உங்கள் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட் ஆகியவற்றை அச்சிடும் முன், குறிப்பிட்ட அந்த அச்சு நகல், அவ்வளவு அழகாக இருக்க வேண்டாம்; சாதாரணமாக இருந்தால் போதும்; நம் பைலுக்குத்தான் என்று எண்ணுகிறீர்களா? அப்படியானால், அதனை draft mode ல் அச்சிடவும். இவ்வகை அச்சுப் பிரதி வேகமாக பிரிண்ட் ஆகும். குறைவான இங்க் செலவாகும். இந்த வகை அச்சு நகல் ‘draft’, ‘fast’, ‘eco’ என வெவ்வேறு வகையில் அழைக்கப்படும். உங்கள் பிரிண்டரில் இது என்னவென்று காட்டப்படும்.
* சில டாகுமெண்ட்களில் குறைவான வரிகள் இருக்கலாம்; அல்லது சிறிய அளவில் அச்சிட்டாலும் படிக்கும் வகையில் இருக்கலாம். அப்படிப்பட்ட டாகுமெண்ட்களை அச்சிடுகையில், தாளின் ஒரு பக்கத்தில் இரண்டு பக்கங்களை அச்சிடலாமே!
* கூடுமானவரை உங்கள் டாகுமெண்ட்களில், போட்டோக்கள் மற்றும் பெரிய அளவிலான கிராபிக்ஸ் படங்களைத் தவிர்க்கவும். இதனால் டாகு மெண்ட் பைல் அளவு அதிகரிக்கும். அச்சிடுகையில், இந்த டாகுமெண்ட்டின் பக்கங்களை வடிவமைத்து அச்சிட, பிரிண்டர் அதிக நேரம் எடுக்கும்.
* வண்ணம் கலந்த டாகுமெண்ட் அச்செடுக்கையில், அந்த அச்சுப் பிரதி முடிவானதாக இல்லாமல், சோதனைக்குத்தான் எனில், அதனை black or grayscale என்னும் வகையில் அச்செடுக்கலாம். இதனால், நேரம் மிச்சமாகும். வண்ண மை செலவாகாது. குறிப்பாக லேசர் கலர் பிரிண்டரில் நேரம் அதிக அளவில் குறையும்.
* பிரிண்டர்கள் அச்சிடாத வேளைகளில் sleep modeக்குச் சென்று விடும். உடன் அச்சிட கட்டளை கொடுக்கையில் விரைவாகத் தயாராகிவிடும். இதனையே மின்சக்தியை நிறுத்திவிட்டால், பிரிண்டர் தயாராகும் நேரம் அதிகமாகும். பிரிண்ட் ஹெட் தயார்ப்படுத்தப்பட வேண்டும்; மை தெளிக்கும் சிறிய குழாய் முனைகள் (nozzles) சோதிக்கப்பட வேண்டும்; இவற்றைக் கலவைக்குத் தயார் படுத்த வேண்டும் என்பது போன்ற பல பணி முனைப்புகள் மேற்கொள்ளப்படும். எனவே பிரிண்டர் வேலை செய்யாவிட்டாலும், அதன் மின் சக்தியை நிறுத்தாமல் தயார் நிலையில் வைத்திருக்கலாம். அது தானாகவே sleep modeக்குச் செல்வதால், சிக்கல் இல்லை.
இன்றைய இணைய தளம் – நேஷனல் ஜியாக்ரபிக் இணைய தளம்
நேஷனல் ஜியாக்ரபிக் இதழும், தொலைக்காட்சி சேனல்களும், அவை தரும் அரிய தகவல்களுக்குப் பெயர் பெற்றவை. நாம் எளிதில் காண முடியாத பலவற்றைப் பற்றி தகவல்களைத் தரும் நேஷனல் ஜியாக்ரபிக் நிறுவனம் விலங்குகள் குறித்து தகவல்களைத் தர http://animals.nationalgeographic.com/animals/ என்ற
முகவரியில் ஓர் இணைய தளத்தை இயக்குகிறது. நாம் இதுவரை கேள்விப்படாத விலங்குகள் குறித்தெல்லாம், மிக அருமையான தகவல்களை முழுமையாகத் தருகிறது. இந்த தளம் நம்மை வழி நடத்துவது மிக எளிமையாக உள்ளது. Animals Home, Facts, Photos, Video, Animal Conservation, and Big Cats Initiative எனப் பல பிரிவுகளில், தகவல்கள் கிடைக்கின்றன. மிகப் பெரிய அளவில், விலங்குகளின் பட்டியல் நீள்கிறது. இவை வகைப்படுத்தப்பட்டுள்ளதால், நாம் தேடும் விலங்கு, அல்லது தகவல் சார்ந்த விலங்கினைக் கண்டறிய முடியும்.
பெரியவர்கள் மட்டுமின்றி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விலங்குகள் குறித்து அறிய மிகவும் அரிய தகவல்களைக் கொண்டுள்ள இந்த தளத்தினை அவசியம் காண வேண்டும்.