டேபிள் ஒன்றை வரையலாம்: வழக்கமாக வேர்ட் புரோகிராமில், ரிப்பனில் கிடைக்கும் insert டூலைப் பயன்படுத்தி, நாம் டேபிள் ஒன்றை டாகுமெண்ட்டில் இணைப்போம். இதற்குப் பதிலாக, டேபிள் ஒன்றை நாம் வரையும் வகையில், வேர்ட் draw~-a~-table என்ற டூலைத் தந்துள்ளது. இதனைப் பயன்படுத்தியும் நாம் டேபிள் ஒன்றை உருவாக்கலாம்; அதாவது வரையலாம். அதற்கான வழிகளைப் பார்ப்போம்.
1. ரிப்பனில் Insert டேப்பினை இயக்கவும்.
2. இங்கு Table என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். வேர்ட் இங்கு கீழ்விரி மெனு ஒன்றைக் காட்டுகிறது.
3. இந்த மெனுவில் Draw Table என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் உடனே Print Layout வியூவிற்கு மாறிக் கொள்ளும். உங்கள் மவுஸ் பாய்ண்ட்டரும் ஒரு பென்சில் வடிவத்தில் மாற்றம் பெற்று இருக்கும்.
4. இந்த மவுஸ் பாய்ண்ட்டரைப் பயன்படுத்தி, டேபிளின் வெளிக் கோடுகளை வரையவும். அப்படியே நெட்டுவரிசை மற்றும் படுக்கை வரிசைகளையும் வரையவும்.
5. முடிந்தவுடன் எஸ்கேப் கீயை அழுத்தினால், உடன் பென்சில் மறைந்து வழக்கமான கர்சர் கிடைக்கும்.
பாராவின் அனைத்து டேப்களையும் நீக்க: டாகுமெண்ட் ஒன்றை அமைத்து முடித்த பின்னர், குறிப்பிட்ட ஒரு பாராவில், நீங்கள் உங்கள் வசதிக்காக முன்பு அமைத்த அனைத்து டேப்களையும் மொத்தமாக நீக்க நினைக்கலாம். அல்லது, புதியதாக சில டேப்களை மாற்றி அமைக்க எண்ணலாம். அப்போதும் ஏற்கனவே உள்ள டேப்கள அனைத்தையும் நீக்கினால் மட்டுமே அது எளிதாக முடியும்.
1. எந்த பாராவில் டேப்களை நீக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த பத்தியில் கர்சர் பாய்ண்ட்டரை அமைக்கவும்.
2. ரிப்பனில் ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக் கவும்.
3. Paragraph groupல், வலது கீழாக உள்ள சிறிய ஐகானில் கிளிக் செய்திடவும். வேர்ட் உடனே, Paragraph டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இந்த டயலாக் பாக்ஸில் கீழ் இடது மூலையில் உள்ள Tabs பட்டனில் கிளிக் செய்திடவும்.
5. வேர்ட் இப்போது, Tabs டயலாக் பாக்ஸைக் காட்டும்.
6. தொடர்ந்து Clear All என்பதில் கிளிக் செய்திடவும்.
7. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்ட் அட்டவணை நெட்டு வரிசை அகலம்: வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்று தயாரிக்கும் போது, அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை மிகத் துல்லியமாக அமைக்க முடியும். அதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. எந்த நெட்டு வரிசையின் அகலத்தை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் Layout என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. டேபிள் குரூப்பில், Properties என்னும் ஆப்ஷனை கிளிக் செய்திடவும். வேர்ட் டேபிள் ப்ராப்பர்ட்டீஸ் (Table Properties) என்னும் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Column என்னும் டேப் காட்டப்பட வேண்டும்.
5. அடுத்து Preferred Width என்பதைப் பயன்படுத்தி, நெட்டு வரிசையின் அகலத்தை, நீங்கள் எண்ணுகிறபடி அமைக்கவும்.
6. அடுத்த நெட்டு வரிசையினைத் தேர்ந்தெடுக்க, Previous Column அல்லது Next Column பட்டன்களில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.
7. மாற்ற வேண்டிய அனைத்து நெட்டு வரிசைகளிலும் மேற்படி செயல்பாட்டினை மேற்கொள்ள மேலே 5 மற்றும் 6 நிலைகளில் கூறப்பட்டுள்ளவற்றை மேற்கொள்ளவும்.
8. முடித்த பின்னர், ஓகே கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸை மூடவும்.
எக்ஸெல் டிப்ஸ்ஸவித்தியாசமான ஷார்ட் கட் கீகள்:
வித்தியாசமான ஷார்ட் கட் கீகள்: செல்களில் எண்கள், கரன்சி, நேரம் ஆகியவற்றை அமைக்கையில் மெனு தேடி அவற்றை அமைக்காமல், ஷார்ட் கட் கீகள் மூலம் அமைப்பது எளிமையான ஒன்றாகும். இந்த தேவை எல்லாருக்கும் ஏற்படும். இதற்கென, எக்ஸெல் சில ஷார்ட்கட் கீ வசதிகளைத் தருகிறது. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்.
