸ், கம்ப்யூட்டரின் பின்புலங்கள் வழியாக ஊடுறுவும் வகையைச் சேர்ந்தது. நுழைந்த பின்னர், பலவகை செயலிகள் மற்றும் செயல்பாடுகள் வழியாகப் பரவும். தரவிறக்கம் செய்திடுகையில், சமூக வலைத் தளங்களைப் பார்வையிடுகையில், இணைத்து எடுத்துப் பயன்படுத்தும் ட்ரைவ்கள் வழியாக, ஆட்டோ ரன் செயல்பாட்டின் போது எனப் பல வழிகளில் இது பரவுகிறது. ஏறத்தாழ பன்னிரண்டு பெயர்களில் இது உலா வருகிறது. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து தப்பிப்பதற்காக, தன் குறியீட்டு வரிகளை, cmd.exe, ipconfig.exe, regedit.exe, regsvr32.exe, rundll32.exe, verclsid.exe மற்றும் explorer.exe போன்ற பைல்களில் எழுதி வைத்துக் கொள்கிறது.
இது தன் குறியீடுகளை, மேலும் மேலும் எழுதிக் கொண்டு தன் அடையாளத்தினை மறைத்துக் கொள்கிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைச் சேர்ந்த முக்கிய தகவல்களைத் திருடி எடுத்துக் கொள்கிறது.
சமூக வலைத்தளங்களில், குறிப்பிட்ட இணைய தளத்திற்குச் செல்லுமாறு, லிங்க் தரப்படுகிறது. அந்த லிங்க்கில் கிளிக் செய்து, ஏதேனும் ஒரு பைலை ஆர்வம் தூண்டும் வகையில் காட்டி, அதனைத் தரவிறக்கம் செய்திடுமாறு கூறுகிறது. இதில் கிளிக் செய்தவுடன், இந்த வைரஸ் பரவுகிறது.
பெர்சனல் கம்ப்யூட்டரைக் கைப்பற்றிய பின்னர், இதனை அனுப்பியவர்கள், இந்த மால்வேர் புரோகிராமின் மூலம் மேலும் பல கெடுதல் விளைவிக்கும் குறியீடுகளைப் பாதித்த கம்ப்யூட்டர்களில் பதிக்க முடியும். மேலும் ஸ்பேம் மெயில்களையும் அனுப்பும். இது முன்பு வெளியான பாட்நெட் (Botnet) வகை வைரஸ் என அறியப்பட்டுள்ளது.
இதிலிருந்து தப்பிக்க மற்றும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, CERT-In அமைப்பு சில பாதுகாப்பு வழிகளைப் பரிந்துரை செய்துள்ளது. ஏதேனும் புதிய சிஸ்டம் பைல்கள் உருவாக்கப்பட்டிருந்தால், அவற்றைஅழித்தல், ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இணையப் பாதுகாப்பு மற்றும் லேன் அமைப்பு போன்றவற்றிற்கான பாதுகாப்பு அமைப்பினை மேற்கொள்கையில் அவற்றை ‘High’ என அமைக்க வேண்டும். இதனால், active X கண்ட்ரோல்களையும் ஆக்டிவ் ஸ்கிரிப்ட் செயல்பாட்டினையும் தடை செய்திட முடியும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை, இற்றை நாள் வரையில் அப்டேட் செய்திடவும். கூடுமானவரை குரூப் அக்கவுண்ட் போன்றவற்றைத் தடுக்கவும். நம்பிக்கையற்ற அல்லது ஏதேனும் பிரச்னைகள் உள்ளன என்று அறியப்படும் இணைய தளங்களுக்குச் செல்லக் கூடாது. அதே போல, தெரியாதவர்கள் மற்றும் நம்பிக்கையற்றவர்கள் அனுப்பும் இணைப்பு கோப்புகளைத் தரவிறக்கம் செய்வதோ, திறந்து பார்ப்பதோ கூடாது. பாஸ்வேர்ட்களை மற்றவர்கள் எளிதில் அறியா வண்ணம் அமைப்பதுவும், அடிக்கடி மாற்றுவதும் நமக்கு நல்லது.
.vbs, .bat, .exe, .pif and .scr files போன்ற துணைப் பெயர்கள் கொண்ட பைல்கள் வழியாகத்தான் வைரஸ் பரவுகிறது. எனவே, இவற்றை முற்றிலுமாகத் தரவிறக்கம் செய்திடுவதைத் தவிர்க்க வேண்டும்.
