ஒர்க் ஷீட்டின் இறுதி வரிசை: எக்ஸெல் தொகுப்பில் Ctrl+End அழுத்துகையில், எக்ஸெல், ஒர்க்ஷீட்டின் கீழாக டேட்டா அமைக்கப்பட்டுள்ள செல்லுக்கு, உங்களை அழைத்துச் செல்லும். இது கீழ் வரிசையில் குறுக்கு வலது நெட்டு வரிசை எனச் சொல்லப்படும். நீங்கள் சில படுக்கை வரிசைகள் அல்லது நெட்டு வரிசைகளை, ஒர்க் ஷீட்டில் நீக்கினால், Ctrl+End கீகள் உங்களை நீக்கியவற்றிற்கு முன்பாகக் கீழாக டேட்டா அமைந்துள்ள வலது ஓர செல்லுக்கு எடுத்துச் செல்லும் என்று தானே எதிர்பார்ப்பீர்கள். அதுதான் இல்லை. ஏற்கனவே ஒரிஜினலாக, இறுதியாக எந்த செல்லுக்குச் சென்றதோ, அந்த செல்லுக்குத் தான் செல்லும்.
எடுத்துக் காட்டாக, நீங்கள் அமைத்த ஒர்க் ஷீட் ஒன்றில் H20 செல் கீழாக, இறுதியானதாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் நீங்கள் மூன்று படுக்கை வரிசைகளையும், ஒரு நெட்டு வரிசையினையும் இடையே நீக்குகிறீர்கள். இப்போது Ctrl+End கீகளை அழுத்தினால், கர்சர் G17 செல்லுக்குத்தானே செல்லும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இல்லை. அதற்குப் பதிலாக H20 என்ற செல்லுக்கே செல்லும். இதற்குக் காரணம் என்னவென்றால், நீங்கள் ஏற்படுத்திய மாற்றம், பைலில் பதியப்படாததே ஆகும். எனவே, மாற்றத்திற்கேற்ற வகையில் இறுதி செல் காட்டப்பட வேண்டும் என்றால், பைலை சேவ் செய்தால் போதும். மாற்றத்தின் அடிப்படையில் கடைசி செல்லைக் காட்டும்.
பல ஒர்க்புக்குகளை உடன் மூடிட: எக்ஸெல் புரோகிராமில் செயலாற்றுகையில், ஒர்க்புக் ஒன்றினை மூடுவதற்குப் பல வழிகளை நாம் பின்பற்றுகிறோம். ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க் புக்குகளை மூடுவதற்கு என்ன செய்கிறோம்? ஒவ்வொன்றாகத்தான் மூடுகிறோம். இதற்கு ஒரு சுருக்கு வழியினை எக்ஸெல் கொண்டுள்ளது.
அது வெளிப்படையாகத் தெரியாததால், நாம் அதனை அறியாமல் இருக்கிறோம். பல ஒர்க்புக்குகளை, ஒரே கீ அழுத்தத்தில் மூட, ஷிப்ட் கீ அழுத்திக் கொண்டு பைல் மெனுவினைத் திறக்கவும். இப்போது Close என்பது Close All எனக் காட்டப்படும். இதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், அனைத்து ஒர்க் புக்குகளும் மூடப்படும். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஷிப்ட் கீ அழுத்திக் கொண்டு பைல் மெனு திறந்தால் தான், Close All என்பது காட்டப்படும். இல்லையேல் அது காட்சி அளிக்காது.
டெக்ஸ்ட் டிசைன்: தாங்கள் அமைத்திடும் ஒர்க் ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு பார்ப்போம்.
எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் செய்வதில் அனைவரும் பொதுவான பிரச்னை ஒன்றைச் சந்திப்பார்கள். செல்களில் உள்ள டேட்டா டெக்ஸ்ட் உள்ள அளவிற்கு அதிகமான இடத்தை எடுத்திருக்காது. இதனால் டேட்டா உள்ள செல்களில் அதிகமான காலி இடம் இருக்கும். இது ஒர்க் ஷீட் டிசைனில் விரும்பாத தோற்றத்தினைத்தரும்.
இந்த பிரச்னையைத் தீர்க்க எக்ஸெல் இரண்டு வழிகளைத் தருகிறது. டெக்ஸ்ட்டை நெட்டுவாக்கில் அமைக்கலாம்; அல்லது சுழற்றி ஒரு கோணத்தில் வைக்கலாம். எந்த செல்களில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்றி அமைத்திட வேண்டுமோ அந்த செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதில் மவுஸ் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும்.
இதில் Format Cells என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பல டேப்களில் அலைன்மெண்ட் என்பதனைத் தேர்ந்தெடுத்தால் நெட்டாக, படுக்கை வசமாக, குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக டெக்ஸ்ட்டை அமைத்திட வழிகள் தரப்பட்டிருக்கும். உங்கள் டிசைன் கற்பனைக்கேற்ப டெக்ஸ்ட்டை அமைத்திட கட்டளை தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது காலி இடம் இல்லாமல் டெக்ஸ்ட் அமைக்கப்பட்டு அழகான தோற்றத்தில் இருக்கும்.
நீளவரியை மடக்கி அமைக்க:
நீளவரியை மடக்கி அமைக்க: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.
இதனால் வலது மார்ஜினில் அழகின்றி ஒரு இடைவெளி ஏற்படும். இரண்டு பக்கமும் அலைன் மெண்ட் எனில், முதல் வரியில் எழுத்துக்களுக்கிடையே அழகற்ற இடைவெளி ஏற்படும். இந்த சிக்கலின்றி அமைக்க வேர்ட் ஓர் ஆப்ஷன் தந்துள்ளது. அதனைத் தேர்ந்தெடுத்து அமைத்துவிட்டால், இணைய முகவரி அல்லது மிக நீளமான சொல் தேவைப்பட்ட இடத்தில் பிரிக்கப்பட்டு அமைக்கப்படும்.
டாகுமெண்ட்டைத் திறந்து கர்சரை எந்த இடத்தில் இணைய முகவரியைப் பிரிக்க வேண்டுமோ, அந்த இடத்தில் கொண்டு செல்லவும். பொதுவாக ஸ்லாஷ் எனப்படும் சாய்வு கோட்டின் அருகே பிரிக்க விரும்புவோம். இந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும். அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Symbols குருப்பில் Symbol என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், More Symbols என்பதைத் தேர்ந்தெடுத்தால், Symbols டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். வேர்ட் 2003ல், Insert மெனுவிலேயே Symbol பிரிவினைப் பெறலாம். இதனை அடுத்து, Special Characters என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில், No -Width Optional Break என்பதில் கிளிக் செய்திடவும்.
இவ்வாறு பிரித்துவிடப்பட்டுள்ளதா என்று நீங்கள் யு.ஆர்.எல். முகவரியை ஸ்கிரீனில் பார்த்து சொல்ல முடியாது. ஆனால் பிரிக்கப்பட்டிருக்கும். இதனைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என எண்ணினால், பாராகிராப் பிரேக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், அனைத்து பாரா மார்க்கர்களுடன், இந்த பிரித்த இடமும் காட்டப்படும். பிரித்த இடத்தில் சிறிய நீள் கட்டம் தெரியும். இணைய முகவரி தான் என்றில்லை. எந்த நீள சொல்லையும் இது போல பிரித்து அமைக்கலாம்.
சுருக்கமாக சில குறிப்புகள்: வேர்ட் டாகுமெண்ட்டில் உடனடியாக ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும்.
ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ஸ்பேஸ் பயன்படுத்துங்கள்.
திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும்.