Ctrl+Shift+~ : பொதுவான பார்மட்
Ctrl+Shift+!: எண்களுக்கான பார்மட்: இரண்டு டெசிமல் இடங்களும், ஆயிரம் தொகைக்கான கமாவும் கிடைக்கும்.
Ctrl+Shift+$ : கரன்சிக்கான பார்மட் கிடைக்கும். இரண்டு டெசிமல் இடங்களும், நெகடிவ் தொகை எனில், அடைப்புக் குறிகளும் கிடைக்கும்.
Ctrl+Shift+#: தேதி அமைப்ப தற்கான பார்மட்
Ctrl+Shift+@ : நேரத்திற்கான பார்மட். நிமிடங்கள் காட்டப்படுவதுடன் முற்பகல் மற்றும் பிற்பகலும் (am/pm)அமைக்கலாம்.
Ctrl+Shift+% : சதவீதத்திற்கான பார்மட். டெசிமல் இடம் கிடைக்காது.
நெட்டுவரிசைகளைப் பிரித்தல்:
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், நெட்டு வரிசை ஒன்றில் பலருடைய பெயர்களை அமைத்திருக்கிறீர்கள். அனைவருக்கும் பெயர் இரண்டு சொற்களாக அமைந்துள்ளன. எனவே இந்த நெட்டு வரிசையை மட்டும் இரண்டாகப் பிரித்து, பெயரில் உள்ள முதல் சொல்லை ஒரு வரிசையிலும், இரண்டாவது பெயரை இரண்டாவது வரிசையிலும் அமைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு ஓர் எளிதான வழி உள்ளது. இந்த வழியைத் தெரியும் முன்னர், நான் பார்முலாவில் ஸ்ட்ரிங் பங்சன் பயன்படுத்தி, நானாகப் பிரித்து அமைத்தேன். இது தேவையே இல்லை. எக்ஸெல் அருமையான வழி ஒன்றைத் தருகிறது.
நெட்டு வரிசை A வில், இந்த இரட்டைச் சொல் பெயர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதனை முதலில் ஹைலைட் செய்திட வேண்டும். அடுத்து Data என்னும் டேப்பிற்கு மாறவும். அங்கு Text to Columns என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது Convert Text to Columns என்னும் விஸார்ட் மேலாகக் கிடைக்கும்.
இதில் Delimited என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது மாறா நிலையில் கிடைக்கும். இதனைக் கிளிக் செய்திடவும். அடுத்து இந்த பெயர்களில் என்ன வகை delimiter வைத்துக் கொள்ளலாம் என்பதனைத் தெரிவிக்க வேண்டும். அடுத்து Next செல்லவும். வேறு delimiter கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் (tab or comma), அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்டதாகக் கூடத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து பார்மட்டினைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிளிக் செய்து முடிக்கவும். இந்த டேட்டாவினை
இன்னொரு வரிசையில் அமைக்க வேண்டும் எனில், Destination என்னும் பீல்டில் அமைக்கவும். இனி தனித்தனியான வரிசையில் அமைந்துவிடும். மேலாகச் சென்று இந்த வரிசைகளுக்கான தலைப்பை மட்டும் நீங்கள் மாற்றி அமைத்தால் போதும்.
ஒரே நேரத்தில் இரண்டு ஒர்க் ஷீட்கள்: பலர், இரண்டு ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து, ஒப்பிட்டுப் பார்த்து தங்கள் பணிகளைத் தொடர விரும்புவார்கள். அல்லது ஒரே ஒர்க் ஷீட்டின் இரு நகல்களைத் திறந்து வைத்துப் பயன்படுத்தும் தேவை ஏற்படலாம். சிலருக்கு, ஒரே ஒர்க் புக்கின், இரு ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்துப் பயன்படுத்தும் நிலை ஏற்படலாம். இதற்கு எக்ஸெல் புரோகிராம் வழி தருகிறது.
ஒரே நேரத்தில், இரண்டு ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்துப் பயன்படுத்தலாம். முதலில் ஒரு ஒர்க்புக்கினைத் திறந்து வைக்கவும். ரிப்பனில் View டேப்பினைப் பெறவும். அடுத்து விண்டோ குரூப்பில் New Window என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் இப்போது அதே ஒர்க் புக்கினை இன்னொன்றாகத் திறக்கும். இன்னும் காணப்படும் ரிப்பனின் வியூ டேப்பில், Arrange All என்ற டூலில் கிளிக் செய்திடவும். இப்போது எந்த வகையில் எக்ஸெல் உங்கள் ஒர்க் ஷீட்களைக் காட்ட வேண்டும் என்பதனை முடிவு செய்து அமைக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் நீங்கள் அமைத்தபடி விண்டோக்களில் ஒர்க் ஷீட்டினைக் காட்டும். ஒவ்வொரு விண்டோவிலும், நீங்கள் விரும்பும் வெவ்வேறு ஒர்க்ஷீட்களை டிஸ்பிளே செய்திடலாம். அவை ஒரே ஒர்க்புக்கின் ஒர்க் ஷீட்டாக இருந்தாலும், அவற்றை அமைக்கலாம். இதே போல எத்தனை விண்டோக்கள் வேண்டுமானாலும் திறந்து ஒர்க் ஷீட்களை அமைக்கலாம்.