அமெரிக்காவில் மூன்று மடங்கு அதிக வேகத்தில் இண்டர்நெட் சேவை வழங்கும் கூகுள்
02 Jan,2016
அமெரிக்காவில் இண்டர்நெட் வழியாக வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகி்றது. கிட்டதட்ட 60 சதவீதம் அளவுக்கு இண்டர்நெட் டிராபிக் இதனாலேயே அங்கு ஏற்படுகிறது. 2019-ம் ஆண்டு இது 80 சதவீதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இண்டர்நெட் பயன்படுத்துபவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மூன்றாண்டுகளில் அமெரிக்காவில் இண்டர்நெட் வேகம் 3 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள 9 முக்கிய பெருநகரங்களில் கூகுள் நிறுவனம் ஒரு நொடிக்கு ஆயிரம் எம்.பி. வேகத்தில் இண்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது. ஏ.டி அண்ட் டி என்ற நிறுவனமும் இதே வேகத்தில் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் வழங்கி வருகிறது. காம்கேஸ்ட் கார்ப், கேபிள் விஷன் சிஸ்டம்ஸ் கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களும் விரைவில் பல இடங்களில் இந்த வேகத்தில் இண்டர்நெட் சேவையை வழங்க உள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவில் சராசரி டவுண்லோடு ஸ்பீடு ஒரு நொடிக்கு 10 எம்.பியில் இருந்து 31 எம்.பியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிவேக இண்டர்நெட் சேவையை வழங்கி வரும் 39 நாடுகளில் 25-வது இடத்தையே அமெரிக்கா பிடித்துள்ளது. பிரான்ஸ், கனடா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவை விட அதிவேக இண்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது.
அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் ஒரு நொடிக்கு 57 எம்.பி. அளவுக்கு சராசரி டவுண்லோடு ஸ்பீடு உள்ளது. குறைந்தபட்சமாக ஓஹியோ, அர்கன்சஸ் ஆகிய இடங்களில் 14 எம்.பி.பி.எஸ் அளவு வேகம் உள்ளது.
உலக அளவில் அதிகபட்சமாக 47.32 எம்.பி.பி.எஸ் அளவுக்கு அதிவேக சராசரி டவுண்லோடு ஸ்பீடை வழங்கி ஐரோப்பிய நாடான லக்சம்பெர்க் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.