விலக்கி எடுத்துப் பயன்படுத்தும் ட்ரைவ்களில், இந்த வைரஸ் RECYCLER என்னும் போல்டரை உருவாக்கி வைத்துக் கொண்டு, தன்னை அதில் காப்பி செய்து கொள்கிறது. பின்னர், வேறு ஒரு கம்ப்யூட்டரில் அதனைப் பயன்படுத்துகையில், அந்த கம்ப்யூட்டரிலும் பரவுகிறது.
இந்த டார்க் பாட் வைரஸ் AUTORUN.INF பைல் ஒன்றையும் பதிக்கிறது. இதன் மூலம் வைரஸ் புரோகிராம் தானாக இயக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த வைரஸ் ஒரு கம்ப்யூட்டரை அடைந்தவுடன், பின்புற வழி ஒன்றைத் திறக்கிறது. அதன் மூலம், இந்த வைரஸ் அனுப்பியவரின் கம்ப்யூட்டருக்கு இணைப்பு கிடைக்க, அத்தனை தகவல்களும், தொலைவில் இருந்தே இயக்கப்பட்டுத் திருடப்படுகின்றன. சில வேளைகளில் கம்ப்யூட்டரே முடக்கப்படுகிறது. நாம் பார்க்கும் இணைய தளங்கள் குறித்த தகவல்களைத் திரட்டுகிறது. இணைய தளங்களுக்கு நாம் செல்கையில் (வங்கி போன்ற முக்கிய நிறுவனத் தளங்கள்) அதற்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடிக் கொள்கிறது. அதே கம்ப்யூட்டரில், மேலும் சில கெடுதல் விளைவிக்கும் வைரஸ் புரோகிராம்களைப் பதிக்கிறது. கம்ப்யூட்டர் பயனாளியின், சமூக இணைய தள அக்கவுண்ட்களைத் திருடி, ஒரிஜினல் அக்கவுண்ட்டினை முடக்கி, அதே போல் இன்னொன்றை உருவாக்கி, மோசமான தகவல்களைப் பதிக்கிறது. பாலியல் செய்திகளையும் படங்களையும் அந்த அக்கவுண்ட் பெயரில் வெளியிடுகிறது.
இது பன்னாட்டளவில் தற்சமயம் பரவி வருவதால், இதனைத் தடுக்கும் முயற்சியில் பன்னாட்டளவில் இணையத்தைக் காக்கும் அமைப்புகள் இறங்கியுள்ளன. Dorkbot வைரஸ் முதலில் 2011 ஆம் ஆண்டில் நுழைந்தது. இணைய வெளியில் குற்றங்கள் மேற்கொள்வதனையே தொழிலாகக் கொண்டிருக்கும் பல அமைப்புகள் (cybercrime forums) இணைந்த மன்றத்தில், இது குற்றங்களை மேற்கொள்வதில் சிறந்த டூல் “NgrBot” என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டது. இந்த தகவல்களை மைக்ரோசாப்ட் தன் தளத்தில் வெளியிட்டுள்ளது.
வேர்ட் டிப்ஸ்ஸ
தலைப்புகளைத் தானாக அமைக்க: நூல்கள் மற்றும் பருவ இதழ்களைத் தயாரிக்கையில், வேர்ட் டாகுமெண்ட்களில், சில குறிப்பிட்ட படங்கள், அட்டவணைகள், டேபிள்கள் ஆகியவற்றிற்கு தலைப்புகள் அமைத்திடுவோம். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட்களில் உள்ள அனைத்து டேபிள்களுக்கும் “Table” எனத் தலைப்பிட்டு, ஒவ்வொன்றையும் “Table1,Table2, Table3”என அமைக்கத் திட்டமிடுவோம்.
வேர்ட் இதனை உணர்ந்து ஒவ்வொருமுறை டேபிள் அமைக்கும் போதும், தானாகவே இந்த தலைப்பினை அமைத்துக் கொள்ளும் வகையில், செட் செய்திடலாம். இதே போல படங்கள் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களை அமைக்கையிலும் இந்த தலைப்புகளைக் கொண்டு வரலாம். இதற்குக் கீழ்க்காணும் முறையில் செட்டிங்ஸ் அமைக்கவும்.
1. டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். கேப்ஷன் டயலாக் பாக்ஸைக் கொண்டு வாருங்கள். இதற்கு, உங்கள் வேர்ட் தொகுப்பு வேர்ட் 2007க்கு முந்தையதாக இருந்தால், Insert அழுத்தி, கிடைக்கும் மெனுவில் Reference>Caption எனத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Caption என்ற சிறிய கட்டம் கிடைக்கும். இதில் நீங்கள் தர விரும்பும் தலைப்பு மற்றும் இந்த தலைப்பு எதற்காக என்பதை டேபிள், படம் மற்றும் வேறு ஆப்ஜெக்ட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2. வேர்ட் 2007 ஆக இருந்தால், ரிப்பனில் References டேப் தேர்ந்தெடுத்து, பின்னர் Captions குரூப்பில் Insert Caption என்பதில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து AutoCaption பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது AutoCaption டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் ஒரு ஆப்ஜெக்ட் பாக்ஸ் கிடைக்கும். எந்தவிதமான ஆப்ஜெக்ட் என்பதனை இதில் தேர்ந்தெடுத்து டிக் மார்க் அமைக்கவும். எடுத்துக் காட்டாக, நீங்கள் அமைக்கும் டேபிள்களுக்கான தலைப்பு அமைக்க விரும்பினால், Microsoft Word Table என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Use Label என்ற கீழ் விரி மெனுவினைப் பயன்படுத்தி, எந்த சொல் டேபிள் அல்லது வேறு ஆப்ஜெக்ட் மேலாகத் தலைப்பாக வர வேண்டுமோ, அந்த சொல்லை டைப் செய்திடவும். இதனை அடுத்து Position என்ற கீழ்விரி மெனுவினைப் பயன்படுத்தி, இந்த தலைப்பு எங்கு வர வேண்டுமோ, அந்த இடத்தினைத் தேர்ந்தெடுக்கவும். இவை எல்லாம் முடிந்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
எண்கள் அமையும் இடைவெளி: வேர்டில் அமைக்கும் டாகுமெண்ட்களில், வரிகளில் வரிசையாக எண்களை அமைப்போம். ஒவ்வொரு வரியிலும், எண்களுக்கும், அடுத்து வரும் டெக்ஸ்ட்டுக்கும் இடையேயான தூரம் நாம் டைப் செய்வதைப் பொறுத்து அமையும். அது போல இல்லாமல், ஒரே மாதிரியாக, இந்த இடைவெளியை அமைக்கலாம். அதற்கான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.
1. ரிப்பனில் Page Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Page Setup குரூப்பில் உள்ள Line Numbers என்னும் டூலில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Line Number Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Page Setup டயலாக் பாக்ஸில் உள்ள Layout டேப்பினைக் காட்டும்.
3. Line Numbers பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது Line Numbers டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
4. அடுத்து From Text என்னும் பாக்ஸில் உள்ள அளவை, நீங்கள் வரிகளில் எந்த அளவிற்கு முன்னதாக எண்கள் இருக்க வேண்டுமோ, அதற்கேற்றார்போல் அதில் தரப்பட்டுள்ள அளவினை அமைக்கவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்து Line Numbers டயலாக் பாக்ஸை மூடவும்.
6. பின்னர், ஓகே கிளிக் செய்து Page Setup டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும். இனி நீங்கள் விரும்பியபடி எண்களை அமைக்கலாம்.
குரோம் பிரவுசர்: சில குறிப்புகள்
இணைய உலா வர பெரும் அளவில் பயன்படுத்தப்படும் பிரவுசர்களில், குரோம் பிரவுசர் முதல் இடம் கொண்டுள்ளது. நம் விருப்பத்திற்கேற்ப அதனை வழி அமைத்துக் கொள்ளும் வசதியே இதற்குக் காரணம். மற்றும் இது தரும் பாதுகாப்பு, நம்மை வழி நடத்தும் இடைமுகம், தொடர்ந்து வழங்கப்படும் புதிய வசதிகள் என இதன் தன்மைகள், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச் செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4ஸ) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் திரையில் கிடைக்கும்.
2. ஸ்பேஸ் பாரினை அழுத்தினால், எந்த இணைய தளத்திலும், தளமானது ஒரு பக்கம் கீழாகச் செல்லும் என்பதனை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே போல, ஷிப்ட் கீ அழுத்தி ஸ்பேஸ் பார் அழுத்தினால், அதே போல பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம்.
3. குரோம், அதன் எக்ஸ்டன்ஷன்களுக்குச் செல்ல ஷார்ட் கட் கீ வழிகளை அமைக்க வசதி தருகிறது. இதற்கு chrome://extensions/ எனச் செல்லவும். கிடைக்கும் பக்கத்தில் கீழாகச் செல்லவும்.இங்கு “Keyboard shortcuts” என்ற இடத்தில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் செயல்பாடுகளுக்கு, ஷார்ட் கட் கீகளை அமைக்கலாம்.
4. சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் பின்னணியில் இயங்கினாலே போதும். எனவே, ஏன் அவை பிரவுசரின் டூல்பாரில், இடம் எடுத்துக் கொண்டு தேவையற்ற வகையில் காட்டப்படுகிறது. இதனைப் போக்க, எந்த எக்ஸ்டன்ஷன் காட்டப்பட வேண்டாம் என்று எண்ணுகிறீர்களோ, அதற்கான ஐகானில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனுவில், “Hide button” என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
5. எந்தவிதமான கவனச் சிதறலும் இல்லாமல், இணையப் பக்கத்தில் உலா வர, F11 என்ற கீயை அழுத்தவும். உடன், குரோம் பிரவுசர் முழு திரையிலும் காட்டப்படும். வழக்கமாகக் காட்டப்படும் பிரவுசர் சார்ந்த ஐகான்கள் மற்றும் பிற வகை தோற்றங்கள் அனைத்தும் மறைக்கப்படும்.
6. நிறைய டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரைப் பயன்படுத்து பவரா நீங்கள்? இவற்றில் சிலவற்றை மறைத்து வைக்க விரும்புகிறீர்களா? பிரவுசரின் முகவரி விண்டோவில், chrome://flags என டைப் செய்திடவும். அங்கு Stacked Tabs என்பதனைத் தேடி அறியவும். அதனை இயக்கும் வகையில் enable செய்திடவும். இதனால், டேப்கள் அனைத்தும் சுருங்கி, சிறியதாகக் காட்சியளிப்பதற்குப் பதிலாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுக் காட்சி அளிக்கும்.
7. எந்த இணைய தளத்தினையும், அதன் காட்சித் தோற்றத்தினைப் பெரிதாக்கிப் (Zoom) பார்க்கலாம். பின் சுருக்கலாம். இதற்கு கண்ட்ரோல் கீ அழுத்திய நிலையில் “+” அல்லது “-” கீயினை அழுத்த வேண்டும். ஸூம் செய்யப்படும் அல்லது ஸூம் செய்த காட்சி சுருக்கப்படும். இதன் மூலம் இணைய தளப் பக்கத்தில் உள்ள எழுத்துக்களும் படங்களும் விரிக்கப்பட்டுக் காட்டப்படும்.
8. கண்ட்ரோல் + ஸீரோ (Ctrl+-0) அழுத்தினால், நீங்கள் ஸும் செய்த ஸ்கிரீன், அல்லது சுருக்கிய திரை பழைய 100% நிலைக்குத் திரும்பும்.
9. நீங்கள் எப்போது விரும்பினாலும், குரோம் பிரவுசரின் தாய் முகப்புப் பக்கத்திற்குச் செல்லலாம். Alt-+Home கீகளை அழுத்திப் பெறலாம். இதற்குப் பதிலாக ஹோம் பட்டன் இருந்தால், அதனை மட்டும் அழுத்திச் செல்லலாம் அல்லவா? இதனைப் பெற, chrome://settings தேர்ந்தெடுத்துச் செல்லவும். அங்கு, “Show Home button” என்று உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, இதற்கான பட்டன் ஒன்று ஸ்கீரினில் காட்டப்படும்.
10. எந்த இணையதளத்திற்குமான ஷார்ட் கட் ஒன்றை, விண்டோஸ் டெஸ்க்டாப்பில் அமைக்கலாம். முகவரி கட்டத்தில் காட்டப்படும் முகவரியினை, மவுஸ் மூலம் அப்படியே இழுத்துச் சென்று, திரையில் அமைத்தால், அது, அந்த இணைய தளத்திற்கான ஷார்ட் கட் கீயாகச் செயல்படும். அப்ளிகேஷன்களுக்கு நாம் ஏற்படுத்தும் ஷார்ட் கட் கீ ஒன்றையும், இணையப் பக்கங்களுக்கு ஏற்படுத்தலாம். பிரவுசரின் மெயின் மெனுவிற்குச் செல்லவும். அங்கு Tools தேர்ந்தெடுக்கவும். இதில் “Create application shortcuts” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, குறிப்பிட்ட பக்கமானது முழுமையாகத் திரை முழுவதும் காட்டப்படும். வழக்கமான பிரவுசர் சார்ந்த எதுவும் காட்டப்பட மாட்டாது.
11. பிரவுசரில் பல இணைய தளங்களைப் பார்த்துத் தேவையான தகவல்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். கம்ப்யூட்டரை நிறுத்தி, வேறு சில வேலைகளை முடித்து மீண்டும் திரும்ப நினைக்கிறீர்கள். பிரவுசரில் பார்த்த அனைத்து தளங்களும் அதன் டேப்களோடு உங்களுக்கு வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கு, chrome://settings செல்லவும். அங்கு, “On startup” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ““Continue where I left off.”” என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து அமைக்கவும். அடுத்த முறை, குரோம் பிரவுசரை இயக்கும்போது, அதற்கு முன் இயக்கியபோது நீங்கள் பார்த்த அனைத்துஇணைய தளங்களுடன், பிரவுசர் திறக்கப்படும்.